Saturday 6 June 2020

பதினைந்தாவது தேர்தல் வருமா?

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். 

மக்கள் இன்னொரு புதிய தேர்தலை விரும்பவில்லை. விரும்புவதற்கும் வாய்ப்பில்லை.  இப்போது மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு தேர்தலை நடத்துவதற்கு பல கோடிகள் செலவிடப்பட வேண்டும் - அதவாது சென்ற தேர்தலின் கணக்குப்படி 50 கோடிக்கு மேல் செலவிடப்பட்டிருக்கின்றது! இப்போது இன்னொரு தேர்தலை நடத்தினால் அதற்கும்  பணம் தேவை.  இன்றைய நிலையில் இன்னும் அதிகமாகவே தேவைப்படலாம்! 

முன்பு பதவியில் இருந்தவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வெளியே கொண்டு வந்தாலே போதும்! அதை வைத்தே செலவில்லாத தேர்தல் நடத்தலாம்! அது சாத்தியம் இல்லை! எல்லாமே உத்தமபுத்திரர்கள்!

இப்போது தேர்தல் வேண்டுமென்று யார் அடித்துக் கொள்ளுகிறார்கள்? இன்றைய பிரதமர் முகைதீன் விரும்பமாட்டார்.  அவர் நிலைமை சரியாக இல்லை.  எவன் எந்த நேரத்தில் பல்டி அடிப்பானோ - அரசாங்கத்தைக் கவிழ்ப்பானோ - என்பது அவருக்கே தெரியாது! அவர் "கோரோனா தொற்று நோயை" வைத்து அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்!

பக்கத்தான் கட்சியின் தலைவர், அன்வார் இப்ராகிம், இப்போதைக்குத் தேர்தல் வேண்டாம் என்றே நினைப்பவர்.  பணம் மட்டும் அல்ல இப்போதைய அரசாங்கம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பவர். அரசாங்கம் எந்த நேரத்திலும் கவிழலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பவர். புதிதாக தேர்தல் நடத்தினால் தனது நிலை என்னவாகும் என்பதை அனுமானிக்க முடியாத நிலையில் உள்ளவர்.  இப்போது என்ன நடக்கிறதோ அதுவே தொடரட்டும் என்பது தான் அவரது விருப்பமாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதை அவர் விரும்பமாட்டார்.

தேர்தல் வேண்டும் என்னும் நிலையில் உள்ளவர்கள் யார்?  பாரிசான் கூட்டணியில் உள்ள அம்னோ கட்சியினர் மட்டுமே தேர்தல் வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தக் கூட்டணியின் மற்றக் கட்சிகளான ம.சீ.ச. வோ அல்லது ம.இ.கா. வோ தேர்தல் வருவதை விரும்பமாட்டார்கள்! இருக்கும் இடத்தையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை!

அம்னோவினருக்கு ஏன் இந்த ஆசை? நடந்து முடிந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.  அது அவர்களுக்கு "வெற்றி பெற முடியும், ஆட்சி அமைக்க முடியும்" என்னும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது!   இழந்து போன ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம் என்பதே அவர்களது எண்ணம். அடுத்த தேர்தல் வரும் வரை பொறுத்திருந்தால் எதுவும் நடக்கலாம். ஒரு வேளை அவர்களின் தலைவர்கள் சிறையில் கூட இருக்கலாம்! அம்னோ அரசியல் பலத்தை இழந்துவிடலாம். இப்போது காற்று அவர்கள் பக்கம் தூற்றிக் கொள்வது அவர்களது விருப்பம்!

அதுவும் அம்னோ தரப்பு செய்த கடந்த காலத் திருட்டுத் தனங்களை மக்கள், நடந்து முடிந்த இடைத் தேர்தல்களின் மூலம், மறந்து விட்டார்கள் என்னும் போது அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவர்களது புத்திசாலித்தனம் என்று அவர்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

புதினைந்தாவது பொதுத் தேர்தல் விரைவில் வருமா என்பது முற்றிலுமாக அம்னோவின் கையில் இருக்கிறது.  அவர்கள் மகா நல்லவர்கள், உத்தமபுத்திரர்கள் என்பதை நிருபிக்க உடனடித் தேர்தல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது!  காலங்கடந்தால் பெயர் நாறிப்போகவும் அவர்களுக்கு வாய்ப்புண்டு!

அது சரி உடனடியாகத் தேர்தல் வருமா? வரும் என்று சொல்லுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாகத் தான் இருக்கிறது!   காரணம் பாஸ் என்கிற ஒரு கட்சி இருப்பதை மறந்துவிடக் கூடாது.  இன்றைய பிரதமர் முகைதீன் அவர்களுக்குச் சரியான தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்! 

பாஸ் கட்சியினர் மத்திய  ஆட்சியில் எந்த பதவியையும்  வகிக்காதவர்கள். பதவிக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள்! இப்போது அவர்களுக்குத் தாராளமாக பதவிகள் கொடுக்கப்படுகின்றன. அமைச்சரவை மட்டும் அல்ல  அரசு சார்பு நிறுவனங்களிலும் அவர்களுக்குப் பதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது அவர்களுக்கு நல்ல நேரம்! அதைக் கெடுக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். தேர்தல் வந்தால் அம்னோவோடு அவர்கள் ஒத்துப் போக முடியுமா என்பது சந்தேகம் தான்.  "நான் பெரியவன், நீ பெரியவன்"  என்பதில் அவர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு. இரு கட்சிகளுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்! 

அதனால் இப்போதைக்குப் பதினைந்தாவது தேர்தல் என்பது சாத்தியமில்லை!

No comments:

Post a Comment