Thursday 4 June 2020

குடிகார ஓட்டுநர்கள்!

இப்போது குடித்துவிட்டு கார்களை ஓட்டுவது, லோரிகளை ஓட்டுவது என்பது மிகவும் சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது!

கூர்ந்து கவனித்தால் இருக்கின்ற சட்டதிட்டங்கள் போதுமானதாக அல்லது பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. போதுமானதாக இருந்தால் இந்த அளவுக்கு குடிகார ஓட்டுநர்களால் ஏற்படுத்தப்படுகின்ற விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

நடைபாதை ஓரங்களில் உள்ள அங்காடிக் கடைகள், காவல்துறையினரின் சாலை தடுப்புக்கள், ஏன்? சரியான நேர் பாதைகளில் கூட பல விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த விபத்துக்களுக்குக் காரணமானோர் பெரும்பாலோர் குடித்து விட்டு கார்களை ஓட்டுபவர்கள் தான்!

ஏன் குடிகாரர்களால் ஏற்படுத்தப்படும் இந்த விபத்துக்களை நம்மால் குறைக்க முடியவில்லை? நம்மிடம் உள்ள குறைபாடான சட்டங்கள் தான்  இந்த விபத்துக்களைக் குறைக்க முடியாமல் செய்கின்றன.

கடுமையான சட்ட திட்டங்கள் இன்றி இதனைக் குறைக்க வழி இல்லை. ஒரு சில நாடுகளில் இது போன்ற விபத்துக்கள் முற்றிலுமாக - அல்லது தொண்ணுறு விழுக்காடு - ஒழித்துக் கட்டப்பட்டு விட்டன என்றும் கூறப்படுகின்றது.

குறிப்பாக சுவீடன் நாட்டில் மிகக் கடுமையான தண்டனையின் மூலம் விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக ஓர் அபராதத் தொகையைக் கட்ட வேண்டி வரும்.  அல்லது சிறை தண்டனையாகக் கூட இருக்கலாம். ஆனால் சுவீடன் நாட்டிலும் பணம் தான் அபராதத் தண்டனை என்றாலும் அது ஓரு குறிப்பிட்ட தொகை அல்ல. விபத்தை ஏற்படுத்திய  அந்த ஓட்டுநரின் வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அது பொறுத்திருக்கிறதாம்!   ஆமாம்,  கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை யார் தான் இழக்க விரும்பவர்? இதன் வழி விபத்துக்கள் வெகுவாக குறைந்து விட்டனவாம்!

எது எப்படி இருந்தாலும் விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். அதுவும் குடிகாரர்கள் மூலம் வருகின்ற விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். இவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற விபத்துக்கள் மூலம் மரணம் ஏற்பட்டால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்.

நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. ஆனால் அது போதுமானதாகத் தெரியவில்லை. அதையெல்லாம் யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை! அப்படியென்றால் சட்டத்தை யாரும் மதிக்கவில்லை என்பது தானே அர்த்தம்!  அபராதம், சிறை தண்டனையோடு பிரம்படியும் சேர்த்துக் கொள்ளலாம்!

நமது பணக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக அல்லது அரசியல்வாதிகளைக் காப்பாறுவதற்காக அல்லது பெரிய  மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டு வர தயங்குகிறோம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

நாம் யாரையோ காப்பாற்றுவதற்காக இன்னும் இன்னும் குடிகாரர்களை அதிகமாக உருவாக்குகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த காரணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.  இதன் மூல விபத்துக்களையும் அதிகப்படுத்துகிறோம்!

குடிகாரனாய் பார்த்து திருந்தால் விட்டால் குடியை ஒழிக்க முடியாது! விபத்தையும் ஒழிக்க முடியாது!

No comments:

Post a Comment