Friday 12 November 2021

அந்த கொடூரம் வேண்டாம்

 

உலகமே மரண தண்டனை வேண்டாம் என்று உரத்தக் குரலில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சிங்கப்பூர் அரசாங்கம் மட்டும் அதனை விடாப்பிடியாக 'யார் பேச்சையும் கேட்க மாட்டேன்!" என்று அடம் பிடிப்பது சரி எனத் தோன்றவில்லை.

ஒரு மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கம் கஞ்சா கடத்தலின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, மரண தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டு இப்போது மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கிறார். நவம்பர் 9-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். ஆனால் அதற்குள் அவருக்கு ஏற்பட்ட கோரோனா பாதிப்பினால் அவருடைய தூக்குத் தண்டனை தள்ளி போடப்பட்டிருக்கின்றது. இதற்கிடையே  அவருடைய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையையும் உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்திருக்கின்றது. விசாரணைக்கான தேதி நாகேந்திரன் குணம் அடைந்த பின்னரே தெரியவரும்.

நாகேந்திரன்  குறைந்த அறிவாற்றல்  உடையவர் என்பதோடு  மனநலமும்  குன்றியவர் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் அவரது விசாரணை ஆங்கில மொழியில் நடபெற்றதாகவும் அந்த அளவுக்கு ஆங்கில புலமை பெற்றவரா என்பதும் ஐயத்திற்குரியதே.  அதனால் தமிழ் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

மேலும் நாகேந்திரன் மனநலம் குன்றியவர் என்பதால் சட்டப்படி  அவருக்கு மரண தண்டனை கொடுக்க முடியாது என்று  சட்டம் கூறினாலும் நீதிமன்றம்  அதனை  ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்  நல்ல மனநிலையில் உள்ளவர் என்பதாகவே  நீதிமன்றம் கூறுகிறது.

இப்போது சிங்கப்பூர் அரசாங்கத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கருணை மனுக்கள் போய்க் கொண்டிருக்கின்றன. உலகளவிலும் பலர் 'மரண தண்டனை வேண்டாம்!' என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  நமது மலேசிய பிரதமரும் அந்த இளைஞனுக்குக் கருணை காட்டுமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இதுவரை சிங்கப்பூர் அரசாங்கம் எந்த கருணையும் காட்டுவதாகத் தெரியவில்லை. மரண தண்டனையை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தெரிகிறது. யாருடைய குரலுக்கும் அவர்கள் செவி சாய்ப்பார்கள் என்று நம்ப முடியவில்லை!

இந்த வழக்கு மட்டும் அல்ல பொதுவாகவே மரண தண்டனை வேண்டாம் என்பதே நமது நிலைப்பாடு! அந்தக் கொடூரமே வேண்டாம்!

No comments:

Post a Comment