அம்னோ கட்சி மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்துவிட்டது என்று நினைத்தோம் அது பொய் என்று நிருபித்துவிட்டது மலாக்கா மாநிலம்!
முன்னாள் பிரதமர் நஜிப் குறிப்பாக மலாய் மக்களின் ஆதரவை இழந்துவிட்டதாக நினைத்தோம்! ஆனால் அவர் தலைமையிலான மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் மாபெரும் வெற்றி பெற்று அதையும் பொய்யாக்கிவிட்டது!
மலேசிய சீனர் சங்கமும் தனது பங்குக்கு வெற்றி பெற்று காட்டியிருக்கிறது. இனி அந்த கட்சியை அலட்சியப்படுத்த முடியாது.
அதே போல ம.இ.கா. வும் தனது பொன்னான தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது! கண்டிப்பாக ம.இ.கா. தோற்கும் என்று கருதப்பட்ட தொகுதி அது. அதைவிட ஒரு படி மேலே போய் மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றதற்கு ம.இ.கா. தான் காரணம் என்பதாக ம.இ.கா. தலைவர்கள் அந்த பெருமையை தங்கள் பக்கம் எடுத்துக் கொள்ளுகிறார்கள்! நாமும் அவர்களோடு சேர்ந்து 'ஆமாம்!' என்று தலையை ஆட்டுவோம்! இப்போது அவர்கள் எதைச் சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறோம்! அத்ற்காக அவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள் என நினைக்க வேண்டாம். நாய் வால் நாயின் வாலாகத்தான் இருக்கும்!
ம.இ.கா. விற்கு ஒரு முக்கிய பாடம் இங்குக் கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது அம்னோ இவர்களை அலட்சியப்படுத்தாது. இவர்களை ஒதுக்கிவிட்டு பாரிசான் கட்சிக்குள் உள்ளே வர நினைத்தார்களே உதிரி கட்சிகள் இவர்கள் இயல்பாகவே அடங்கி விடுவார்கள்!
ம.இ.கா.விற்கு அது ஒரு சாதகமான நிலை. ஆனால் இந்த சாதகமான நிலையை இவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? முடியாது! அது தான் இவர்களது பலவீனம்! கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு வேறு எதுவுமே கவனத்தில் இராது! இருக்கும் சில காலத்தில் கோடிகளைச் சேர்த்துவிட வேண்டும் என்று தான் மனம் நாடும்! தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் அவர்கள் பார்ப்பார்கள்! அப்படி இருந்தால் அவர்களுக்கு மாலை, மரியாதைகள் கிடைக்கும். அப்படி இல்லையென்றால் வசைகளும், வலிகளும் வலுவாக வந்து சேரும்! தொடரும்!
நமக்குக் கிடைத்த நல்ல செய்தி என்றால் ஒரு நிலையான அரசாங்கம் மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கிறது. அது போதும். தொங்கு அரசாங்கம் இல்லை! தொல்லை கொடுப்பவர்கள் அடங்கி விடுவார்கள்! பணத்தால் வாங்க வழியில்லை! அது தான் அரசாங்கம் தனது காரியங்களைச் செய்ய வசதியாகவும் வாய்ப்பாகவும் அமையும்.
நல்லது நடக்க வேண்டும்! நல்லது நடக்காவிட்டால் நாசமாகிப் போவீர்கள்! எது உங்களுக்குத் தேவை?
No comments:
Post a Comment