Tuesday 16 November 2021

ஊழியர் சேமநிதி பறிபோனது!


 ஊழியர் சேமநிதியில் உள்ள சந்தாதாரர்களின் சேமிப்பு மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது என்பதை அறிய மனம் பதபதைக்கிறது. 36 இலட்சம் சந்தாதாரர்களுக்கு அவர்கள் சேமிப்பில் இருக்கும் பணம்  வெறும் 1000 ரிங்கிட்டுக்கும் குறைவே என்று அறியும் போது மனம் கவலை கொள்கிறது. இவர்களில் பெரும்பாலோர் மிகச் சாதாரண வேலையில் உள்ள தொழிலாளர்களாகத்தான் இருக்க முடியும்.

யார் என்ன செய்ய முடியும்? கோவிட்-19 என்னும் தொற்று நோய் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது நாடு மட்டும்  அதிலிருந்து விலக்கா பெற முடியும்?  பலர் வேலை இழந்தனர். சாப்பாட்டுக்கு வழியில்லை.

அந்த நேரத்தில் ஊழியர்  சேமநிதி வாரியம் நமக்குக் கை கொடுத்தது. உண்மையைச் சொன்னால் நம்மிடம் சொந்தப் பணம் எதுவுமில்லை. சொந்த சேமிப்பு எதுவுமில்லை. அதனால் பலர் ஊழியர் சேமநிதியிலுள்ள பணத்தை எடுத்துத்தான் தங்களது  தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.

அந்த சமயத்தில் நமக்கு அதன் வலி தெரியவில்லை. அப்போது அதன் தேவை நமக்கு முக்கியம். இப்போதோ வலி தெரிகிறது. ஆமாம் சேமநிதியில் இருந்த பணம் அடிமட்டத்திற்குக் குறைந்து போனது. இப்போதோ ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான பணம் தான் உள்ளது! அது தான் துயரம்.

ஆனால் இளம் வயதினருக்கு இது பிரச்சனையே அல்ல. இன்னும் நீண்ட காலம் அவர்கள் வேலை செய்வர். அவர்கள் ஓய்வு பெரும் போது கணிசமான தொகை அவர்களது கணக்கில் இருக்கும். அதன் மூலம் அவர்கள் வீடு வாங்கலாம் அல்லது ஏதாவது சொத்துகள் வாங்கலாம்.

ஆனால் நடுத்தர வயது அல்லது இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்கள் தான் சிக்கலில் மாட்டுகின்றனர். போதுமான சேமிப்பு இருக்க நியாயம் இல்லை. ஆனாலும் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பார்கள். அது தான் உண்மை. 

இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு சிறு தொழில்களில் ஈடுபடாலாம். சிறிய முதலீட்டில் தொழில்கள் செய்ய எத்தனையோ சிறிய தொழில்கள் உள்ளன. அல்லது நீங்கள் உங்களின் தனிப்பட்ட திறனை வைத்து ஒரு தொழிலை உருவாக்கலாம்.

எல்லாமே நம்மால் முடியும். எதை செய்தாலும் அதனை நம்பிக்கையோடு செய்யுங்கள். அல்லது சேமநிதியில் உங்களது சேமிப்பை அதிகமாக்க வேண்டுமானால் இன்னும் அதிகமாக உழையுங்கள்.  உங்களின் வருமானத்தை அதிகரியுங்கள். அதன் மூலம் ஊழியர் சேமநிதியில் உங்களது சேமிப்பை அதிகமாக்குங்கள்.

எல்லாமே நம் கையில் தான் உள்ளது. சேமிப்பு குறைந்து போனதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையை வாழ வேண்டும். 

நம்மிடம் சேமிப்பு இல்லை என்றால் யார் என்ன செய்ய முடியும்? ஊழியர் சேமநிதி ஒன்றே வழி. அதைத்தான் அவர்கள் செய்தார்கள். இப்போது குறைந்து போனது என்பது உண்மை தான். ஆனால் நாம் குறைந்து போகவில்லை. வாழ்ந்து காட்டுவோம்!


No comments:

Post a Comment