Tuesday 30 November 2021

நீச்சலில் தூள் கிளப்பும் பாட்டி!


 பாட்டிக்கு வயதோ 85. பெயரோ பாப்பா.  ஊரோ ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.

வயது 85 என்பது அவருடைய உடம்புக்குத் தான்.  ஆனால் அவருடைய மனமோ பாப்பா மாதிரி தான்! இந்த வயதிலும் நீச்சல் அடித்து தூள் கிளப்பினால் அப்புறம் என்ன அவர் பாப்பா தானே!

பாட்டி 5 வயது பாப்பாவாக இருந்த போது அவர் தகப்பனார் அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். அதிலிருந்து பாட்டிக்கு நீச்சலைத் தவிர வேறு பொழுது போக்கு இல்லை! பாட்டி வெளிநாடுகளில் இருந்திருந்தால் எத்தனையோ பரிசுகளை வாங்கிக் குவித்திருப்பார்!

பாட்டி கூலி வேலை தான் செய்கிறார்.  முதலில் அவருடைய பேரப்பிள்ளைகளுக்குத் தான் நீச்சல் கற்றுக் கொடுத்தார்.  இப்போது அவருடைய ஊரே "நீச்சல் கற்றுக் கொடுங்கள்,பாட்டி!" என்று வரிசைப் பிடித்து நிற்கின்றனர்! 

யாருக்கும் பாட்டி முகம் சுழிப்பதில்லை! தான் கற்றக் கலையை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொள்வதில் அலாதிப் பிரியம்! அதிலும் குறிப்பாக மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்ள அதிக முனைப்புக் காட்டுகின்றனர். யார் கண்டார்?  வருங்காலங்களில் இவர்களில் யாரேனும் ஒருவர் ஒலிம்பிக் போட்டிகளில் கூட பரிசுகள் வாங்கலாம்! எல்லா சாதனைகளும் ஒரு சிறிய இடத்திலிருந்து தானே ஆரம்பமாகிறது! அதனால் எதனையும் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியம் இல்லை!

அவருடைய கிராமத்திலிருந்தும் அக்கம் பக்கத்துக் கிராமத்திலிருந்தும் பாட்டியின் நீச்சலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்! ஆமாம்! 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் பாட்டி மிகச் சாதாரணமாகக்  குதித்து நீச்சல் அடிப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறதாம்!  பாட்டிக்கு அதெல்லாம் சாதாரணம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில்  வளையாது என்பார்கள்.  பாட்டி ஐந்து வயதிலேயே  வளைந்துவிட்டார். இப்போது எண்பத்தைந்து வயதிலும் வளைந்து கொடுக்கிறார்!

பெரியவர்கள் சொல்வது சரிதான். நல்ல பழக்க வழக்கங்களை ஐந்து வயதிலேயே கற்றுக் கொடுங்கள். அது நீண்ட நாள் நிலைத்திருக்கும்.

பாட்டி தூள் கிளப்புகிறார்! நாம்...........?

No comments:

Post a Comment