Thursday 25 June 2020

முகைதீனுடன் சேரமாட்டேன்!

முன்னாள் பிரதமர் டாக்டர் மாகாதிர்,  தனது வலைப்பக்கத்தில், இந்நாள் பிரதமர் முகைதீன் யாசினுடின்  சேர்ந்து தான் பணியாற்ற முடியாது என்பதாகக் கூறியிருக்கிறார். 

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! 

முகைதீன் யாசின், தனது பங்காளிகளாக, யாரை நாம் திருட்டுக் கூட்டம் என்று கூறி சென்ற 14-வது தேர்தலில் ஆட்சிக்கு வர இயலாதவாறு தடையாக இருந்தோமோ, அவர்கள் அனைவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு புரட்டும் புரளியும் பண்ணியவர்களைப் புண்ணியவான்களாகவும், புனிதமானவர்களாகவும் மாற்றிவிட்டார்! மிகப் பெரிய சோகம்!

இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் என்பதாக சென்ற தேர்தலின் போது அவர்களைப் பற்றி தண்டோரா போட்டவர் முகைதீன் யாசின்! 

இரண்டே ஆண்டுகளில் அத்தனை பேரும், அவர் கைக்கு வந்தவுடன், அனைவரும் அவதாரப் புருஷர்களாக மாறிவிட்டார்கள்!

ஆனால் டாக்டர் மகாதிர் அவர்கள் என்ன தான் காரண காரியங்களைச் சொன்னாலும் இவ்வளவு நடந்ததற்குக் காராணம் அவர் தான் என்பதை அவர் மறக்கலாம்! நாம் மறக்க மாட்டோம்!

நல்லதொரு அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவர்,  கூட இருந்தவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் ஆடிவிட்டார்! அதனால் இன்று தறிகெட்டத் தனமாக, தான் தோன்றித்தனமாக,  அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! 

"சீக்கிரம் 15-வது தேர்தலை நடத்துங்கள்!" என்று அம்னோ கட்சியினர் பிரதமர் முகைதீனை  "வா! வா!" என்று வற்புறுத்துகிறார்கள்! அவர்களுக்கு இது நல்ல நேரம் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள்!  ஆனால் தேர்தல் வைப்பதால் எத்தனை கோடி வீணடிக்கப்படுகிறது என்று நாம் கணக்குப் போடுகிறோம்! கொள்ளயடிப்பவர்களுக்கு "நாட்டுப்பற்று, இனப்பற்று, கடவுள் பற்று" என்றெல்லாம் ஒன்றுமில்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் பிரதமர் முகைதீன் இந்தத் தவணை முடியும் வரை நான் தான் பிரதமர் என்று கணக்குப் போடுகிறார்!

அது சரி என்றே நான் சொல்லுவேன்.  எப்படியோ பதவிக்கு வந்து விட்டார் இந்தத் தவணையை முடிக்கட்டுமே! நல்லது நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை!ஆனால் ஒரு நிலையான அரசாங்கம் செயல்படுகிறதே என்று நிம்மதி கொள்ளலாம்!

எல்லாவற்றையும் இழந்த பின்னர் டாக்டர் மகாதிர் புலம்புவதில் அர்த்தமில்லை!

No comments:

Post a Comment