Tuesday 9 June 2020

கொரோனாவை ஒழித்த முதல் நாடு!


கொரோனா தொற்று நோயை எப்படி ஒழிப்பது என்று இன்றும் நாம் பேசிக் கொண்டும், விவாதம் செய்து கொண்டும் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் "நாங்கள் கொரோனாவை ஒழித்து விட்டோம்!"   என்று ஒரு நாட்டின் பிரதமர் சொன்னால் அதனைக் கேட்க எப்படி இருக்கும்?

வயிற்றெரிச்சலா தான் இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா! அப்படி இருந்தாலும் பரவாயில்லை! இந்தத் தொற்று நோயினால் நாம் படுகின்ற அவதி யாருக்குப் புரிய போகிறது? 

இந்தத்  தொற்று நோயை வைத்து எவ்வளவு கல்லாக்கட்டலாம் என்று அரசியல்வாதிகள் திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நியுசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் "நாங்கள் கொரோனாவை ஒழித்துவிட்டோம்!" என்று மட்டும் சொல்லவில்லை அந்தச் செய்தியைக் கேட்டு துள்ளிக் குதித்து ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டாராம்!

கொரோனாவின் ஆரம்ப காலத்தில் நமக்கு என்ன நேர்ந்ததோ அவை அனைத்தும் நியுசிலாந்து மக்களுக்கும் நேர்ந்தது. அதில் எந்த மாற்றமுமில்லை. 

நம்மைப் போலவே: சமூக இடைவெளியைப் பின் பற்றினார்கள். பொது இடங்களில் கூட்டங்கள் தடை விதிக்கப்பட்டன, ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன, நான்கு கட்டங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன  -  நாம் என்ன என்ன விதிகளைக் கடைப்பிடித்தோமோ அனைத்தையும் நியுசிலாந்து மக்களும் கடைப்பிடித்தார்கள். அந்த அரசாங்கம் கடைப்பிடிக்க வைத்தது.

அதன் எதிரொலி: 1,154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 22 பேர். இப்போது, இன்றைய நிலையில் சுழியம் விழுக்காடு என்கிற நிலைமைக்கு வந்து விட்டது. அரசாங்கம் கடைப்பிடித்த கடுமையான வழிமுறைகள் இப்போது எல்லா நாட்டு மக்களின் பாராட்டுதல்களைப் பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

நியுசிலாந்தின் இன்றைய நிலை என்ன?  கூட்டங்களுக்குத் தடையில்லை. ஊரடங்கு இனி இல்லை. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.  பொது போக்குவரத்துகளுக்குத் தடையில்லை. பள்ளிகள் வழக்கம் போல இயங்கலாம். திருமணங்கள் இனி நடத்தலாம். இறப்புகளுக்குப் போய் வரலாம். எல்லாம் வழக்கம் போல!

ஆனால் நாட்டு மக்களின் நலனை முன்னிட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மக்களுக்கு நன்மை பயக்கும் என்கிறார் பிரதமர்.  வெளி நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் உண்டு.

"கொரோனாவை ஒழித்து விட்டோம் என்றாலும் அத்தோடு அது முடிந்து விடவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்" என்பது தான் நாட்டு மக்களுக்கான அவரின் நினைவுறுத்தல்.

கொரோனாவை ஒழித்து விட்ட முதல் நாடு நியுசிலாந்து! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment