Friday 19 June 2020

பிரதமர் வேட்பாளர் யார்?

நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதற்கு பி.கே.ஆர். கட்சியின் உச்சமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அதன் பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராகிம் என்பதாக அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்கிறோம். நம்பிக்கை கூட்டணி பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதிரை ஏற்க முடியாது என்பது சரியான அணுகுமுறையே!

ஆனால், இன்றைய நிலையில், தேசிய கூட்டணியிடமிருந்து அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவம் தேவை என்கிற வாதம் சரியானது அல்ல என்று சொல்லி விட முடியாது.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மூன்றாவது முறையாக டாக்டர் மகாதிர் பிரதமராக வரலாம்.  அவர் சொல்லுவது போல இந்த முறை மூன்றாம் முறையாக பதவி ஏற்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டால்,   அடுத்த  ஆறு மாதங்களில்,  தனது பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என்று அவர் பக்கம் பேசப்படுகின்ற நியாயம்! 

என்ன தான் அவர் நியாயம் பேசினாலும் க்டந்த கால அனுபவங்கள் அப்படி எதுவும் நியாயமாக நடந்ததாகத் தோன்றவில்லை! டாக்டர் மகாதிர் ஒரு வேளை மாறலாம்! அது சாத்தியம் தான்.  ஆனால் அவரது கட்சியினர் அப்படி மாற வாய்ப்பில்லை! 

இப்போதே அவரது கட்சியினர் "ஏன் அன்வார் பிரதமர் வேட்பாளர்? வேறு யாரும் இல்லையா?" என்கிற ரீதியில் கேள்விகள் எழுப்புகின்றனர். இந்த வாதங்களை வைத்துப் பார்க்கும் போது "மகாதீர் பிரதமர் ஆனால் அன்வார் அடுத்த பிரதமர் அல்ல!"  என்கிற நிலை தான் மீண்டும் மீண்டும் ஏற்படும். 

டாக்டர் மகாதிர் நியாயம் பேசுபவராக இருந்தால் தனது கட்சியினரை வாய்த் திறக்காமல் செய்ய வேண்டும்.  அதனை அவர் செய்யவில்லை! அப்படிப் பார்க்கின்ற போது அவரிடம் உண்மை இல்லை என்று தான் நாம் ஐயப்பட வேண்டி உள்ளது!

இதைத் தவிர்த்து இன்னொரு பரிந்துரையும் நம்பிக்கை கூட்டணியிடம் உள்ளது:  பிரதமர் மகாதிர்  - துணைப்பிரதமர் அன்வார். இந்தப் பரிந்துரை சரி தானே என்று நாம் நினைத்தாலும் கடந்த கால அனுபவங்கள் அது தவறானது என்று மெய்ப்பித்துள்ளது! எப்போது வேண்டுமானாலும் துணைப் பிரதமரைத் தூக்கி எறியலாம் என்பது தான் துணைப்பிரதமர் பதவி! டாக்டர் மகாதிர் தனது சொல்லைக் காப்பாற்றுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

ஆக, பிரதமர் வேட்பாளர் யார் என்றால் அது அன்வார் இப்ராகிம் ஆகத்தான் இருக்க வேண்டும்.

பி/கே/ஆர். தரப்பின் நியாயம் சரியானது தான்!

இல்லாவிட்டால் 'கம்' என்று இருந்து கொண்டு தேசிய கூட்டணி வழி செல்ல வேண்டியது தான்!

No comments:

Post a Comment