Saturday 27 November 2021

இரக்கம் காட்டும் என நம்புகிறோம்!

 

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும்  மலேசியாரான நாகேந்தரன்  தர்மலிங்கம் சார்பாக பலர்   அவரைக் காப்பற்றும் பொருட்டு  பலவழிகளில் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் கொடுத்து வருகின்றனர்.

அதனை எந்த அளவுக்கு அந்த அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்பது நமக்குத் தெரியாது.  நாம் பார்க்கும் போது ஏதோ அது ஒரு ஆணவப் போக்காகத் தோன்றினாலும்  ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் சட்டதிட்டங்களைத் தான் கடைப்பிடிப்பார்கள் என்பது தான் உண்மை.  

அவர்களுக்கும் ஏதோ, எங்கேயோ கொஞ்சமாவது ஈரம் இருக்கும்  என்பதில் நமக்கும் நம்பிக்கையுண்டு. ஒரேடியாக அவர்களை ஈரமற்றவர்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களுக்கும் கருணை உண்டு!

நமது நாட்டிலிருந்து பல அமைப்புகள் நாகேந்தரனுக்குக் கருணை காட்டும்படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். குறிப்பாக மனித உரிமை அமைப்புகள் மீண்டும் மீண்டும் கோரிக்கைகளை வைக்கின்றனர். அத்தோடு வெளியுறவு அமைச்சர், நமது பிரதமர் உட்பட  சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு  நகேந்திரன் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது அவரது குற்றத்தை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரை எந்த ஒரு அறிகுறியையும் காட்டவில்லை!

இப்போது நமது பேரரசரும் சிங்கப்பூர் அரசிடம் தமது வேண்டுகோளை வைத்திருக்கிறார். ஏதோ கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறது. பேரரசர் இந்த அளவு கீழே இறங்கிவர வேண்டிய அவசியமில்லை.  ஆனாலும் அவரும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு மனிதாபிமான முறையில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ஏன் இந்த அளவுக்கு நாகேந்திரன் மீது கருணை காட்டும்படி அனைவரும் கூறிவருகின்றனர் என்பதற்கான காரணம் ஒன்று தான். அவர் சராசரி மனிதனுக்குள்ள  அறிவுத்திறன் இல்லாதவர். அவருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது கூட  அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய அறிவுத்திறன் என்பது 69 என்பதாகக் கணக்கிடப்படுகிறது. 69 என்பதின் பொருள் என்ன? நடைமுறையில் நாம் "அப்பாவி" என்போம். அப்படிப்பட்ட அப்பாவிக்குத் தூக்குத்தண்டனையா என்பது தான் எல்லாரிடமும் எழும் கேள்வி. நாம் கேட்பதெல்லாம் மரண தண்டனை வேண்டாமே என்பது தான்.

சிங்கப்பூர் அரசு தான் அதற்கான முடிவைக் காண வேண்டும். சட்டதிட்டங்கள் கடுமையாக இருப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எல்லார் மீதும் ஒரே சமநிலையான சட்டதிட்டங்களா என்று நமக்கும் கேள்விக்குறியாக இருக்கிறது

சிங்கப்பூர் அரசாங்கம் கொஞ்சம் தனது தீர்ப்பை மாற்றிக் கொள்ளலாம். கொஞ்சம் கருணை காட்டலாம். கொஞ்சம் இரக்கம் காட்டலாம். கொஞ்சம் பாவபுண்ணியம் பார்க்கலாம்.

நம்மால் எதுவும் செய்ய முடியாது. கேட்கத்தான் முடியும். கெஞ்சத்தான் முடியும். கருணை காட்டுங்கள் என்று சொல்லத்தான் முடியும். அதற்கு மேலே.......இறைவா நீர் தான் வழிகாட்ட வேண்டும்!

No comments:

Post a Comment