Sunday 7 November 2021

வட்டி முதலைகள்!


 வட்டி முதலைகள் பற்றியான செய்திகளைப் படிக்கும் போது நமக்கு அவர்கள் மீது வருவது மிக மிகக் கடுமையான கோபம் தான்.

அந்த அளவுக்கு அவர்கள் மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் ஒரு கும்பல் என்பது நமக்குத் தெரிகிறது. எங்குப் பார்த்தாலும் அவர்களின் விளம்பரங்கள் கண்களுக்குத் தெரிகின்றன.

இவர்களின் விளம்பரங்களைப் பார்க்கின்ற போது அவர்கள் மீது நமக்கு எந்த வித சந்தேகமும் வருவதில்லை. அந்த அளவுக்கு மக்கள் சந்தேகப்பட முடியாத அள்வுக்கு அவர்கள் நல்லவர்களாகவே தெரிகின்றனர்.

ஆனால் அவர்களிடம் பணம் வாங்கிய அடுத்த நிமிடமே அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்! முதலையின் வாயில் அகப்பட்ட பிறகு தப்பிக்க எந்த வழியும் இல்லை! அவர்களிடமிருந்து வாங்கிய அசலும் வட்டியும் கட்டி முடித்த பின்னரும் அவர்கள் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அவர்களிடம் வாங்கிய கடனுக்கும் முடிவே  கிடையாது! கொடுக்கவில்லை என்று சொல்லி   வீட்டு  சுவர்களில்  சிகப்பு சாயம் அடிப்பது கார்களின் மேல் சாயத்தை அடிப்பது - இவைகளெல்லாம் தொடர் கதையாகவே நடந்து கொண்டிருக்கும்!

அதனால் தான் இந்த வட்டி முதலைகளின் மீது ஏதேனும் வன்முறை நடந்தால் நமக்கு அவர்கள் மீது எந்த அனுதாபமும் ஏற்படுவதில்லை. ஆகக் கடைசியாக படித்த ஒரு செய்தி வட்டி முதலை ஒருவர் பாராங் கத்தியால் கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தி நமக்கு எந்த அனுதாபத்தையும் ஏற்படுத்தவில்லை.

நமது கோபம் எல்லாம் காவல்துறை மீது தான்.  எத்தனையோ ரகசியக் கும்பல்களை எல்லாம் பிடித்து விடும் காவல்துறை ஏன் இவர்களை மட்டும் விட்டு வைத்திருக்கிறது என்பது புரியாத புதிராகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இன்னும் வளர்க்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதும் மிக வருத்ததிற்குரிய செய்தி.

இந்த கும்பல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் நாம் கொடுக்கும் செய்தி. ஏற்கனவே பலர் இவர்களைப்பற்றி குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. காவல்துறை கடுமையாக இல்லை என்றால் அரசாங்கம் அவ்வளவாக நெருக்குதல் கொடுக்கவில்லை என்பது தான் பொருள்!

வட்டி முதலைகளிடமிருந்து பெறும் கடன் பெரும்பாலும் அரசியல்வாதிகளிடமிருந்து வெளியாகின்ற  பணம் என்பதாகத்தான் மக்களிடையே பேசப்படுகின்றது. ஆக அரசாங்கம் இது பற்றி கண்டு கொள்ளப் போவதில்லை.

மக்களைச் சுரண்டும் இந்த தொழில் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment