Thursday 18 June 2020

பொருளாதார வலு ஒன்றே...!

அமெரிக்க தொழிலதிபர், Tel.Ganesan,  அவர் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்கள் நமக்கும் பாடமாக அமைகின்றன.

பொதுவாகவே இப்போது நாம் - கொரோனாவின் தாக்கத்தினால் மிகவும் தளர்ந்து போயிருக்கிறோம். பலரின் வேலை வாய்ப்புக்கள் பறி போயிருக்கின்றன. பல குடும்பங்களின் நிலை பரிதாபத்தின் உச்சத்தில்!

இருந்தாலும் மனம் தளர வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என்று தைரியம் கொள்ளுங்கள். ஒரு வழி தோன்றும்.

தன் சொந்த நாட்டை விட்டு வெளி நாட்டில் போய் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு மனிதரின் நிலை எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதுவும் இனவெறி உள்ள நாட்டில்!

இனி தாங்க முடியாது என்கிற நிலையில் தான் டெல் கணேசன் சொந்தத் தொழிலில் இறங்கினார். அந்தத் தொழிலும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. அங்கும் இனப்பாகுபாடு காட்டப்பட்டது. தொழில் செய்ய உரிமம் கிடைக்கவில்லை. கடைசியில் அவருக்கு இருந்த ஒரே வழி தனது நிறுவனத்தைக் கையகப்படுத்துவது தான்.  அதைத் தான் அவர் செய்தார்.

டெல் கணேசன் பல ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தும் அவருக்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை. பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ மறுக்கப்பட்டன! இந்த சூழலில் நம்மால் செய்ய முடிந்தது ஒன்றே. அடிமையாகவே வாழ வேண்டும் அல்லது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும்.

டெல் கணேசன் சொந்தத் தொழிலில் இறங்கினார். அது தான் நம்மை எல்லா நெருக்கங்களிலும் இருந்தும்  காப்பாற்றும் என்று அவர் புரிந்து கொண்டார்.

டெல் கணேசனின் ஒரு சில வார்த்தைகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. 

"வாழ்க்கையில் வெற்றி பெற எதிர்நீச்சல் போடுவது ஒன்றே,  ஒரே வழி!" என்கிறார். நமக்கும் அது தெரியும்.  ஆனால் அதைச் செயல் படுத்துவது தான் நம்மால் முடியவில்லை! ஒரு சிலர் தான் அந்த முயற்சியில் இறங்குகின்றனர். வெற்றி பெறுகின்றனர்.

அப்படி எதிர்நீச்சல் போட்டு பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற பின்னர் நடப்பது என்ன?

இனவெறி என்பது மறையும். சாதி என்பது மறையும்  மதம் என்பது மறையும்.  பொருளாதார வலு அனைத்தையும் முறியடித்து விடும்! அதனை டெல் கணேசன் முற்றிலுமாக அனுபவித்தவர்.

இதனை நம் நாட்டிலேயே பார்க்கிறோம்.  பொருளாதார வலுவோடு விளங்கும் சீனர்களை எவனாவது வம்புக்கு இழுக்கின்றானா?   நமக்குத் தானே எல்லா அடியும் விழுகிறது! கேவலப்பட்ட வாழ்க்கை வாழும் ஸம்ரி வினோத் நம்மைத் தானே வம்புக்கு இழுக்கிறான்!  சீனர்கள் பக்கம் போக முடியுமா? ஜாகிர் நாயக் என்ன ஆனார் தெரியுந்தானே!

பொருளாதார வலு இல்லாத ஒரு சமுதாயத்தை ஒரு நாய் கூட மதிப்பதில்லை! நமக்குத் தெரியும். நாம் அதனை அனுபவித்து வருகிறவர்கள். 

நாம் இங்கு ஞாபகப்படுத்துவதெல்லாம் ஒன்று தான்.  பெரிய பெரிய தொழிலுக்குப் போக முடியாவிட்டாலும் ஒரு சிறு தொழிலையாவது தொடங்குங்கள்.  பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க முயலுங்கள். பணமே போட வேண்டாம் என்றால் நேரடித் தொழிலில் ஈடுபடுங்கள். 

வெற்றிகரமாக வாழ வழிகள் பல உள்ளன. கொஞ்சம் முயற்சி செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்!

நம் நாட்டிலும் பல டெல் கணேசன்களை நாம் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment