Tuesday 23 June 2020

சுகுபவித்ரா நாட்டின் ஒற்றுமையின் சின்னம்!

                                                 Sugu Pavithra  You-tube sensation

இந்திய சமையல் உலகில் தீடீரென கால் பதித்தவர் சுகு பவித்ரா தம்பதியினர். 

எந்த  வித முன் தயாரிப்பும் இல்லை.  என்ன கையில் இருந்ததோ அதனை வைத்து ஆரம்பித்து,  காணொளிகளில் பதிவேற்ற,  ஒரு சில நாள்களில் உலகளவில் பிரபலமடைந்தார் பவித்ரா. 

அவருக்கு அதிகமான ஆதரவு மலாய் மக்களிடமிருந்தே வந்தது. அதற்குக் காரணம் அவர் பேசிய சரளமான மலாய் மொழி நடையும் அவருடைய இந்திய சமையலும் அவர்களுக்குப் புதுமையாக இருந்தன. இந்திய சமையலை மலாய் மக்களிடம் கொண்டு சேர்க்க இதுவரை யாரும் முயற்சி செய்ததில்லை. அதனைச் செய்தவர் பவித்ரா.

இப்போது அவரது வீட்டுக்கு நிறைய பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியினர், பொது மக்கள் என படையெடுப்பதால் அவர் வசித்து வந்த தோட்டத்தை விட்டு வேறு இடத்தில் குடியேறி விட்டார்! இப்போது முழு நேரமாகவே யூடியூபில் கவனம் செலுத்தகிறார் பவித்ரா. அவருக்கு சுமார் 7,00,000 பார்வையாளர்கள் உள்ளனர். அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்னர் நாட்டின் பிரதமர் முகைதீன் யாசினுடன்   காணொளிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இப்போது அவரது புகைப்படம்,  ஒப்பனைக் கலைஞர் ராஸ்ஸி மூசாவால் எடுக்கப்பட்டு, அதனை அவர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் "பெபாத்துங்" என்னும் மலாய் மாத இதழில் முகப்பு அட்டையாக வெளி வந்திருக்கிறது.  இனி உலக இதழ்களில் வரக்கூடிய வாய்ப்பும் வரலாம்! எதுவும் கணிக்க முடியவில்லை!

இந்நேரத்தில் நமது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.  அவர்கள் மீது நமக்குப் பொறாமை வேண்டாம். ஏன், எதனால், எப்படி முடியும் என்பன போன்ற கேள்விகள் நமக்குத் தேவை இல்லாத ஒன்று.

அவர்கள் நம்மில் ஒருவர்.  நமது தமிழ்க் குடும்பம். ஒரு தமிழ்க் குடும்பம் முன்னேறும் போது நாம் பெருமைப்பட வேண்டும். வாழ்த்த வேண்டும். ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு நாமே தடையாக இருக்க வேண்டாம். காலங்காலமாக அப்படியிருந்தால் இப்போது நம்மை மாற்றிக்கொள்வோம்!

போகப் போக அவர்கள்,  புகழின் வெளிச்சம் எப்படிப்பட்டது,  என்பதை அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ளுவார்கள். அனுபவம் தான் எல்லாருக்கும் மேலான ஆசான். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல்கள் கிடைக்கும்.  இறைவன் அவர்களுக்கு வழிகாட்டுவார் என நம்புவோம்.

இத்தம்பதியினர் சிறப்பான, வெற்றிகரமான வாழ்க்கை வாழ நாம் வாழ்த்துவோம்!

நாட்டின் ஒற்றுமையின் சின்னம் என நாமும் அவர்களைப் போற்றுவோம்!

No comments:

Post a Comment