ஜேய்பீம் திரைப்படத்தின் மூலம் இதுவரை தெரியாத பல விஷயங்களை இப்போது நான் தெரிந்து கொண்டேன்!
அதற்குக் காரணம் தமிழகச் சூழல் எனக்குத் தெரியாது. வேறு காரணங்கள் சொல்ல ஒன்றுமில்லை.
நரிக்குறவர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஊட்டி சென்ற போது இருளர் ஒருவரிடம் பேசியிருக்கிறேன். படித்தவர், கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மகன் ஜெர்மன் நாட்டில் மேற்படிப்பை முடித்த பிறகு அங்கேயே வேலை செய்வதாகவும் சீக்கிரம் நாடு திரும்புவதாகவும் கூறினார். ஜெர்மன் நாட்டில் வேலை செய்ய அவர் மகன் விரும்பவில்லை. நிரந்தரமாக அங்கே தங்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை நிராகரித்து விட்டாராம். தாய் நாட்டில் வேலை செய்வதையே விரும்புகிறாராம்.
நான் முன்பு தோட்டமொன்றில் வேலை செய்யும் போது ஒரு சிலரைப் பற்றி பேச்சு வரும்போது அவர்கள் நரிக்குறவர்கள் என்று சொன்னார்கள். பார்க்க கரடுமுரடாகவும் கடுமையான உழைப்பாளியாகவும் இருந்தார்கள். அங்கு தான் முதன் முதலாக நான் அவர்களைப்பற்றி கேள்விப்பட்டேன். மற்றபடி அனைத்தும் சினிமா படங்கள் மூலம் தான்.
அந்த திரைப்படத்தில் வரும் போலிஸ் கதாபாத்திரம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாம் இங்கு அடிக்கடி பார்க்கின்ற ஒன்று தான். நல்ல ஆரோக்கியத்துடன் சிறைக்குப் போகிறவன் அடுத்த நாளே பிணமாக வருவதை நாம் பார்க்கிறோம். அப்படி வருபவர்களில் பெரும்பாலும் இந்தியர்கள் தான் அதிகம். உலகெங்கிலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமரிக்காவில் கூட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவரை போலிஸ்காரர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து சாகடித்ததைப் பார்த்தோம்.
அது தான் போலீஸ் அராஜகம். இங்கே காவலில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. இந்த திரைப்படத்தில் உள்ளே என்ன நடக்கிறது என்று காட்டுகிறார்கள். ஆக, இங்கேயும் ஏறக்குறைய அதே நிலைமையாகத்தான் இருக்க வேண்டும். எப்படியோ இவனும் சாகிறான் அவனும் சாகிறான். சாகடிக்க கையாளும் முறை இங்கோ அங்கோ, எங்கோ எல்லாம் ஒரே மாதிரி தான்.
ஆனால் இங்கு அவன் வன்னியனா என்று கேட்க முடியாது! இங்கும் வன்னியன் இருக்கலாம்! ஆனால் அவனை எப்படிக் கண்டு பிடிப்பது? அவனாகப் பார்த்து தன்னை வன்னியன் என்று சொன்னால் தான் உண்டு! இல்லாவிட்டால் அவன் தமிழன் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவோம்!
இந்த திரைப்பட சர்ச்சையில் அந்த போலீஸ் கதாப்பாத்திரம் வன்னியன் தான் என்று வன்னியர்கள் கூறுகிறார்கள். இந்த அளவுக்கு அவர்கள் கொடுரமானவர்களா என்று பார்க்கும் போது "இருக்கலாம்!" என்று தான் தோன்றுகிறது! காரணம் அங்கு நடைபெறும் ஆணவக் கொலைகள் பெரும்பாலும் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்! நடுரோட்டில் வெட்டுவதும் குத்திக் கொலை செய்வதும் அவர்கள் பெயர் தான் அடிபடுகிறது!
ஆனால் ஒன்று எல்லா சமூகங்களிலும் நல்லவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஒரு சில கெட்டவர்களுக்காக எந்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது! வேண்டுமானால் காவல்துறையைச் சார்ந்தவர்களை தனி ஜாதியாக பிரித்துவிடலாம்! வன்முறையன் என்று சொல்லலாம்!
இன்னொன்றும் நான் குறிப்பிட வேண்டும். அந்த படத்தில் அக்னிகலசம் என்று ஒன்று வருவதாகச் சொல்லுகிறார்கள். அது என்னவென்றே எனக்குத் தெரியாது! பிறகு தெரிந்து கொண்டேன்!
இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட சர்ச்சைகளின் மூலம் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொண்டேன்! முக்கியமாக வன்னியர் சமூகம், அக்னிக்குண்டம் மற்றவை எலி தான் இருளர்களின் உணவு, நாதியற்றவர்கள் - இப்படி சில!
புதிய அனுபவம்!
No comments:
Post a Comment