Wednesday 10 June 2020

மகாதிர் நல்லவரா கெட்டவரா?

நாயகன் தமிழ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். பேத்தி தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்பார்: தாத்தா, நீங்கள் நல்லவரா கெட்டவரா? என்று.

மகாதிரைப் பற்றி பேசும் போது அந்த பேத்தி-தாத்தா கேள்வி தான் ஞாபகத்திற்கு வருகிறது!

மகாதிர் இந்த நாட்டின் வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவர். அவர் காலத்தின் தான் நிறைய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தினார். தொழிற்சாலைகளை உருவாக்கினார். மலாய் மக்களின் கல்வி கண்ணைத் திறந்தார். வர்த்தகத்தை செய்யுமாறு ஊக்குவித்தார். பணத்தை வாரி வாரி இறைத்து அவர்களுக்குப் புதிய வழிகளைக் காட்டினார். 

மலாய் மக்களின்அபார முன்னேற்றத்திற்கு அவர் தான் பலமான அடித்தளம் அமைத்தவர். இப்போது அவரை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஆதரவு தெரிப்பவர்களாக இருந்தாலும் சரி அவரால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் கொடுக்கப்பட்ட கல்வியைக் கற்றவர்கள்.  எப்படியோ சலுகைகள் கொடுத்தாவது அவர்களைத் தூக்கி விட்டார்! பதவிகள் கொடுத்து அவர்களைப் பணக்காரர்களாக ஆக்கினார்! என்னன்னவோ! எப்படி எப்படியோ! மலாய் இனத்தவரின் முன்னேற்றத்திற்கு அவரின் பங்கு அளப்பரியது! 

தவறுகள் நிறையவே செய்தார். அந்தத் தவறிலும் பல பணக்காரர்கள் உருவாகினார்கள்! உதாரணத்திற்கு மாஸ் ஏர் விமானம்.  வர்த்தக ரீதீயில் இன்று தலைகுனிந்த நிலையில் இருந்தாலும் அது பல பணக்கரர்களை உருவாக்கியிருக்கிறது!

பல அரசாங்க நிறுவனங்களை தனியார் மயமாக்கினார்.  தனியார் மய மாக்கியதும் அப்படி ஒன்றும் அவைகள் ஜொலித்து விடவில்லை!  ஜொலிக்காது என்பது அவருக்கும் தெரியும்!அதற்கு தலைமை ஏற்றவர்களின் வாழ்க்கை ஜொலித்தது! அது தான் அவரது இலக்கு! அது நிறைவேறிற்று!

இன்று பல மலாய் அரசியவாதிகள் அவரை எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்களால் அதை அரை மனதுடன் தான் செய்ய முடிகிறது! எதிர்ப்புக்கள் எத்தனை இருந்தாலும் ஆதரவும் கணிசமாக இருக்கவே இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சராசரி கிராமத்து மக்கள் அவரை முழு மனதுடன் நம்புகின்றனர். அவர்களின் முன்னேற்றம் எப்படி வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஒரு வேளை ஒரு சில அரசியல்வாதிகள் அவரை எதிர்க்கலாம். ஆனால் அவர் நேரடியாக அவர்களிடம் பேசினால் அவர்கள்  அவர் பக்கம் சாய்ந்து விடுவர்!  அந்த அளவுக்கு அவரின் செல்வாக்கு இன்னும் அவர்களிடையே கொடிகட்டிப் பறக்கிறது என்று சொல்லலாம்!

தம் இனத்தவர் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பைப் போட்டவர். அந்த நன்றிக் கடன் இன்னும் அவர்களிடம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 மிகவும் பிற்போக்குத்தனம் கொண்ட  ஓர் இனத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு வருவது என்பது சாதாரண காரியம் அல்ல.  அதை அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்!

இப்போது அவரிடம் ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கலாம்.  அதற்காக அவர் கெட்டவர் என்கிற முடிவுக்கு வரக் கூடாது!

நல்லவரே!

No comments:

Post a Comment