Kedah MB Muhammad Sanusi Md.Nor
சமீபத்தில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், பாஸ் தலைமைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!
கெடா மந்திரி பெசார் சனூசிக்கு முஸ்லிம் அல்லாதாரின் உணர்வுகளை மதிக்க கற்றுத்தரும்படி பாஸ் தலைமையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார், ராயர்!
ராயர் சொல்லுவதில் தவறு ஏதுமில்லை. நாமும் அதனைத்தான் சொல்ல விரும்புகிறோம்.
சனுசியின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. பினாங்கு முப்தி அவர்கள் சமீபத்தில் சனுசியைப்பற்றி பேசும்போது கம்பத்துத் தலைவர் போல் நடந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக் கூறியிருந்தார்! நமக்கும் அதில் மாறுபட்ட கருத்து இல்லை!
பாஸ் தலைமைக்கும் நமக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ராயரின் கோரிக்கையையோ அல்லது நமது கோரிக்கையையோ பாஸ் தலைமை ஏற்றுக்கொள்ளுமா என்பது தான்.
உண்மையைச் சொன்னால் பாஸ் தலைமை, கெடா மாநில மந்திரி பெசாரை வைத்து அந்த மாநிலத்தை பரிட்சார்த்த முறையில் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது! ஆமாம்! இந்து கோவில்களை உடைத்தால் என்ன நடக்கும், தைப்பூசத்திற்கு விடுமுறை கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும், நான்கு இலக்க சூதாட்டத்தை ஒழித்தால் எதிர்வினை எப்படி இருக்கும், உயிரிழந்தவர்களைக் கொள்கலன்களில் அடக்கம் செய்தால் அதன் எதிரொலி எப்படி இருக்கும் (குறிப்பு: முஸ்லிம்களை அவர் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க) - இப்படி அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் பாஸ் கட்சியின் தலைமைக்குத் தெரிந்து தான் - அவர்களின் பூரண கும்ப மரியாதையுடன் தான் - செய்கிறார் என்பதை மறுக்க முடியாது. இதற்குக் காரணம் இவ்வளவு நடந்தும் பாஸ் தலைமை அவரைக் கண்டிக்கவில்லை, வாயைத் திறக்கவில்லை! அவர்களின் பங்கும் நூறு விழுக்காடு இருப்பதாகவே தோன்றுகிறது!
ராயர் அவர்களின் ஆதங்கம் நியாயமானது. ஆனால் அதற்கான பதில் கிடைக்கப் போவதில்லை. பாஸ் ஆட்சியில் எப்படி மற்ற இனத்தவர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள், எப்படி மற்ற இனத்தவர்களின் கலாச்சாரங்கள், மொழிகள், வழிபாடுகளை ஒழிக்கலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பவர்கள், அவர்கள்! அவர்களிடம் போய் நியாயத்தை எதிர்பார்ப்பது அநியாயம் அல்லவா!
எப்படியோ! பாஸ் கட்சி நாட்டை ஆளக்கூடிய வாய்ப்பில்லை! கெடா மாநிலம் கூட அடுத்த தேர்தலில் அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறியே! குறிப்பிட்ட சில முஸ்லிம்களின் ஆதரவை மட்டும் நம்பியிருப்பவர்கள் இவர்கள்! அதுவும் இப்போது கையைவிட்டு நழுவிக் கொண்டிருக்கிறது!
பாஸ் கட்சியினர் திருந்த வழியில்லை! அதேபோல கெடா மாநில மந்திரி பெசாரும் திருந்துவது கடினம்!
No comments:
Post a Comment