Sunday 28 November 2021

ஏன் இந்த புறக்கணிப்பு?

பகாங் மாநிலத்தில் நடந்த சம்பவம் இது.

இரண்டு சீன பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்ட பெயர்பலகையில் பள்ளிகளின் பெயர்கள் சீன மொழியில் இல்லை!  தேசிய மொழியிலும், ஜாவி மொழியிலும் எழுதப்பட்டதோடு சரி!  சீன மொழிப்பள்ளி என்று தெரிந்தும் எகத்தாளத்தோடு சீன மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது! பள்ளிகளின் பெயர்:  SJK (C)  Yoke Hwa and SJK (C) Kee Wha இரண்டுமே சீனப்பள்ளிகள்.

ஏன் சீன மொழி பெயர் பலகையில் இல்லை என்பதற்கு வேவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அது பகாங் அரசாங்கத்தின் கொள்கை என்பது ஒரு வாதம். அதாவது ஜாவி மொழி அவசியம் இருக்க வேண்டும். இருந்துவிட்டுப் போகட்டும்! அதனாலென்ன?  சீனப்பள்ளிகளுக்கு அதன் சீன  மொழி இல்லாமல் அது என்ன சீனப்பள்ளி?

பொதுவாகவே அதனைப் பார்க்கும் போது நமக்கு அறிவுகெட்டத் தனமாகத் தோன்றினாலும் கல்வி அமைச்சில் பணிபுரிபவர்கள் ஏன் இப்படி அற்பத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றினாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெயர் பலகையைச் செய்பவர்கள் ஒரு பெயர்பலகைக்கு இரண்டாயிரம், மூவாயிரம் என்று வாங்கி விடுவார்கள்! அரசாங்கப் பணம் தானே! அதனையே இரண்டு முறை செய்தால் அவர்களுக்கு இலாபம் தானே! இது தான் இங்குள்ள இரகசியம்!

கல்வி அமைச்சைச் சேர்ந்தவர்கள் எதையும் அறியாதவர்களா? சீன மொழியோ, தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ் மொழியோ இல்லையென்றால் நிச்சயம் அது ஒரு அரசியல் பிரச்சனையாக மாறிவிடும்  என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த பெயர் பலகைகளை மாற்றித்தான் ஆக வேண்டும் என்பதும்  அவர்களுக்குத் தெரியும்.  ஆனால் அப்படி செய்துவிட்டு இப்படியும் அப்படியும் ஆட்டம் காட்டிவிட்டு  கடைசியில் மாற்றித்தான் ஆக வேண்டும்!  வேறு வழியில்லை!

இது போன்ற தேவையற்ற பிரச்சனைகளையெல்லாம் எழுப்பிவிட்டு கடைசியில் தாய்மொழி பள்ளிகளால் தான் மக்களிடையே ஒற்றுமை இல்லை என்றும் அவர்களே கூறுகிறார்கள்!   இந்த ஒரு நிகழ்வே போதும்! மக்களிடையே விஷ விதையை விதைப்பவர் யார் என்று. பார்க்கப் போனால் இது ஒரு பிரச்சனையே அல்ல!

நமது உரிமைகள் மீது கைவைப்பதே அத்து மீறலாகும்! ஒற்றுமையை வளர்க்க வேண்டிய கல்வி அமைச்சு பிரிவினையை ஏற்படுத்த நினைப்பது   விரும்பத்தக்கது அல்ல.

இது போன்ற பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.  இதனை வளர்ப்பவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள் நேரம் கெட்ட நேரம் என்றால் எல்லார் காலிலும் வீழ்வார்கள்!

இது பிரச்சனையே அல்ல! தேவையற்ற மொழி புறக்கணிப்பு வேண்டாம் என்பதே நமது கோரிக்கை!

No comments:

Post a Comment