முதலில் நமது பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நமது பெண்களில் பலர் இப்போதெல்லாம் "ஆன் லைனில்" தொழில் செய்ய ஆரம்பித்திருப்பது மனதுக்கு நிறைவளிக்கிறது.
முக நூலில் நிறையவே விளம்பரங்கள் வருகின்றன. கோரோனா தொற்றுக்கு முன்னர் இப்படி எல்லாம் பார்த்ததில்லை. அப்போது அவர்களுக்கு இது தேவைப்படவில்லை!
காலத்தின் கட்டாயம் என்பது இது தான். ஆனாலும் கொரோனா தொடர்கிறதோ, தொடரவில்லையோ இவர்களின் தொழில் ஆன் லைனில் இனி தொடரும் என நம்பலாம். தொடர வேண்டும்.
நமது தமிழ்ப்பெண்கள் இனி புதிய புதிய பாணிகளைக் கையாள்வது என்பது தவிர்க்க முடியாதது!
மேலும் நமது பெண்கள் இப்போதெல்லாம் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதே நல்லதொரு மாற்றம் நமது சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஆண்கள் வேலை செய்வதும் பெண்கள் தொழிலில் ஈடுபாடு காட்டுவதும் நமது சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய மாற்றங்கள்!
முன்னேற்றம் கண்டுவிட்ட சீன சமுதாயத்தில் இப்படித்தான் பார்க்கிறோம். என்ன தான் ஆண்கள் வேலை செய்தாலும், வியாபாரம் செய்தாலும், பெண்கள் வீட்டோடு சும்மா இருப்பதில்லை. சீரியல் நாடகங்களைப் பார்த்துக் கொண்டு நேரத்தை வீணடிப்பதில்லை. அவர்கள் ஏதோ ஒரு வகையில் தொழில் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுகின்றனர். அதனால் தான் சீனர்களோடு - பொருளாதாரத்தில் - நம் தமிழ் இனம் போட்டிப் போட முடியவில்லை.
ஆனால் நம் இனத்திலும் மாற்றங்கள் தெரிகின்றன. இது தொடரும் என நம்பலாம்.
சீனர்களின் வாழ்க்கை முறை, சீனப் பெண்களின் வாழ்க்கை முறையை நமது சமுதாயத்துப் பெண்கள் பார்த்துத் தெரிந்து கொண்டாலே போதும். அதனைக் கடைப்பிடித்தாலே போதும். நமது சமுதாயத்தின் பொருளாதார வலிமை தன்னாலே வந்து சேரும். அதில் சந்தேகமில்லை.
பெண்களே! வீட்டில்'சும்மா' இருக்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள். முதலில் சம்பாத்தியம். அதன் பின்னர் தான் பொழுது போக்கு. சீனர்களிடம் பொழுது போக்கே இல்லையா? இருக்கிறது! அவர்களின் அன்றாடம் செய்கின்ற பணிகள் முடிந்த பின்னர் தான் பொழுது போக்கு!
நமக்கும் அதே வழி தான். முதலில் சம்பாத்தியம். அதன் பின்னர் தான் பொழுது போக்கு.
வாழ்த்துகள்! தொடருங்கள் உங்கள் பணிகளை! அது ஆன்லைன் தொழிலாக இருந்தாலும் சரி, வேறு வகையான தொழிலாக இருந்தாலும் சரி பெண்களுக்குப் பொருளாதார சுதந்தரம் வேண்டும்.
மீண்டும் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment