Friday 26 November 2021

ஏன் இந்த வன்மம்?

 

     நன்றி: வணக்கம் மலேசியா

எத்தனையோ,  நம்மால் புரிந்த கொள்ள முடியாத விஷயங்கள்,  நம் கண் முன்னே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதில் ஒன்று அப்பாவி பிராணிகளைத் துன்புறுத்தி சாகடிப்பது.  இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இது ஒரு  தமாஷான காரியமாக நினைக்கிறார்களா அல்லது அதனை ஒரு வீரமாக நினைத்துச் செயல்படுகிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை! வீரம் என்றால் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஒரு வயதானப் பெண்மணி தனது ஊன்றுகோலால் ஒரு சிறுத்தையை விரட்டி அடித்தாரே அது வீரம்! ஒரு பலவீனமான வளர்ப்புப் பிராணியை அடித்துக் கொல்வது, அப்படிச் செய்பவர்களை, கொடூரர்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. இது வீரமும் இல்லை, விவேகமும் இல்லை!

நாய்கள் நம் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகள். அதனால் சில பிரச்சனைகள் வரலாம். வேண்டாமென்றால் தக்கவர்களிடம் ஒப்படைத்து விடலாம். இல்லையென்றால் "எப்படியாவது போ!" என்று ஒரு சிலர் செய்வது போல எங்கேயோ விட்டுவிட்டு வந்து விடலாம்! அப்படித்தான் பலர் செய்கிறார்கள். ஆனால் வேண்டாமென்று யாரும் அடித்துக் கொல்வதில்லை! அது குற்றமும் கூட! அப்படி அடித்துக் கொல்வதற்கு நம் மனமும் இடம் தராது என்பது தான் உண்மை.

ஏனோ தெரியவில்லை. மனிதனின் வன்மம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அல்லது ஏற்கனவே உள்ளது தானா, நமக்குத் தான் தெரியவில்லையா என்பதும் புரியவில்லை!

மேலே காணப்படும் அந்த நிகழ்வு என்று எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் அந்த நபர் யாரென்றும் தெரியவில்லை.  ஆனால் காவல்துறை அதனைக் கண்டுபிடித்து விடும் என்று நம்பலாம்! யாரும் நீதியின் கண்களிலிருந்து தப்பிவிட முடியாது!

ஒரு பலவீனமான வளர்ப்புப் பிராணியை இப்படி அடித்துக் கொள்வதைப் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. நெஞ்சம் கனக்கிறது.

ஏன் இந்த வன்மம் என்று கேட்கத்தான் முடியும்! வேறு என்ன செய்ய முடியும்! செய்வது காவல்துறையின் கையில்!

No comments:

Post a Comment