கொரோனா தொற்று நோயினால் நிறைய பாதிப்புகள் ஏறபட்டிருக்கின்றன.
அதுவும் சிறு தொழில் செய்கின்ற நமது இந்திய சமூகத்தினருக்கு பெரிய பாதிப்புகள்.
மிக முக்கியமானது உணவகங்கள். பெரும்பாலும் வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை அமர்த்தியிருக்கும் இந்த உணவகங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள்.
அதே போல முடிவெட்டும் தொழில்களிலும் இதே நிலை தான். இங்கும் வெளி நாட்டுத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ஐந்து ஆறு கடைகளை நடத்துபவர்கள் பலர் உண்டு. அதே போல ஒப்பனை செய்யும் தொழிலில் உள்ள நமது பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு நடைபாதைகளில் காலை நேரப் பசியாறல்கள் செய்யும் நமது பெண்கள். அல்லது லாரி ஓட்டுநர்களுக்காக இரவு நேர உணவுகளைத் தயார் செய்யும் பெண்கள்.
இன்னொரு பிரச்சனையும் சிறிய தொழில் செய்பவர்களுக்கு உண்டு. அது தான் கடை வாடகை. கட்டடத்தை வாடகைக்கு விட்டிருக்கும் முதலாளிகள் யாரும் வாடகை வேண்டாம் என்று சொல்லுவதில்லை! அவர்களாலும் என்ன செய்ய முடியும்? வங்கிகளுக்குப் பணம் கட்ட வேண்டும்! அவர்களுக்கு அவர்களின் பிரச்சனை!
இப்போது உள்ள பிரச்சனை வியாபாரத்தில் உள்ள அனைவருக்குமே உண்டு. நாம் அனைவருமே எதிர் நோக்குகின்ற பிரச்சனை தான்.
அதனால் தொழிலை மூடிவிட்டு நாங்கள் போய்விடுவோம் என்று பேசுவது சரியாக இருக்காது. அப்படி ஓர் எண்ணம் வருவதே சரியில்லை. இத்தனை ஆண்டுகள் ஒரு தொழிலைச் செய்துவிட்டு இப்போது நாங்கள் மூடிவிட்டுப் போய் விடுவோம் என்று சொல்லுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை!
அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் நீங்கள் செய்த உங்கள் தொழிலில் ஒன்றுமே சம்பாதிக்கவில்லையா? என்கிற கேள்வி எழுகிறது! சம்பாதிக்காத தொழிலில் தான் நீங்கள் கார் வாங்கினீர்கள், வீடு வாங்கினீர்கள், பிள்ளைகளைப் பட்டதாரிகள் ஆக்கினீர்கள் - இப்போது என்ன நடந்து விட்டது? கொஞ்சம் அல்லது அதிகமாகவே பொருளாதார நெருக்கடி, அவ்வளவு தான்! தீர்வு காண வேண்டுமே தவிர "ஓடிவிடுவேன்" என்று பயமுறுத்தக் கூடாது! ஒரு சீனன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரவே வராது! அது தான் அவனது குணம்! போராட்டக் குணம்! போராடி வெற்றிப் பெற வேண்டும் என்கிற குணம்!
அதனால் நீங்கள் அரசாங்கத்தின் மூலம் பேச்சு வார்த்தைகள் நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
ஒரு தொழிலைத் தொடங்கும் போது, ஆரம்பக் காலத்தில், ஏற்பட்ட பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடிகள் அதைவிடவா இப்போது பெரிய நெருக்கடியைச் சந்திக்கிறோம்?
இதெல்லாம் தொழிலில் நாம் சந்திக்கும் இன்றியமையாத ஒரு நிகழ்வு. சந்திக்கத்தான் வேண்டும்.
அதனால் எத்தனையோ ஆண்டுகள் தொழிலில் இருந்துவிட்டு, நெளிவு சுளிவுகளை அறிந்துவிட்டு இப்போது "வேண்டாம் சாமி" என்று சரணடைந்து விடக் கூடாது.
எதிர்த்து நிற்க வேண்டும். எப்போதோ காலை முன் வைத்து விட்டோம். இப்போதா பின் வாங்குவது? வாங்கவே வாங்காதீர்கள்!
முன் வைத்த காலை பின் வாங்குவதில்லை! என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்!
வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
No comments:
Post a Comment