Monday 22 June 2020

பப்புவா நியுகினியில் ஒர் தமிழ் அமைச்சர்!

                                                       சசீந்திரன் முத்துவேல்

 பப்புவா நியுகினி என்னும் ஒரு நாடு ஏதோ ஆஸ்திரேலிய-நியுசிலாந்து பக்கம் இருப்பதாகத் தெரியும். அங்கு தமிழர்கள் இல்லை என்பதும் தெரியும்.  தமிழர்கள் இருந்தால் தானே நாம் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோம்! 

மலேசியத் தமிழர் ஒருவர்.  சிலகாலம் அங்குப் போய் வேலை செய்து விட்டுத் திரும்பி வரும்போது அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்தார். அவர் நிறம் - கொஞ்சம் அதிகமாக - நம்மை மாதிரி. அது எப்படி? நான் ஏதோ வெள்ளைக்காரர் தேசம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்! அதுவரை தான் எனக்குத் தெரிந்த பப்புவா நியுகினி!

இப்போது தான் எனக்குத் தெரிய வந்தது: அந்நாட்டில் ஒரு தமிழர், நியு வெஸ்ட் பிரிட்டன்  மாநிலத்தின் ஆளுநராக,  ஆறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். .  இப்போது அவர் மத்திய அரசுத்துறை நிறுவனங்களில் அமைச்சராக இருக்கிறார் என்பது. 

பப்புவா நியுகினியில் 850 க்கும் மேற் பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அதாவது 850  க்கும் மேற்பட்ட வெவ்வேறு பூர்விகக் குடியினர் வாழ்கின்ற தேசம் அது என்பது பொருள்! ஆனாலும் மக்களை இணைக்கும் மொழியாக பிஜின் என்று சொல்லப்படும் மொழி இருப்பதால் அதனை மூன்றே மூன்று மாதத்தில் அவசியத்தின் பேரில் கற்றுக் கொண்டார் சசிந்தீரன்.

சசீந்திரன் தமிழ் நாடு, சிவகாசியைச் சேர்ந்தவர். தமிழ்வழியில் பள்ளிக் கல்வியைக் கற்றவர்.விவசாயத் துறை பட்டதாரி,  ஆங்கில வழியில்.  வேலை தேடி மலேசியா வந்தவர். இங்கு இரண்டு ஆண்டு காலம் தனியார் நிறுவனமொன்றில் பணி புரிந்தார். அதன் பின்னர் 1998 வாக்கில் பப்புவான் நியுகினியில் வாய்ப்பொன்று தேடி வந்தது.  அப்போது அங்கு அவர் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் வணிகத்தை விற்று விட்ட நிலையில் அதே நிறுவனத்தை வாடகைக்கு எடுத்து வணிகத்தில் கால்பதித்தார்.  இது நடந்தது 2000-ம் ஆண்டு. பின்னர் இன்னும் பல நிறுவனங்களையும் புதிதாக அமைத்து வணிகத்தை விரிவு படுத்தினார். இப்போது அவரின் மனைவி சுபா அவரது நிறுவனங்களுக்கு நிர்வாக இயக்குனராக இருந்து பார்த்துக் கொள்கிறார்.

இது தான் நியுகினியில் அவரின் ஆரம்ப காலம்.  அவரை அங்கு வாழ்ந்த பூர்விகக் குடியினர் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் அவரால் அவர்களின் மொழியைப் பேச முடிந்தது. அவர்களது கலாச்சாரம், பழக்க வழக்கங்களைப் பின் பற்ற முடிந்தது. அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குச் சேவையாற்ற முடிந்தது. இவைகள் எல்லாம் அவரின் மேல் அந்த மக்களுக்கு நல்லெண்ணத்தை உருவாக்கியது. 

அந்த காலக் கட்டத்தில் தான் அந்த மக்கள் தேர்தலின் மூலம் அவரைத் தங்களது மாநிலத்தின் ஆளுநராக 2012-ம் ஆண்டும்,  மீண்டும் 2017-ம் ஆண்டும் தெர்ந்தெடுத்தனர்.   பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக  அவர் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக அழைப்பு விடுக்கப்பட்டு அந்தப் பதவியை 2019-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றார். இதுவே பப்புவான் நியுகினியில் அவரது வாழ்க்கையின் சுருக்கம்.

மாண்புமிகு சசிந்தீரன் அவர்களின் மனைவியின் பெயர் சுபா அபர்னா சசிந்தீரன். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகள்.  சுத்த சைவம். வீட்டில் பேசுவது தமிழ் மட்டுமே. வெளியே மற்ற மொழிகள் பேசுகின்றனர்.  சுபா அவர்கள் திருக்குறள் மீது தீராதப் பற்று உடையவர். அதனை அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கவும் அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார்.

குறுகிய காலத்தில், அதுவும் அயல் நாட்டில், தமிழர்களுக்குச் சம்பந்தேமே இல்லாத ஒரு நாட்டில், பெரியதொரு பதவியில் இருப்பவர் தமிழர்களில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்! நமக்கும் மகிழ்ச்சியே!

பெரியதொரு பதவியில் இருக்கும் ஒரு குடும்பம் தமிழ் பேசுவது, சைவத்தைக் கடைப்பிடிப்பது என்பதெல்லாம் நடைமுறையில் பார்ப்பது கொஞ்சம் கடினமே! 

மாண்புமிகு சசிந்தீரன் அவர்கள் இன்னும் பல பெரிய பெரிய பதவிகள் பெற வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment