Sunday 7 June 2020

கொஞ்சம் நம்பிக்கை தருகிறது!

கொரோனா தொற்று நோயின் தாக்கத்திற்குப் பிறகு சுற்றுலாத் துறை கொஞ்சம் நம்பிக்கைத் தர ஆரம்பித்திருப்பது உண்மையில் மிக மிக நல்ல செய்தி.

பிரதமர் மொகிதீன் நேற்று,  ஞாயிற்றுக்கிழமை,  நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறிய ஒரு செய்தி நம்மில் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!  

ஆமாம்,  மாநிலங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 10-ம் தேதிக்குப் பின்னர் நீக்கப்படும் என்கிற செய்தி மலேசியர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது!


உள் நாட்டில் பிரபல சுற்றுத்தலமான லங்காவியில் உள்ள தங்கும் விடுதிகள் மீண்டும் சுறு சுறுப்பு அடைந்திருக்கின்றன.

பிரதமர் அறிவிப்புக்குப் பின்னர் சுமார் 45 நிமிடங்களில் லங்காவியில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆயிரம் (1000) அறைகள் இதுவரை முன் பதிவு செய்யப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த செய்தியை லங்காவி சுற்றலாத்துறைத் தலைவர் ஜைனுதின் காதர் உறுதிப் படுத்தியிருக்கிறார். இந்த ஆண்டுக்குள் சுமார் பத்து இலட்சம் சுற்றுப்பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் கூறுகிறார்.  அந்த நோக்கம் நிறைவேறினால் நமக்கும் மகிழ்ச்சியே!

இதுவரை  நமக்குத் தெரிந்ததெல்லாம் லங்காவியிலிருந்து வந்த அறிவிப்பு மட்டும் தான்.மற்ற மாநிலங்களிலும் சுற்றாலத்துறை சுறு சுறுப்பு அடைந்திருக்கும் எனவும் நம்ப இடமிருக்கிறது.  சுற்றுப்பயணிகளுக்கு இன்னும் பல இடங்கள் இருக்கின்றன. அங்கும் மக்கள் குவியத் தொடுங்குவார்கள் என்பதும் உறுதி.

இந்த அனைத்து முன்பதிவும் உள்ளூர் மக்களிடமிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூர் சுற்றுப் பயணிகள் என்பதெல்லாம் இப்போதைக்கு நினைத்துப் பார்க்க முடியாது! உள்ளூர் சுற்றுப்பயணங்கள் அதிகரித்தால் அதுவே நமக்குப் பெரிய வெற்றி. காரணம் எல்லாமே ஒன்றைச் சார்ந்து ஒன்று இருக்கின்றன. ஒரு துறை வளர்ச்சி அடைந்தால் அதைச் சார்ந்த மற்ற துறைகளும் வளர்ச்சி அடையும்.

இது ஓர் ஆரம்பம். மிக நல்ல ஆரம்பம்.  தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான கட்டுப்பாடுகள் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கொஞ்சம் நம்பிக்கைத் தருகிறது!

No comments:

Post a Comment