Monday 8 November 2021

வீரத்தாய் பார்வதி ராசாக்கண்ணு!



 

                                   நிஜ கதாபாத்திரம்: பார்வதி ராசாக்கண்ணு

ஜேய்பீம் திரைப்படம் பற்றியான விமர்சனங்கள் மக்களிடையே இப்போது பேசும்பொருளாக மாறியிருக்கின்றன. இந்த விமர்சனங்களின் மூலம் அல்லது இந்த திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் நம்மில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம். ஏற்பட வேண்டும். மனிதர்களாக பிறந்துவிட்டோம். சக மனிதர்களை மனிதர்களாக மதித்தால் போதும். மிதிக்க வேண்டாம்  அது தான் இந்த படத்தின் ஒருவரிக்கதை.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பவரின்  பெயர் லிஜோமோள் ஜோஸ்.நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு என்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்றிருக்கிறார்.

ஆனால் இங்கு நடிக்கத் தேவையில்லாத ஒரு பெண்மணியை மறந்துவிடக் கூடாது. அவர் தான் மேலே காணப்படும் பார்வதி ராசாக்கண்ணு. நேரடியாக துயரத்தை அனுபவித்தவர். கணவர் பட்ட துன்பங்களையும் நேரில்  பார்த்தவர். உதவ ஆளில்லை. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  வயிற்றிலும் அடித்துக் கொள்ள முடியாத ஒரு சூழல். இருளர் மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லை.

அப்படித்தான் அவர் வாழ்ந்திருக்கிறார்.  தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று பதிமூன்று ஆண்டுகள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட இலஞ்சம் எதுவும் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை! நீதி மட்டுமே தேவை என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த நேரத்தில் படத்தில் வரும் ஒரு வசனத்தை  நினைவூட்டுகிறேன். "நான் வேலை செய்யுறேன். நான் ஏன் திருட வேண்டும்?" இப்படி ஒரு கேள்வியை பழங்குடியினரால் மட்டுமே கேட்க முடியும்! வேறு யாராலும் கேட்க முடியாது!

அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது என்பது சாதாரண விடயமல்ல. அதுவும் ஓர் இருளர் பெண்ணாள்.  அதனால் தான் அதிகார வர்க்கத்தினர்  கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஊரை விட்டே ஓடிவிடும் பழக்கம் இதற்கு முன்னாள் நடந்திருக்கிறது. இப்போதும் நடக்கலாம். ஆனால் இனிமேல் நடக்காது என நம்பலாம். அதற்குக் காரணம் மேலே படத்தில் காணப்படும் வீர இருளர் பெண்மணி தொடுத்த வழக்கு; நீண்ட நாள் போரட்டம்.  13 ஆண்டுகள் காத்திருப்பு.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அது ஓரளவு இந்த படத்தின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. சூர்யா-ஜோதிகா தம்பதியினர் நிச்சயமாக  பெருமைப்படலாம்!

No comments:

Post a Comment