Saturday 13 November 2021

நீதியரசர் 'ஜேய்பீம்' சந்துரு

 

                                                           நீதியரசர் சந்துரு

ஜேய் பீம் திரைப்படம் வெளியான பின்னர் உலகத் தமிழர்களால் அறியப்படாத ஒரு மனிதர் தீடீரென அறியப்பட்ட ஒரு மனிதராக இன்று வலம் வருகிறார் என்றால் அது  நீதியரசர் சந்துரு.

ஆமாம்! அதற்கு முன்னர் நாம் அவரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. ஒரு திரைப்படம் உலகெங்கிலும் அவரைக் கொண்டு போய் சேர்த்துவிட்டது.

ஒரு மனிதர், தான் வாதாடும் வழக்குகளில், அதுவும் பழங்குடி மக்களின் வழக்குகளில் பணம் வாங்காமல் வாதாடுவது என்பது  மனிதாபிமானத்தால்  மட்டும் தான்.  அந்த மனிதாபிமானம் என்பதெல்லாம் இப்போதும் பல வழக்கறிஞர்களிடம் இல்லை!

அப்படியெல்லாம் மனிதாபிமானம் பேசினால் நம்மை "பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரன்!" என்பார்கள்! அந்த அளவுக்கு நாம் மிகக் குறுகிப் போய்விட்டோம்.

அவர் எல்லாக் காலங்களிலும் ஓர் இலட்சியத்தோடு வாழ்ந்தவர். அன்று அவர் பைசா வாங்காததினால் தான் இன்று இந்த உலகம் அவரைக்  கொண்டாடுகிறது. இந்திய நாடு அளவில் அவர் பேசப்படுகிறார். உலகளவில் இன்று அவரிடம் பலர் பேசுகின்றனர். தமிழர்கள் பலர் அவரிடம் தொடர்பு கொள்கின்றனர். நிறைய பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் தொடர்கின்றன.

அன்று அவர் செங்கேணிக்காக (பார்வதி) வழக்காடி வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. அந்த வெற்றியை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு இருளர் பெண் தானே என்கிற அலட்சியம் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை பேசுவதற்குத் தடையாக இருந்தது.

ஆனால் சந்துரு அது பற்றிக் கவலைப்படவில்லை. அவரது கடமையை அவர் செய்தார். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்கிறது பகவத் கீதை. அவரைப் போல ஒரு சிலராவது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேரம் வரும் போது அதற்கான பலன் ஏதோ ஒரு வகையில்   அவர்களுக்குக் கிடைக்கத்தான் செய்யும். அதனை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அவர் வழக்கறிஞராக  இருந்த போது வழக்குகள் எந்த அளவு இழுக்கடிக்கப்படுகின்றன. அதனால் நீதி கிடைக்காமல் போனவர்கள் பலர் என அறிந்திருந்தார்.  அதனால் தான் நீதியரசராக இருந்த போது அனைத்து வழக்குகளும் ஒரு வாரம், இரண்டு வாரம் அல்லது மூன்று வாரத்திற்குள் முடிக்கும்படியான ஒரு சூழலை உருவாக்கினார். அவர் தனது சுமார் ஏழாண்டுகாலம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ஏறக்குறைய 96,000 வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்! எந்த நீதிபதிகளும் செய்ய முடியாத ஒரு சாதனை!

நீதியரசர் சந்துரு இப்போது ஓய்வு பெற்ற நீதிபதி. வேலை வெட்டி இல்லாதவர் என்று நினைக்கக் கூடாது. மாணவப் பருவத்திலிருந்தே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று தொடர்ந்து சமூக நீதிக்காகப் போராடியவர். இப்போது மட்டும் என்ன அவருடைய கையும் காலும் சும்மாவா இருக்கப் போகிறது!

No comments:

Post a Comment