Saturday 27 November 2021

ஏன் தாய்மொழி பள்ளிகள் வேண்டும்?

 




தாய்மொழிப் பள்ளிகளைப் பற்றியான தவறான தகவல்களை ஒரு சில மலாய் இயக்கங்கள் பரப்பி வருகின்றன. 

அவர்கள் சொல்லி வரும் ஒரு கருத்து நமக்குச் சிரிப்பை ஏற்படுத்துகின்றன. தாய்மொழிப் பள்ளிகளில் படிப்பவர்களின் மலாய் மொழி தகுதி  மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அதனால் அவர்கள் அரசாங்க வேலைகளில் வேலை செய்ய தகுதியற்றவர்களாகி விடுகின்றனர் என்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்!

இப்படி சொல்லுவதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கின்றனர் என்பது அவர்களுக்கும் தெரியாது! நமக்கும் தெரியாது! இப்படி அவதூறான செய்திகளைப் பரப்பும் அவர்களுக்கு நாமும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாம்: தேசிய பள்ளிகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் மலாய் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தானே! அவர்களுக்கு ஏன் அரசாங்க வேலை கிடைக்கவில்லை?  இங்கே உடனே பூமிபுத்ரா உள்ளே வந்து விடுகிறாரே! 

சமீபகாலங்களில் தமிழ்ப்பள்ளிகள் செய்து வருகின்ற சாதனைகள் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்ப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்துவதாகவே தோன்றுகிறது! தேசியப்பள்ளிகள் எந்த ஒரு சிறு சாதனையையும் செய்ய முடியவில்லை!  அந்த உந்துதலுக்கான சூழலும் அங்கு இல்லை! 

எல்லாம் ஒரு வகையான வியாபார நோக்கமாகப் போய்விட்டது! ஆசிரியர்-மாணவர் என்கிற உறவுகள் போய் பள்ளிக்கூடம் என்றாலே ஏதோ பெரியதொரு வியாபார நிலையமாக ஆகிவிட்டது! அர்ப்பணிப்பு குறைந்துவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. தகுதி இல்லாதவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக மாற்றப்பட்டார்கள்! 2A, 3A  எடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் ஆனார்கள்!  இவர்களால் தேசியப்பள்ளிகளின் தரம் குறைந்து போனது என்பதில் ஐயமில்லை!

ஆனால் தமிழ்ப்பள்ளிகளின் தரம் என்றும் உயர்ந்து நிற்கிறது. தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். குறைவான தகுதி உடையோர் யாரும் ஆசிரியர்  கல்லூரிகளில் காலெடுத்து வைக்க முடியாது. அதனால் தான் இன்று  தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் முன்னணியில் நிற்கின்றனர்.

தாய்மொழிப்பள்ளிகள் வேண்டாம் என்று சொல்லுபவர்கள் உண்மையில் பொறாமை கண்கொண்டு தான் பார்க்கின்றனர். தாய்மொழிப் பள்ளிகளின் அபரிதமான வளர்ச்சி அவர்களின் கண்களைக் குத்துகின்றது! தாய்மொழிப்பள்ளிகள் எங்கிருந்தோ இங்குக் கொண்டு  வந்து புகுத்தப்பட்டது அல்ல. அது அவர்களின் உரிமை என்பதனால் தான் அது இத்தனை ஆண்டுகள் இந்த மண்ணில் வேரூன்றி நிற்கின்றது.  இன்னும் நிற்கும்.

இன்று நாட்டில் மலேசியர்களிடையே ஒற்றுமை இல்லாததற்குக் காரணம் தாய்மொழிப்பள்ளிகள் என்று சொல்லுவது வெட்கக் கேடானது. தாய்மொழிச் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம் என்பது இருந்தாலே ஒற்றுமை தானாக வந்துவிடும்! தடைகள் வரும் போது ஒற்றுமை பறிபோகிறது!

தாய்மொழிப்பள்ளிகள் தொடர வேண்டும் என்பது நமது உரிமை!

No comments:

Post a Comment