Sunday 21 June 2020

இது சாத்தியமா....?

 பாலர் பள்ளிகள் ஜூலை ஒன்று முதல் திறக்கப்படும் என்கிற அரசாங்க அறிவிப்பை பெற்றோர்கள் வரவேற்கத்தான் செய்வார்கள். 

அந்த அளவுக்கு பெற்றோர்கள் பொறுமை இழந்து நிற்கிறார்கள்! பிள்ளைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை!

ஆனாலும் பெற்றோர்கள், என்ன தான் பொறுமை இழந்துவிட்டாலும், அதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

அரசாங்கம் பாலர் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.  ஆனால் இது எந்த அளவுக்குக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதில் பெற்றோர்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்பத்தான் செய்யும். அந்த வழிகாட்டுதல்கள் என்ன நூறு விழுக்காடு ஏற்றுக்கொள்ளத் தக்கவையா? அப்படி எதுவும் இல்லை!

சிறு குழந்தைகளை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். ஒரு வேளை ஆசிரியர்களால் முடியும்.  அப்படி எவ்வளவு நேரத்திற்கு அவர்களைக் கட்டுபாட்டில் ஆசிரியர்களால் வைத்திருக்க முடியும்? குழந்தைகள்  ஓடி ஆடி விளையாடுபவர்கள். அவர்களை ஒரு வட்டத்தில் நிறுத்தி கொஞ்ச நேரம் விளையாடுவதை நிறுத்தி வைக்கலாம்.  அதிக நேரம் என்பது இயலாத காரியம்.

இருந்தாலும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் என்ன என்பது நமக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை.  நாம் எழுப்புகின்ற கேளவிகளை எல்லாம் அவர்களும் எதிநோக்கியிருப்பார்கள். 

இங்கு மீண்டும் ஒரு கேள்வி.  அரசாங்கத்தின் பாலர் பள்ளிகளைக் கருத்தில் கொண்டு தான் அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருக்கும்.  அங்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் தனியார் பள்ளிகளின் நிலை வேறு. இங்கு இலாபம் தான் முக்கிய குறிக்கோள். அரசாங்ம் சொல்லுகின்ற  வழிகாட்டுதல்களை வைத்து இவர்களால் தொழில் செய்ய முடியுமா?

பாலர் பள்ளிகள் ஆரம்பித்த பின்னர் தான் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். பள்ளிகள் திறந்ததும் பிள்ளைகள் வந்து குவிவார்கள் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. பெற்றோர்கள் அவசரப்பட மாட்டார்கள். முதலில் யார் அனுப்புகிறார்கள் என்று "நீயா நானா?" போட்டிகள் இருக்கத்தான் செய்யும்! 

எப்படி இருந்தாலும் பாலர் பள்ளி மீண்டும் ஆரம்பிப்பது என்பது மிகவும் இக்கட்டான சூழல் தான். இது பிள்ளைகளின் உயிர் சம்பந்தப்பட்டது. விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது!

சாத்தியமா என்று கேட்டால்....?  பதில் சொல்ல முடியவில்லை!

No comments:

Post a Comment