Thursday 25 November 2021

கிடு கிடு உயர்வு!

விலைகளெல்லாம் உயர்ந்துவிட்டன! 

 மற்ற காலங்களில் உயர்வதற்கும் இந்த கோவிட்-19 காலத்தில் உயர்வதற்கும் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு. 

பொதுவாக திருவிழாக் காலங்களில் வியாபாரிகள் விலைகளை ஏற்றுவார்கள். இதெல்லாம் நமக்குப் பழக்கமாகிவிட்டது! வியாபாரிகள் விலைகளை ஏற்றுவதும் அரசாங்கம் தலையிட்டு விலைகளைச் சமநிலைப் படுத்துவதும் வழக்கமாக நாம் அனுபவமாகக் கொண்டிருக்கிறோம்!

ஆனால் இந்த முறை விலையேற்றம் என்பது நாம் எதிர்பார்க்காதது என்று சொல்வதற்கில்லை! எதிர்பார்த்தது தான்! சீனப் புத்தாண்டு விரைவில் வருகிறது. கிறிஸ்துமஸ் பெருநாளும் விரைவில் வருகிறது.  அதுமட்டும் அல்ல. 

கோவிட்-19 தொற்று இன்னும் ஒரு முடிவுக்கு வராத நேரம். அதன் வீச்சு இன்னும் குறையவில்லை. இப்போது தான் மக்கள் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கின்றனர். அதிலும் இரண்டு பேர் வேலை செய்கின்ற நேரத்தில் ஒருவர் வேலை செய்தால் கூட ஏதோ குடும்பம் சமாளிக்கும் என்கிற நிலைமை தான்.

இந்த நேரத்தில் அத்தியாவசியமான பொருள்களின் வேலை ஏற்றம் கண்டால் எப்படி சமாளிப்பது என்று ஒவ்வொரு குடும்பமும் தடுமாறுவது இயல்பு தான்.

குறை என்று சொன்னால் அரசாங்கம் தான் இந்த விலைக் கட்டுப்பாட்டை முன்னமையே உணர்ந்து, திட்டங்கள் போட்டு அதனைக் களைய முயற்சி செய்திருக்க வேண்டும்.  எந்த முயற்சியும் செய்யாமல் இப்போது யார் யாரையோ குற்றம் சாட்டுவது சரியான வழி அல்ல.

நம்மாலும்  பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்று: மழை காலம். நமது பிரதான உற்பத்தி  கேந்திரம் என்பது கேமரன்மலை. உற்பத்திகளைக் கீழே கொண்டுவர பல தடங்கல்கள் நிலச் சரிவுகள். போக்குவரத்துத்  தடங்கல்கள் என்று பல பின்னடைவுகள். நாம் உள்ளூர் உற்பத்திகளை வரவேற்பதில்லை. வெளிநாடுகளிலிருந்து வருவதைப் பெருமையாகக் கருதுகிறோம்!  வெளிநாட்டுப் பொருள்கள் இப்போது தாராளமாக வருவதற்கான வழியில்லை. நிறையக் கட்டுப்பாடுகள். தொற்று முடியும்வரை பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும். அரசாங்கம் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்!

காய்கறிகளின் விலையேற்றத்தால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். 200% விழுக்காடு உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது தான்! அரசாங்கம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. மக்களை  வெவ்வேறு யூகங்களைப் பின்பற்றுங்கள் என்று நாமும் சொல்லலாம். உங்களால் முடிந்தால் வீட்டிலேயே குறைந்தபட்சம் ஒரு சில பயிர்களையாவது பயிரிடுங்கள் என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. பூஜாடிகளைப் பயன்படுத்தி எந்த காய்கறிகளை வளர்க்க முடியுமோ அதனை வளருங்கள். முனகிக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருப்பதால் பயனில்லை!

இது காய்கறிகளின்  விலையைக் குறைக்கும் என்று சொல்ல வரவில்லை. குறைந்தபட்சம் உங்கள் பட்டினியைப் போக்கும்!

No comments:

Post a Comment