Wednesday 10 November 2021

பத்மஸ்ரீ ஹரேகலா ஹஜப்பா


 ஆரஞ்சுப் பழம் விறபவருக்கு பத்மஸ்ரீ விருது 

நம் நாட்டில் இது போன்ற விருதுகள் ஏழை எளிய மக்களுக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை; கேள்விப்பட்டதில்லை. ஆனால் இந்தியா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிக உயரிய பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவரது பெயர் ஹரேகலா ஹஜப்பா. வயது 66.  ஆரஞ்சு பழங்கள்  விற்பனைச் செய்பவர். அது தான் அவரது தொழில். 1977 முதல் மங்களூரு பேருந்து நிலையைத்திலும் தெரு ஓரங்களிலும் இந்த தொழிலை செய்து வருகிறார்.

ஹஜப்பா எழுத படிக்கத் தெரியாதவர். ஒருமுறை வெளியூர்க்காரர் ஒருவர் இவரிடம் பழங்கள் வாங்கியிருக்கிறார்.  விலை என்ன என்று வெளியூர்க்காரர் ஆங்கிலத்தில் கேட்க  இவரால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த ஒரு நிகழ்வே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னடம் மட்டுமே பேசத் தெரிந்த அவருக்கு தனது  ஊரில் வாழும் பிள்ளைகள் தன்னைப் போல கல்வி அறிவு இல்லாதவர்களாக இருக்கக் கூடாது என்பதற்காக அன்றே சபதம் எடுத்திருக்கிறார். ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். அது தான் அவரது சபதம்.

ஹரேகலா நியுபட்பு என்னும் தனது கிராமத்தில் கனவை நிறைவேற்ற அவருக்கு  இருபது ஆண்டுகள் பிடித்தன.  பள்ளி கட்ட அனுமதி கிடைத்தது 2000-மாவது ஆண்டு. முதன் முதலாக பள்ளி ஆரம்பித்த போது சுமார் 28 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தனர். அதன் பிறகு பல நூறு பிள்ளைகள் அங்குக் கல்வி கற்றிருக்கின்றனர். இப்போது அங்கு பத்தாம் வகுப்புவரை கல்வி கற்க வசதிகள் உண்டு.  சுமார் 175 ஏழைப் பிள்ளைகள் கல்விப் பயிலுகின்றனர்.

ஹஜப்பாவுக்கு இன்னும் பல பள்ளிகள் வேறு ஊர்களில்  திறக்க வேண்டும் என்கிற ஆசைகள் எல்லாம் உண்டு.  வேறு பல ஊர்களிலிருந்து பள்ளிகள் திறக்க அவருக்கு அழைப்புக்களும்  வருகின்றனவாம். பள்ளிகள் கட்ட நிலங்களும் கொடுக்கின்றனராம்.

  தனக்குக்  கிடைக்கும் பரிசுகள், பணம் அனைத்தையும் சேர்த்து வைத்து இன்னும்  பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வேண்டும் என்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடியிடம் தனது ஊரில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள பள்ளியை பன்னிரெண்டாம் வகுப்பு வரை உயர்த்தமாறு வேண்டுகோளும் விடுத்திருக்கிறாராம் ஹஜப்பா.

அவரது வேண்டுகோளை பிரதமர் நிறைவேற்றுவார் என நிச்சயம் நம்பலாம்.

பத்மஸ்ரீ போன்ற விருதகளை வாங்க எத்தனையோ பேர் தவம் கிடக்கின்றனர்.  மாபெரும் சபையில் வெறுங்கால்களுடன் நடந்து சென்று பத்மஸ்ரீ விருதை வாங்கியிருக்கிறார் ஹஜப்பா!

No comments:

Post a Comment