Friday 5 June 2020

கொடூரத்தின் உச்சம்


இந்தியா, கேரளாவில் சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் உலகத்தையே உலுக்கிவிட்டது.

ஒரு கர்ப்பிணி யானையை அன்னாசி பழத்தின் மூலம் வெடி வைத்துக் கொன்ற சம்பவம் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறந்து விட முடியாது/

கொடூரத்திலும் கொடூரமான சம்பவம் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை. இங்கும், நமது நாட்டில்,  ஒரு பூனையைப் பிடித்து துணி துவைக்கும் இயந்திரத்தில் வைத்து துவைத்துப் போட்டார்களே அந்த ஞாபகமும் கூட வருகிறது. ஒரு வித்தியாசம்: ஒன்று சிறிய ஜீவன் இன்னொன்று பெரிய ஜீவன். அது தான் வித்தியாசம்.

கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சில அடையாளம் தெரியாத நபர்களால் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. சுமார் 14-15 வயது மதிக்கத்தக்க அந்த யானை கடைசி மூன்று நாள்கள் மிகவும் துன்பத்தை அனுபவத்திருக்கிறது. அந்த மூன்று நாள்களிலும் அந்த யானை வெள்ளையாறு நதியை விட்டு வெளியேறாமல்,  வலி தாங்க முடியாது,  தனது வாயையும், தும்பிக்கையையும் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே எடுக்கவில்லை. தண்ணீரில் இருந்தபடியே அது இறந்து விட்டதாக  வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொதுவாகவே கேரள மாநிலத்தில்  யானைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.  கோவில் திருவிழாக்களில் யானைகளின் பங்கு அளப்பறியது. தனிப்பட்ட முறையில் பலர் யானைகளை வளர்க்கின்றனர். அதுவும் இன்னுமொரு 18-20 மாதங்களில் குட்டியை ஈனும் நிலையில் உள்ள யானையை யாருக்கும் கொல்ல மனம் வராது. 

ஆனால் காட்டு யானைகள் என்று வரும் போது அவைகளை யாரும் விரும்புவதில்லை. கிராமங்களை அழிக்கும் என்பதால் காட்டு யானைகளை மக்கள் பல வழிகளில் அவைகளை விரட்டுகின்றனர். ஆனால் இப்படி ஒரு வெடிச் சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.

எது எப்படி இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.

நமது நாட்டில் ஒரு கர்ப்பிணி பூனையை சலவை இயந்திரத்தில் போட்டு அரைத்துச் சாகடித்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக் கொடுத்தார்கள்.

கர்ப்பிணி யானைக்கு எப்படியோ!


No comments:

Post a Comment