மலேசியர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாக சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் ஒர் அதிர்ச்சி தகவலை ஒரு ஊடகப் பேட்டியில் கூறியிருக்கிறார்!
ஆரோக்கியமாக வாழவும், உடலை கட்டுப்கோப்பாக வைத்துக் கொள்ளவும், ஆண்டுக்கு ஒருமுறையாவது மருத்தவரிடம் உடம்பை பரிசோதனை செய்யவும் - பொதுவாக மக்கள் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அது நமக்கே தெரியும். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்!
இன்றைய நிலையில் மலேசியா ஆரோக்கிய மற்ற மக்களைக் கொண்ட ஒரு நாடு என்பதாகத்தான் ஒரு கருத்து நிலவுகிறது. உடல்பருமன் அதிகமாக உள்ளவர்கள், இருதய பாதிப்பு நோய் கொண்டவர்கள் அதிகம் என்பது தான் நமது நிலை.
"மலேசியாவில் இருவருக்கு ஒருவர் உடல்பருமன், அதிக எடையைக் கொண்டவர்கள். அதே போல நான்கு பேரில் ஒருவர் எந்த உடல் உழைப்பும் இல்லாதவர்கள். இருபது பேரில் ஒருவர் தான் சரியான உணவு பழக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்" என்கிறார் சுகாதார அமைச்சர்.
உண்மை தான். அவரின் கருத்தை எதிர்த்துப் பேச யாரும் ஆளில்லை. நாம் அப்படித்தான் இருக்கிறோம். புள்ளி விபரங்கள் அதைத்தான் கூறுகின்றன.
கோவிட்-19 தொற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் நமக்குக் காதில் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கூட்டம் கூடும் இடங்களில் போவதை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். வெளியே அதிகம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ளலாம். உணவகங்களில் புகைப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இவைகள் எல்லாம் அரசாங்கம் சொல்லித் தான் அல்லது சட்டம் போட்டுத்தான் நிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் நாம் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்!
ஜப்பான் நாட்டில் உலகளவில் நடைபெறும் மாபெரும் ஒலிம்பிக் விளையாட்டை நடத்தியது. அப்போதும் கூட கோவிட்-19 பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு என்ன காரணம்? ஜப்பானிய மக்கள் அரசாங்கம் சொன்னதை கடைப்பிடித்தார்கள். யாரும் எந்த அபராதத்தையும் கட்டவில்லை. தினசரி வாழ்க்கையை சரியான முறையில் கடைப்பிடித்தாலே போதும். பெரிதாக எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
எல்லா நிலையிலும் நாம் ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். தேகப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடல் பருமன், அதிக எடை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை மறக்காமல் இருக்க வேண்டும்! அது போதும்!
No comments:
Post a Comment