Monday 8 June 2020

சுகு-பவித்ரா சமையல் தம்பதியர்


சமீபகாலத்தில் காணொளிகளில் எதிர்பாராத வகையில் தீடீரெனப் புகழ் பெற்ற ஒருவர் என்றால் அது பவித்ராவும் அவரது கணவர் சுகுவும் தான். 

அவருக்கு யூடீயுப் என்றால் என்னவென்று தெரியாது. இருவருமே கணினி அறிவு இல்லாதவர்கள். பவித்ரா கல்வி அறிவு இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 5ஏ க்கள் பெற்றவர். தமிழ்ப்பள்ளியில் படித்தவர். ஏனோ அவர் கல்வியைத் தொடரவில்லை.

இன்னும் ஒரு சில மாதங்களில் கணினியைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பார் என நம்ப இடமிருக்கிறது.

அவர் மலாய் மொழி பேசுவதில் வல்லவர் என்பது தான் அவரைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது!  சும்மா தூக்கவில்லை. உலக அளவில் தூக்கி நிறுத்தியிருக்கிறது! மலாய் மக்களிடமிருந்து பேராதரவைப் பெற்றிருக்கிறது அவரது யூடீயுப் சமையல்கள்.  இந்தியர்களின் சமையல் கலையை மலாய் மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.

இவர்கள் சுங்கை சிப்புட் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வசிக்கிறார்கள். கணவர் மட்டுமே தோட்டத்தில் வேலை செய்கிறார்.  இரண்டு குழந்தைகள்.  பார்ப்பதற்கு ஆளில்லை.  ஒருவர் மட்டுமே சம்பாதித்து கட்டுப்படியாகவில்லை.

இந்த நேரத்தில் பவித்ராவின் இந்தோனேசிய பெண் நண்பர் ஒருவர் அவரை யூடீயுப்பில் இந்திய சமையல் கலையை ஒளிபரப்ப ஆலோசனைக் கூறியிருக்கிறார். 

அந்த இந்தோனேசிய பெண் நண்பரே அவருக்கு யூடீயூபையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். சமைப்பதற்கு என்று எந்த விசேஷமான சமையல் பாத்திரங்கள் எதுவும் இல்லை. வீட்டில் இருக்கும் பாத்திரங்களை வைத்தே முதல் சமையல் காணொளியில்  வெளியானது. ஒன்று, இரண்டு, மூன்று வருமுன்னரே எக்கச்சக்கமான பார்வையாளர்கள்!  அத்தோடு கருத்துக் குவியல்கள்! பெரும்பாலும் மலாய் மக்களிடமிருந்து!

தடுமாறினாலும் நிலைத்து நிற்பதற்கு அது துணிவைக் கொடுத்தது! 

இத்தம்பதியினருக்கு சமையல் என்பது இரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களிடமிருந்த அந்தத் திறமை அவர்களுக்கே தெரியவில்லை.  ஓர் இந்தோனேசிய பெண்ணுக்கு அது தெரிந்திருக்கிறது! அவர் தான் பவித்ராவின் திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

இப்படித் தான் நம்மில் பலர் இலை மறை காயாக இருக்கிறோம். சுடர் விளக்காயினும் ஒரு தூண்டுகோல் தேவை.  

என்ன சொல்ல வருகிறோம்?  நம்மில் யாரேனும் ஏதோ ஒரு திறனைக் கொண்டிருந்தால் அதனைக் வெளிக்கொணர நாம் தயாராக இருக்க வேண்டும்!

சுகு பவித்ரா தம்பதியர் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment