விலை உயர்ந்த சமையல் எண்ணைய் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. ஏழை எளியவர் வாங்கும் பிளாஸ்டிக் பைகளில் வரும் சமையல் எண்ணைய் கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன.
இது எண்ணெய் பதுக்கல் நாடகம் என்பது தான் பெரும்பாலோரின் கருத்து. அதுவும் பெருநாள்கள் வரும் போது இது போன்ற பதுக்கல்களும் சேர்ந்து வருவது இயல்பு தான்.
தீபாவளி கொண்டாடும் மக்கள் அப்படி ஒன்றும் பெரும் பணக்காரர்கள் அல்ல. பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்கள். அதுவும் இந்த ஆண்டு பலருக்கு வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லை, குடும்பத்தை நடத்துவதற்கே அல்லல் படுகின்றனர். இந்த நேரத்தில் இது போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் - இது விலையேற்றம் அல்ல , பதுக்கல் - செய்வது கொடிதிலும் கொடிது மிகக் கொடிது.
விழாக்காலங்களில் பொருள்களின் விலையேற்றுவது வியாபாரிகளுக்குக் கைவந்த கலை. அதனால் தான் ஒவ்வொரு பெருநாட்களின் போதும் அரசாங்கம் தலையிட்டு அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பாராட்டுகிறோம்!
ஆனால் இந்த ஆண்டு என்னவாயிற்று? பொருளே சந்தையில் இல்லை என்றால் அது யாருடைய குற்றம்? அரசாங்கம் ஏன் அதில் அக்கறைக் காட்டவில்லை? பொதுவாக இந்தியர் என்றாலே அரசாங்கம் அக்கறைக் காட்டுவதில்லை. அதுவும் பாஸ் கட்சியினர் அரசாங்கத்தில் இருப்பதால் நடக்கக் கூடாததெல்லாம் நடக்கும் என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த பிளாஸ்டிக் பைகளில் உள்ள எண்ணெய் என்பது இந்தியர்கள் மட்டும் அல்ல ஏழை மலாய்க்காரர்களும் பயனீட்டாளர்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் தான் பெரும்பாலும் விலைகுறைவான எண்ணெயைப் பயன்படுத்துபவர்கள். அவர்களின் வாயிலும் வயிற்றிலும் அடிப்பது யாருக்கும் நல்லதல்ல.
ஆனாலும் அரசாங்கம் அதைச் செய்கிறது! இது நாள் வரை முடிந்தவரை பெருநாள் காலங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தனர். முகைதீன் பிரதமராக பதவியேற்ற பின் அனைத்தும் பறிபோயிற்று! அவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாலான நேரத்தை அதற்காகவே ஒதுக்கிவிட்டார்! பிரதமர் பதவி மாற்றம் என்றாலும் அரசாங்க அதிகாரிகள் அதே அதிகாரிகள் தாம். இவர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்கள் ஏன் தங்களது கடமைகளைச் செய்யவில்லை என்பது நமக்கும் புரியவில்லை.
ஒரு விஷயத்தில் மட்டும் அரசாங்க அதிகாரிகள் மிகவும் உஷாராக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கான பெருநாட்கள் என்றால் அதில் எந்த தவறும் நேர்வதில்லை. காரணம் அவர்களும் பயனீட்டாளர்கள் தான் என்பதை மட்டும் அவர்கள் மறப்பதில்லை!
நிச்சயமாக அவர்கள் தங்களது கடமைகளைச் செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். அதுவே தவறு தான். அவர்களுக்கான சம்பளம் என்பது முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்தும் வரியாக வருகிறது என்பதை அவர்கள் மறக்கவே கூடாது.
இனி வருங்காலங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
சமையல் எண்ணெய் தீரலாம்! ஆனால் சமையல் தீராது!
No comments:
Post a Comment