Friday 12 November 2021

செட்டித்திடல் பெயர் தொடர வேண்டும்!

 

ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. "செட்டித் திடல்" என்னும் பெயரை ஏன் கிள்ளான் நகராண்மைக் கழகம் மாற்ற வேண்டும் என்பது நமக்குப் புரியாத புதிர்.

நினைத்தால் நாங்கள் சரித்திரத்தை மாற்றுவோம் என்கிற ஆணவப் போக்கு என்பது சரியான போக்கு அல்ல. ஏற்கனவே இந்த சமுதாயம் பல வழிகளில் நமது சரித்திரத்தை இழந்திருக்கிறது. சரித்திரத்தை அப்பால் தூக்கி வீசிவிட்டு நாங்கள் சரித்திரமே இல்லாதவர்கள் என்று நிருபிக்க முயலுகிறதோ  நகராண்மைக் கழகம்?

150 ஆண்டு கால பழமை வாய்ந்த  ஸ்ரீநகர தண்டாயுதபாணி இந்து ஆலயத்தினர் இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு என்பது சரியானது தான். காரணம் அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர். அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு அந்த நிலத்தை தானமாகக் கொடுத்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு அந்த நிலம் தேவைப்பட்டது.

அந்த நிலம் அந்தக் காலத்திலிருந்தே "பாடாங் செட்டி" அல்லது செட்டித் திடல்  என்கிற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. விளையாட்டுத் திடலும் அருகே இருந்ததால் அப்படி அழைக்கப்பட்டது.

ஆனால் எந்த சம்பந்தமுமில்லாமல் ஏன் இந்தப் பெயர் மாற்றம் இப்போது தேவைப்படுகிறது என்பதே  நமது கேள்வி. அந்த நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல. பிரிட்டிஷாருக்கு அந்த கோவில் நிர்வாகம் தானமாக கொடுத்த நிலம்.

இந்த விஷயத்தில் கோவில் நிர்வாகம் மட்டுமே அந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. நமக்கு உள்ளூர் அரசியல் தெரியவில்லை. மலேசிய சீனர் சங்கமும் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. மற்றபடி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் யாரும் வாயைத் திறக்கவில்லை!

பெயர் மாற்றம் தேவை இல்லாத மாற்றம்! செட்டித்திடல் என்கிற பெயரே நிலைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்! 

No comments:

Post a Comment