நம் நாட்டின் மேலவையில் எத்தனையோ இந்திய செனட்டர்களைப் பார்த்து விட்டோம்.
மேலவையின் தலைவராகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனையும் பார்த்துவிட்டோம்.
எல்லா செனட்டர்களுமே ம.இ.கா. சார்ந்தவர்களாகவோ அல்லது அக்கட்சியின் ஆதரவாளர்களாகவோ, தேசிய முன்னணியைச் சார்ந்தவர்களாகவோ இதுவரை நடப்பில் இருந்தது சூழல்.
ஆனால் இப்போது தான் மேல்சபையின் சரித்திரத்தில் ஒர் அதிசயம் நடந்திருக்கிறது. அதாவது பாஸ் கட்சியின் சார்பில் - அதாவது இந்தியர்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் என்று நினைத்தோமே - அந்தக் கட்சியின் சார்பில் ஓர் இந்தியர் செனட்டராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்!
அவர் தான் பாலசுப்ரமணியம் த/பெ நாச்சியப்பன். பாஸ் கட்சியின் புதிய இந்திய செனட்டர்.
இந்த நியமனம் பராட்டுக்குரியது. எதிர்பாராத இடத்திலிருந்து இந்த நியமனம் வந்திருக்கிறது.
பாஸ் கட்சியைப் பற்றி எந்தக் காலத்திலும் நமக்கு நல்ல எண்ணம் இருந்ததில்லை. குறிப்பாக சமயம் என்று வரும் போது எப்போதுமே எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள். நம்மையெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லுபவர்கள். நாங்கள் சொல்லுவதைத் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஆதிக்க மனப்பான்மையோடு பேசுபவர்கள்.
இன்று ஜாகிர் நாயக், ஸ்ம்ரி வினோத் போன்றவர்கள் தறிகெட்டுப் பேசுகிறார்கள் என்றால் அதற்கு இவர்களே காரணம்!
இது கடந்த காலம். மறந்து விடுவோம். இப்போது பாஸ் கட்சி ஆளுகின்ற கட்சியாக மாறி வருகிறது. இன்றைய அரசாங்கத்தில் அவர்களின் பலம் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
தங்களது அதிகாரம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. அதே சமயத்தில் அதிகாரமும் தங்களது கைக்கு வர வேண்டும் என்கிற திட்டமும் அவர்களிடம் உண்டு.
அதன் விளைவு தான் ஓர் இந்தியருக்கு இந்த செனட்டர் பதவி. பாராட்டுகிறோம்! பாராட்டுதல் வழக்கம் போல! அவ்வளவுதான்.
அந்தக் காலம் தொட்டு இன்றைய காலம் வரை இந்த இந்திய செனட்டர்கள் இந்தியர்களுக்கு என்ன நல்லது செய்து விட்டார்கள் என்பது நமக்கும் தெரியாது! அவர்களுக்கும் தெரியாது! தெரியாமலே போகட்டும்!
செனட்டர் பாலசுப்ரமணியத்தை வரவேற்கிறோம்! வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment