Monday 29 June 2020

இந்திரா காந்தி இன்னும் காத்திருக்க வேண்டுமா?


எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு.  

ஆனால் இந்திரா காந்தியின் வேதனைக்கு எந்த எல்லையும் இல்லை. சட்டத்தை மதிக்காத முன்னாள் கணவன். அந்தக் கணவனை தற்காக்கும் அதிகார வர்க்கம். 

சட்டம் அனைத்தும் இந்திரா காந்திக்குச் சாதகமாக இருக்கிறது. இருந்தும் என்ன பயன்?  சட்டத்தை மீறும் அந்தக் கணவனை காவல் துறையால் கைது செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன!

"இதோ! அதோ!" என்று தான் காவல்துறையால் சொல்ல முடிகிறதே தவிர சட்டத்திற்கு முன் அந்தக் கணவரைக் கைது செய்து கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை!  அரசியல்வாதிகளின் சட்டம் காவல்துறையை விட வலிமை வாய்ந்ததாக இருக்கிறது!

நாட்டு அரசியலில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.   புதிய பிரதமர்கள் வந்து போய்விட்டனர். ஆனால் அவர்கள் நல்ல பிள்ளைகளாகவே நடந்து கொள்ளுகின்றனர்.  அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதாம். அது காவல்துறையின் கையில் உள்ளதாம்!   அந்த அளவுக்கு காவல்துறையினருக்குச் சுதந்திரம் உள்ளதாம்!

எப்போதும் போல காதில் பூ சுற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரிகிறது/ ஆனால் நமது கையில் அதிகாரம் இல்லையே!  தெரிந்து என்ன செய்வது? அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் நாம் வாய்ப்பொத்தி மௌனியாகத் தான் இருக்க வேண்டியுள்ளது!

இந்திரா காந்திக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?  போகிற போக்கைப் பார்த்தால் இதனை அவர்கள் இழுத்துக் கொண்டே போவார்கள் போல் தெரிகிறது.

ஒன்றைச் சொல்லலாம்.  இந்திரா காந்தியின் மகள், குழந்தையிலேயே  அப்பனால் கடத்திக் கொண்டு போகப்பட்ட அவரது மகள்,  மகளுக்குத் திருமணம் நடந்த பிறகுதான் அம்மாவின் கண்ணில் அகப்படுவார் என ஓரளவு ஊகிக்கலாம்! அந்த அளவுக்கு அப்பனுக்குப் பயம் இருக்கிறதே அது போதும்!  

கோழையாகவே வாழட்டும்! கோழையாகவே நாள்களைக் கடத்தட்டும்! கோழையாகவே பல முறை சாகட்டும்!

அது தான் அப்பனுக்குத் தண்டனை! வேறு எதுவும் நல்லதாய் சொல்ல ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment