Friday, 30 September 2022
நானும் அப்படித்தான் நம்பினேன்!
Thursday, 29 September 2022
மழை வராது!
மழைக்காலம் என்பதால் இந்த ஆண்டு தேர்தல் வேண்டாம் என்பதாக எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லிவிட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த ஆண்டு தேர்தல் வைப்பதே நல்லது என்று கூறியிருக்கிறார். ஏன்? நம்ம டாக்டர் மகாதிர் கூட இப்போது மழைக்காலம் அதனால் தேர்தல் அடுத்த ஆண்டு வைப்பதே நல்லது என்றும் ஆலோசனைக் கூறியிருக்கிறார்.
நமது பாஸ் கட்சியினரும் அடுத்த ஆண்டு தேர்தல் வைப்பதே நல்லது என்று பிரதமருக்கு யோசனைக் கூறுகின்றனர். பினாங்கு மாநிலமோ இந்த ஆண்டு தேர்தல் என்றால் சட்டமன்ற தேர்தலை நடத்தமாட்டோம் என்று சொல்லி வருகின்றனர். நெகிரி செம்பிலானும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம். வாய்ப்பு உண்டு.
மலேசியர்களுக்கும் "இப்போதே தேர்தல் நடத்த வேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை! அடுத்த ஆண்டே நடத்தலாம். ஏன் இந்த மழைக்காலத்தில் அவதிப்பட வேண்டும்?" என்கிற கேள்வி உண்டு.
இன்று நாட்டில் பல இடங்களில் திடீர் திடீரென மழை பெய்கிறது. வெள்ளம் ஏறுகிறது. வீடுகளில் வெள்ளம் புகுந்துவிட்டது. கார்கள் தண்ணீரில் மிதக்கின்றன போன்ற செய்திகள் அன்றாடச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. மழை என்றாலே பயம் வருகிறது. எந்த நேரத்தில் மழை நீர் வீட்டினுள் புகுமோ என்கிற பயம் ஏற்படுகிறது!
இந்த நேரத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இந்த ஆண்டு தேர்தல் வைக்கலாம் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறார். அவரின் கருத்துப்படி மழைக்காலம் என்பது இப்போது இல்லை. நவம்பர் மாதத்திற்குப் பின்னர் தான் வரும் என்கிறார்.
வருடா வருடம் அப்படித்தான் வரும். ஆனால் இப்போது நிலைமையே மாறிவிட்டது. இப்போது பல இடங்களில் மழை, வெள்ளம் என்று செய்திகள் வருகின்றன. வெளி மாநிலங்களுக்குப் போக வேண்டுமென்றால் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் தான் போக முடிகிறது.
ஆய்வாளர் சொல்லுவது சரிதான் என்றாலும் இப்போது நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் சொல்லுவதைப் பார்த்தால் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டும். இன்றைய நிலையில் அது முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் நினைத்தால் பூனையை யானையாக்க முடியும், யானையைப் பூனையாக்க முடியும்! அந்த ஆற்றல் அவர்களிடம் உண்டு!
நமக்கோ, மழை வருமா, வராதா என்பதைவிட தேர்தல் எந்த நேரத்தில் வரவேண்டுமோ அந்த நேரத்தில் நடத்தினால் போதும் என்பது தான்! அப்போது மழை வந்தால் வரட்டும்! அதனாலென்ன?
Wednesday, 28 September 2022
இதுவா வியாபாரம்?
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நண்பர் எப்படி வியாபாரம் செய்தார் என்று அவர் மனைவி சொன்ன போது 'அட! இப்படியுமா?' என்று தான் நினைக்கத் தோன்றியது!
எல்லா வியாபார விதிமுறைகளையுமே மீறிவிட்டார்! கடைசியில் என்ன ஆனது? எல்லாமே ஆகிவிட்டது! எதுவுமே மிஞ்சவில்லை! அனைத்தையும் இழந்துவிட்டு 'நான் படிக்காதவன்!' என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறார்! மற்றவர்களிடமிருந்து அனுதாபம் தேடுகிறார்!
படிக்காதவர்கள் வியாபாரம் செய்வது என்பது ஒன்றும் புதிதல்ல. உலகம் அனைத்திலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவருக்கு ஆங்கிலம் தான் தெரியவில்லையே தவிர தமிழ் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தாய் மொழி தெரிந்தாலே போதும் உலகையே ஆளலாம்! வியாபாரத்தை ஆள முடியாதா? தமிழ் நாட்டில் ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன.
வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்கு இவரின் தோல்விக்கதை நிச்சயமாக ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்பது தான் நமது அச்சம். கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மனிதராக இவர் இருந்திருக்கிறார்! இவர் வியாபாரி என்பதற்கான அடையாளமே இவரிடம் இருந்ததில்லை! அப்புறம் என்ன வியாபாரம் செய்தார்?
உண்மையைச் சொன்னால் இந்த நண்பர் தன்னை ஓரு தோல்வியாளர் என்கிற எண்ணத்தை அவர் எப்படியோ தனது மனதில் விதைத்து விட்டார். அவர் மனைவி சொல்லுகின்றபடி இவர் தனது வியாரத்தை இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்! ஒரு தொழிலும் அவர் நீடித்து நிற்கவில்லை. இப்படி செய்ததைவிட ஒரு வியாபாரத்தை எடுத்துக் கொண்டு அதிலேயே அவர் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். இப்படி ஒரே வியாபாரத்தில் அவர் கவனம் செலுத்தியிருந்தால் அந்த வியாபாரம் அவருக்குக் கைக்கொடுத்திருக்கும். உடனே கோடிகளைப் பார்க்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. ஆனால் அது அவரை வாழ வைத்திருக்கும்.
நண்பரின் குறைகள் என்ன? அவரிடம் பணம் இருந்தது. வியாபாரத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். பணம் இல்லாத போது தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்தார். அனைத்தையும் இழந்த பின்னர் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டார். நல்ல வேளை அவரின் உறவுகள் யாரும் அவரிடம் நெருங்கவில்லை. நெருங்கியிருந்தால் அவர்களையும் நொறுங்க வைத்திருப்பார்!
நண்பருக்குத் திறமைகள் உண்டு. ஆனால் அவரது திறமையை ஒரே தொழிலில் காட்டவில்லை. எல்லாத் தொழில்களும் அவருக்குத் தெரிந்த தொழிலாக இருக்க முடியாது. அவருக்கு இருந்த அனுபவத்தில் அவருக்கு ஏற்ற தொழிலில் அவர் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம். கையில் பணம் இருந்ததால் ஒவ்வொரு வியாபாரமாக மாற்றிக் கொண்டே வந்து கடைசியில் மாட்டிக் கொண்டார். எல்லாவற்றையும் இழந்த பிறகு "நான் படிக்காதவன்" என்று ஒரு முத்திரையைக் குத்துகிறார்!
ஒன்று சொல்லுகிறேன்: வியாபாரம் யாரையும் கைவிட்டதில்லை! நாம் தான் வியாபாரத்தைக் கை விடுகிறோம்!
Tuesday, 27 September 2022
தமிழ்ப்பள்ளியின் உரிமம் ரத்து
நன்றி: வணக்கம் மலேசியா தமிழ்ப்பள்ளியின் உரிமம் ரத்து
கல்வி அமைச்சின் அராஜகமாகத்தான் நாம் இதனைப் பார்க்கிறோம். பாரிசான் அரசாங்கத்தில், அவர்களோடு சேர்ந்து கொண்டு ம.இ.கா.வும், தங்களது ஆணவத்தைக் காட்டுகின்ற ஒரு செயலாகவே இது தெரிகிறது.
கோலகெட்டில் Badenoch தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமம் கல்வி அமைச்சினால் ரத்து செய்யப்பட்டதை அறியும் போது கல்வி அமைச்சின் அதிகாரத் துஷ்பிரயோகமாகத்தான் நம்மால் இதனைப் பார்க்க முடிகிறது.
பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லை. அதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தத் தோட்ட தமிழ்ப்பள்ளியின் உரிமத்தைப் பயன்படுத்தி பாகான் டாலாமில் ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் நிலத்தில் பெட்னோக் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க மேலாளர் வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மேலாளர் வாரியம் ரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு கடிதம் அனுப்பியிருக்கிறது.
ஏற்கனவே மேலாளர் வாரியத்திற்கு அனுமதி கொடுத்த கல்வி அமைச்சு இப்போது அதனை ரத்து செய்திருப்பதற்கான காரணம் தெரியவில்லை. அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்றால் பெட்னோக் தமிழ்ப்பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பள்ளி நிரந்தரமாக மூடப்படுகிறது என்பது தான் அதன் பொருள்.
இதற்கிடையே பள்ளி மூடப்படுவதை எதிர்த்து, கல்வி அமைச்சின் முடிவுக்கு எதிராக, வழக்குத் தொடுக்கப்படும் என்பதாகக் கூறுகிறார் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஷ் முனியாண்டி.
அதனை நாம் வரவேற்கிறோம். அதோடு மட்டும் அல்ல. நமது சமுதாயமும் அதற்கான ஆதரவை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள் பல இருக்கின்றன. குறிப்பாக முப்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் அதிகமாகவே இருக்கின்றன. இதற்கான காரணங்களை நாம் அறிந்தது தான். தோட்டப்புறங்களிலிருந்து மக்கள் வெளியேறிய பின்னர் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயின.
இப்போது ஒரு பள்ளியை மூடினால் பின்னர் கல்வி அமைச்சு அதையே சாக்காக வைத்துக் கொண்டு குறைவான எண்ணிக்கை கொண்ட மற்ற பள்ளிகளையும் மூடுகின்ற ஒரு நிலை ஏற்படும்.
இந்தப் பள்ளியின் உரிமம் ரத்துச் செய்யப்படுமானால் நாட்டில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் இதுவே ஒரு முன்னுதாரணமாகி விடும். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
நமது எதிர்ப்பினைத் தெரிவிப்பது நமது கடமை!
Monday, 26 September 2022
இவர்களை ஏன் ஆதரிக்க வேண்டும்?
ம.இ.கா. வை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ம.இ.கா.வினர் கூறி வருகின்றனர்.
ஆனால் அவர்களின் செயல்பாடுகள் எந்த வகையிலும் இந்திய மக்களுக்குப் பயன் தரும் வகையில் இல்லை என்பது தான் இன்றைய நிலை.
சமீபத்திய மெட் ரிகுலேஷன் நுழைவு பற்றி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வாய் மூடி மௌனியாகத்தான் இருந்தார்கள்! இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்கிற கூச்சநாச்சம் எதுவுமில்லாமல் நமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்!
இவர்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமாம்! இல்லாமல் போனால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுமாம்! இப்போது மட்டும் என்ன அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே!
ஏம்ஸ்ட் கல்லூரியில் மருத்துவம் பயிலுகின்ற ஒரு மாணவன். தன்னுடைய கல்வி கட்டணத்தைக் கட்ட இயலாத நிலை. கட்ட வேண்டியது 80,000 வெள்ளி. அவனால் கட்ட முடியவில்லை. அந்த மாணவனின் பெற்றோர்களால் கட்ட முடியாததால் பல இடங்களில் மோதி பார்க்கின்றனர். அதில் ம.இ.கா.வும் அடங்கும். ஆனால் அவர்களுக்கு உதவ யாரும் தயாராக இல்லை. கடைசியாக எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான பினாங்கு துணை முதல்வர், பேராசிரியர் இராமசாமி அவர்கள் அந்த மாணவனுக்கு உதவுயிருக்கின்றார்! இந்திய மாணவராயிற்றே என்கிற கரிசனம் அவருக்கு இருந்தது.
உதவுவார்கள் என்று நம்பியது ம.இ.கா.வை. ஆனால் எதிர்க்கட்சி தான் அவர்களுக்கு உதவியது என அறியும் போது நமக்கு ம.இ.கா. மீது கோபம் தான். இந்தியர்களை வைத்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பல் யார் என்பது இந்திய சமுதாயம் அறியும். மைக்கா வாக இருக்கட்டும், மித்ரா வாக இருக்கட்டும் கொள்ளைக் கும்பல் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு வேண்டியது பதவி, பட்டம் மட்டும் தான். உதவி என்று வரும் போது உதைப்பது தான் அவர்களின் வேலை! அப்படித்தான் தெரிகிறது! என்ன செய்ய?
இந்தக் கும்பலை நம்பி நாம் எப்படி வாக்களித்து இவர்களைக் காப்பாற்றுவது? அது தேவையா? அவர்கள் இந்தியர்களை நம்பவில்லை. அதனால் மலாய்க்காரர் பக்கம் சாய்கின்றனர். அது தான் அவர்களுக்கு நல்லது. நாம் இவர்களுக்கு வாக்களித்து நமது பொன்னான வாக்குகளை ஏன் விரயம் செய்ய வேண்டும்?
இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா என்பது யோசிக்க வேண்டிய விடயம்!
Sunday, 25 September 2022
வேதனைத் தருகிறது
Saturday, 24 September 2022
இந்தியர்களின் ஒரே மருத்துவக் கல்லூரி
இந்திய மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கும் நோக்கம் கொண்டது தான் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம்.
அப்படித்தான் அதன் நிறுவனரான துன் சாமிவேலு அதன் ஆரம்பக் காலகட்டத்தில் அறிவித்திருந்தார். இந்தியர்களிடமிருந்தும் பணம் வசூல் செய்யப்பட்டது. வழக்கம் போல தலைவர் சொன்னால் தலையாட்டுவது நமது கடமையாகக் கருதி நம் மக்களும் கணிசமாக அள்ளிக் கொடுத்தனர். மக்கள் தவறு என்று எதனையும் நினைக்கவில்லை.
அவர் காலத்தில், துன் சொன்னவாறு, ஓரளவு தனது சொல்லைக் காப்பாற்றினார். அப்போதும் சரி இப்போதும் சரி நூறு விழுக்காடு இந்திய மாணவர்களை நாம் எதிர்பார்க்கவில்லை. அது சரியாகவும் இருக்காது. பல இன மாணவர்கள் இருக்கத்தான் வேண்டும். அதுவே சிறப்பு.
அதற்குக் காரணம் அரசாங்கமும் தனது பங்கிற்கு ஏம்ஸ்ட் கல்லூரிக்குப் பல வழிகளில் உதவியிருக்கிறது. அதனால் சீன, மலாய் மாணவர்களுக்கும் போதுமான இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ப'கழகத்திற்கு இருக்கிறது.
துன் சாமிவேலு காலத்தில் ஓரளவு பின்பற்றப்பட்ட "இந்தியர் மாணவர்களுக்கே முதலிடம்" கொள்கை இப்போது இல்லை என்பதாகச் சொல்லப்படுகிறது. அது நமக்கு வருத்தம் தான்.
இட ஒதுக்கீடு மட்டும் அல்ல இந்திய மாணவர்களுக்கு ஒருசில வகைகளில் அவர்களுக்குச் சலுகைகள் காட்ட வேண்டிய பொறுப்பும் ப'கழகத்திற்கு உள்ளது. இந்திய மாணவர்களுக்கும் மற்ற இன மாணவர்களுக்கும் ஒரே விதமான கட்டணம் தான் என்றால் அது எப்படி சரியாக வரும்?
மலாய் மாணவர்களுக்கு அரசாங்கம் நிச்சயம் கைகொடுக்கும். அது நமக்குத் தெரியும். அதே போல இந்திய மாணவர்களுக்கு ம.இ.கா உதவ வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அதுவும் குறிப்பாக B40 இந்திய மாணவர்களுக்கு கட்டாயம் உதவ வேண்டும். ம.இ.கா. கஜானாவில் அவ்வளவு பணம் தேறாது என்றால் அரசாங்க கஜானாவை நாடுவதில் எந்தத் தவறும் இல்லை. இதுவரை ம.இ.கா. அதைத்தானே செய்து வருகிறது! இதனை நாம் அவர்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்.
பணம் கட்ட முடியாத இந்திய மாணவர்களைக் கேவலப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும், இழுத்தடிப்பதும் ம.இ.கா.வுக்கு எந்த நன்மையும் கொண்டுவராது. அந்த மாணவனுக்கு, அவன் கல்வி முடியும்வரை, ம.இ.கா. அவனுக்குத் துணை நிற்க வேண்டும். அது அவர்களது கடமை.
இந்திய மாணவர்களை வைத்துப் பணம் சம்பாதிக்கலாம் என்று ம.இ.கா. நினைத்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் கொடுக்க முடிந்தவர்கள் இப்போதும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தியர்களில் அனைவருமே பணம் கட்ட முடியாதவர்கள் அல்ல. முடிந்தவர்கள் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் முடியாதவர்கள் அதிகம். அவர்களுக்கு உதவுவது ம.இ.கா.வின் கடமை.
"நாங்கள் உதவவே மாட்டோம். நீங்கள் பணம் கட்டித்தான் ஆக வேண்டும்" என்று ம.இ.கா. பிடிவாதம் பிடித்தால் இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்ல உங்களுக்கு அருகதையே இல்லை!
இந்தியர்களின் பெயரைச் சொல்ல ஒரே மருத்துவ கல்லூரி. அதிலும் இந்தியர்களுக்கு ஆபத்து என்றால் என்கே போவது? ம.இ.கா.வினர் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்!
Friday, 23 September 2022
இலஞ்ச ஊழலில் சிக்கியிருக்கிறோம்!
பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா அவர்கள் நாட்டில் நிலவும் இலஞ்சம் ஊழல் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்.
சுல்தான் அவர்களைப்போல அனைத்து மாநில சுல்தான்களும் இது பற்றி பேசி அரசியல்வாதிகளுக்கு விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த செய்தி அரசியல்வாதிகளுக்குப் போய் சேர்ந்தால் அதன் பின்னர் அரசாங்க அதிகாரிகளுக்கும் போய்ச் சேர்ந்துவிடும்.
இலஞ்சம் இல்லை ஊழல் இல்லை என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. இங்கு எந்த அரசியல்வாதியும் அரசாங்க அதிகாரியும் புனிதராக இல்லை! இது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
இந்த இலஞ்ச ஊழலால் பாதிப்பு அடைபவர்கள் பொது மக்கள் தான். இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலஞ்சம், ஊழல் என்று சொன்னால் வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. அதற்கு ஈடாக வேறும் ஒன்றும் உண்டு. அதுவும் ஊழல் தான். ஒரு வேலையாக அரசாங்க அலுவலகத்திற்குப் போனால் அந்த வேலை உடனடியாக நடப்பதில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி 'இன்று போய் நாளை வா!' என்று அனுப்பிவிடுவார்கள். அடுத்த நாள் போனாலும் அந்த வேலை முடியாது. ஏதோ ஒன்றைத் தவறு என்று சொல்லி திருத்திக் கொண்டு வாருங்கள் என்பார்கள்! இப்படியே இழுத்தடித்து பின்னர் நீங்களே ஆன்லைனில் செய்து கொள்ளுங்கள் என்பார்கள்!
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் அரசாங்க அலுவலகங்களில் பணி புரியும் பலருக்கு அவர்களுடையே வேலையைப் பற்றி அரைகுறையாகக் கூட தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்! ஆனால் அதனை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ளாமல் நம்மையே அந்த வேலையைச் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறார்கள்!
இலஞ்சம், ஊழல் என்று பேசும் போது அரசாங்க நடுநிலை, கீழ்நிலை ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தான் மக்களோடு அன்றாடம் பழகுபவர்கள். இவர்களும் இலஞ்சம் ஊழலில் ஒரு பகுதியினர் தான்!
நாடு எல்லா வகையிலும் இலஞ்ச ஊழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பெரும் பெரும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. குத்தகைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஊழலில் சம்பந்தப்படுகிறார்கள். மேல்மட்டத்தில் எப்படி இலஞ்சம் பேயாட்டம் ஆடுகிறதோ அதே போல கீழ்மட்டத்திலும் அதே நிலை தான்.
பேராக் சுல்தான் இதுபற்றிப் பேசி தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மேல்மட்டத்தில் இன்னும் அதிகமாகப் பேசப்பட வேண்டும்.
இலஞ்சம் ஊழல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல!
Thursday, 22 September 2022
எத்தனை இடங்களில் போட்டியிடும்?
வருகின்ற 15-வது பொதுத் தேர்தலில் ம.இ.கா. 12 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் என்பதை ம/இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மறுத்திருக்கிறார்.
"எண்ணிக்கை அல்ல நாங்கள் கேட்பது. வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். குறிப்பாக கேமரன் மலை போன்ற பாரம்பரிய தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என்பது தான் எங்களது கோரிக்கை.
நிறைய தொகுதிகளைக் கொடுத்துவிட்டு பின்னர் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அதுவும் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை ம.இ.கா.வின் தலைவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
அவர் கோரிக்கை ஏற்புடையது தான். எண்ணிக்கையைவிட வெற்றிதான் முக்கியம். அடுத்த ஆட்சி யாருடையது என்பதை இப்போது சொல்ல இயலாது. எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் இப்போதைய ஆளுங்கட்சியினரைபற்றி அப்போது அது பற்றி யாரும் 'நீ! நான்!' என்று யாரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்! தோல்வி தோல்வி தான். ஏற்றுக் கொள்வார்கள்!
ஆனால் இன்றைய நிலையோ வேறு. தேசிய முன்னணி வெற்றி பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதிலும் அம்னோ கட்சியினருக்குப் பலத்த அடி விழுந்து கொண்டே இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபடுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதனால் தான் அவர்களது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள்! ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அனைவரும் புனிதர் ஆகிவிடுவார்கள்! இன்னும் அது அவர்களுக்கு நடக்கவில்லை!
ம.இ.கா. வுக்கும் அதே நிலை தான்! எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் இவர்களுடைய திருகுதாளங்கள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்!
தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வழக்கம் போலவே இவர்கள் செயல்படுவார்கள்! அதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை!! திருட்டுக்கைகளைக் கட்டிவைக்க முடியாது!
இப்போது ம.இ.கா. தலைவரின் அணுகுமுறை சரியானதுதான். அதிக எண்ணிக்கை என்பது ஆபத்திலும் முடியலாம். சிலவாக இருந்தாலும் வெற்றி பெற்றால் நிறைவாக இருக்கும். மிகவும் எச்சரிக்கையாகவே நடந்து கொள்கிறார். அவரைக் குறை சொல்லவும் முடியாது.
ஏற்கனவே ம.இ.கா., கடந்து வந்த பாதை, திரும்பிப்பார்க்கும் போது, திருப்திகரமாக அமையவில்லை. நாசக்காரக்கும்பல் என்று தான் பெயர் எடுத்தார்களே தவிர நல்லவர்கள் என்று பெயர் எடுக்கவில்லை! அந்தப் பழி இன்னும் நீண்டநாள் நீடிக்கும்! இப்போதைக்கு அது மறையப் போவதில்லை!
தேர்தல் வரும் போது தான் மக்களின் மனநிலை என்ன என்பது புரியும். அதுவரை எல்லாரும் எதையாவது சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான்!
Wednesday, 21 September 2022
எங்களால் முடியவில்லை!
மீண்டும் காவல்துறை தனது திறமையின்மையை ஒப்புக் கொண்டது! "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" தெரிந்தால் பொது மக்கள் எங்களுக்குத் தகவல் கொடுக்கலாம்!"
தனது முன்னாள் மனைவியிடமிருந்து மூன்று பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போன முகமது ரிதுவான் அப்துல்லா இரண்டு குழந்தைகளைத் தாயிடம் ஒப்படைத்தாலும், தனது கடைசி குழந்தையை, நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், இன்னும் ஒப்படைக்காமல் இருக்கிறார். ஒரு தாயின் சோகம் அதிகாரவர்க்கத்தின் அதிகாரம்.
ஏற்கனவே வந்த செய்திகளின்படி ரிதுவான் நாட்டைவிட்டு எங்கும் ஓடிப்போகவில்லை. அவர் இந்நாட்டில் தான் இருக்கிறார். இங்கு தான் வேலை செய்கிறார். இங்கு தான் தவணையில் கார் வாங்கியிருக்கிறார்.அந்தக் கடைசி குழந்தையும் இங்கு தான் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் காவல்துறை இன்னும் அவருடைய பழைய முகவரியிலேயே தேடிக் கொண்டிருக்கிறார்கள்!
காவல்துறை சொன்னால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். ஏன் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கேட்டால் நீங்கள் கண்டுப்பிடித்துத் தாருங்கள் என்கிறார்கள்! 'அது எங்கள் வேலை இல்லையே' என்றால் 'அப்போ வாயை மூடிக்கொண்டு சும்மாயிருங்கள்' என்கிறார்கள்!
ஒரு வழக்கு எத்தனை ஆண்டுக்காலம் இப்படி இழுத்துக் கொண்டே போவது? பொது மக்களுக்குத் தான் சலிப்புத் தட்டுகிறது! காவல்துறை எந்த சலனமும் இல்லாமல் தேய்ந்து போன பழைய ரிக்கார்ட் மாதிரி ஒரே பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!
இது ஒருவகையான அதிகாரத் துஷ்பிரயோகம் என்று தெரிகிறது. தெரிந்து என்ன செய்ய? அதிகாரம் மதவாதிகள் கையிலிருந்தால் எப்படி எல்லாம் நாடு குட்டிச்சுவராகும் என்பது நமக்குப் புரிகிறது. அதற்குச் சரியான சான்று: ஆப்கானிஸ்தான்! நம் நாடு மதவாதிகளின் கையில் இல்லை ஆனால் அவர்களின் ஊடுருவல் அதிகார மையத்தில் ஆழ்ந்து கிடக்கிறது.
சரி, இவர்கள் எத்தனை ஆண்டுகள் இப்படியே சொல்லிக் கொண்டே இருப்பார்கள்? நமது எண்ணம் எல்லாம் ஆட்சி மாறினால் அடங்கி விடுவார்கள் என்பது தான்! இப்போதைக்குக் காவல்துறை "எங்களால் முடியவில்லை" என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லும் நிலையிலில்லை!
Tuesday, 20 September 2022
காலத்தால் செய்த உதவி!
Monday, 19 September 2022
இவர் சொல்லுவதில் "லாஜிக்" உண்டா?
அம்னோ தலைவர், ஸாஹிட் ஹமிடி
அம்னோ தலைவர், ஸாஹிட் ஹமிடி என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்குப் புரியவில்லை!
இந்த ஆண்டு 15-வது பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என்பது பலரின் கருத்து. அதற்குக் காரணங்கள் உள்ளன. ஒன்று: தேர்தல் என்பது அடுத்த ஆண்டு தான் நடத்தப்பட வேண்டும். இன்னொரு சொல்லப்படுகின்ற காரணம்: மழைக்காலம்.
நம்மைச் சுற்றி பார்த்தாலே தெரியும். மழையினால் வருகின்ற சேதங்களைக் கண்ணாரப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்குப் பார்த்தாலும் வெள்ளம். கார்கள் மிதக்கின்றன. பெருத்த சேதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கோலாலம்பூர் நகரத்திற்குப் போக வேண்டுமென்றால் ஐந்து, ஆறு தடவை யோசிக்க வேண்டியுள்ளது! மழை வருமா, வெள்ளம் ஏறுமா - இப்படியெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது!
வீடுகளுக்கும் அதே பிரச்சனை தான். பல இலட்சங்கள் பணம் போட்டு வாங்கிய வீடுகள் நிலைமை என்னவாயிற்று? வெள்ளம் ஏறினால் பொருட்கள் அனைத்தும் நாசமாகப் போகும். நாறிப்போகும். வீடு வாங்கினோம் என்கிற பெருமையெல்லாம் ஒன்னும் இல்லாமல் போகும். மழை பெய்தாலே வீடு என்னவாகும் என்கிற பயம் தான் முதலில் வரும். சொந்த வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாத ஒரு நிலை.
நாடு, வெள்ள ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இப்போது தேர்தலுக்கு என்ன அவசரம் என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் மழைக்காலமாகத் தான் இருக்கும் என்பதாக ஏற்கனவே நமக்கு வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஸாஹிட் கூறும் இன்னொரு காரணம் "ஏன் டாக்டர் மகாதிர் மழைக் காலத்தில் தேர்தல் நடத்தவில்லையா?" என்கிற கேள்வி நியாயமானதாக இல்லை. தேர்தல் நடத்த வேண்டிய காலத்தில் மழை வந்தது. அதை யார் என்ன செய்ய முடியும்? இந்த 15-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டில் நடக்கும் போது அப்போது அது மழைக்காலமாக இருந்தால் அதனை யாரும் குறை சொல்ல முடியாது. குறை சொல்ல ஒன்றுமில்லை.
ஸாஹிட் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார். அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க இவர் பயப்படுகிறார். அவர் மீது உள்ள வழக்கில் அவர் குற்றவாளி என்பது நிருபணமானால் இவர் அம்னோ தலைவர் என்கிற பேச்செல்லாம் தவிடுபொடியாகிவிடும்! அவருடைய பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். அதுவே பெரிய அவமானம். மக்கள் முன் அவர் நின்று பேசக்கூட தகுதியில்லாதவராகி விடுவார்!
நாம் சொல்லுவதெல்லாம் மழைக்காலம் மட்டும் அல்ல தேர்தல் நடத்த இன்னும் சில மாதங்கள் உள்ளன. அப்போது நடத்துங்கள் என்பது தான். நமது பிரதமரோ தேர்தல் நடத்த "அம்னோ முடிவு செய்யும்!" என்பதை மக்களுக்கும் அடிக்கடி நினைவூட்டுவது எரிச்சலைத் தருகிறது. அம்னோவின் ஆறு பேர் முடிவு செய்வார்களாம்! அப்போ தேர்தல் ஆணையம் என்று ஒன்று தேவையில்லையே! அந்த ஆணையத்தை முடக்கிவிட்டு அம்னோவே அனைத்து தேர்தலையும் முடிவு செய்யலாமே!
இந்த ஆண்டு தேர்தல் வேண்டாம்! அதுவே நமது முடிவு!
Sunday, 18 September 2022
அவ்வளவு தானா மெட்ரிகுலேஷன்?
பிரதமர் அவர்களின் அறிவிப்பை நம்மால் வரவேற்க முடியவில்லை!
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்காக - அவர்களுக்கு உதவுவதற்காக - அரசாங்கம் 20 இலட்சம் ஒதுக்கீடு செய்யும் என்பதாக, ம.இ.கா. வின் கூட்டம் ஒன்றில் அறிவித்திருக்கிறார்.
ஒதுக்கீடு செய்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஒரு பிரச்சனை என்னவென்றால் ஒதுக்கீடு என்பது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை. இது எப்போது நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. நடக்கலாம் நடக்காமலும் போகலாம். ஒதுக்கீடும் ஆகலாம். ஆகாமலும் போகலாம். அல்லது தேர்தல் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். இந்த அறிவிப்பை நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் காலங்களில் இதுபோன்ற தேர்தல் அறிவுப்புகள் வரத்தான் செய்யும். இதற்கு முன்னரும் நாம் இதுபோன்ற அறிவுப்புகளைப் பார்த்திருக்கிறோம்.
அதனால் ஒதுக்கீடு அப்படியே இருக்கட்டும்.
இந்திய மாணவர்களுக்கு 20 இலட்சம் ஒதுக்கீடு என்பதைவிட இப்போது அவர்களுக்கு மாபெரும் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அதனை முதலில் பிரதமர் அவர்கள் களைய வேண்டும். எஸ்.பி.எம். தேர்வில் எல்லாப் பாடங்களிலும் "ஏ" எடுத்த இந்திய மாணவர்கள் இன்று "ஏண்டா எடுத்தோம்" என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்! குறைவான தகுதி உள்ளவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி பயில இடம் கிடைக்கும் நிலையில் இப்படி சிறப்பான தேர்ச்சி பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக இந்திய மாணவர்கள்.
இந்த நேரத்தில் பிரதமருக்கு நமது வேண்டுகோள் என்பதெல்லாம் நீங்கள் ஒதுக்கப்போகும் 20 இலட்சம் ஒருபக்கம் இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வைச் சொல்லுங்கள். இந்திய மாணவர்களுக்கு இன்னும் அதிக இடங்களை ஒதுக்குங்கள்.. இப்போது எத்தனை இடங்கள் கொடுக்கப்பட்டன என்பதைக் கூட இந்திய சமூகம் அறியவில்லை. அனைத்தும் ரகசியம்! கல்வியில் கூட ரகசியமா!
இப்போது பிரதமர் அறிவித்திருக்கும் இருபது இலட்சம் என்பது ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவே நமக்குத் தெரிகிறது. மெட்ரிகுலேஷன் கல்வியை மறக்கடிப்பதற்கு இருபது இலட்சம் கொடுத்து இந்திய சமுதாயத்தை திசை திருப்புவதாகவே நமக்குத் தோன்றுகிறது. இப்படி இருபது இலட்சம் ஒதுக்கீடு செய்கிறோம் என்று அறிவிப்பு செய்ததைவிட "நாங்கள் இன்னும் அதிகமான இந்திய மாணவர்களை மெட் ரிகுலேஷனில் சேர்த்திருக்கிறோம்" என்று அறிவித்திருந்தால் நமக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
அப்படியென்றால் "அவ்வளவு தானா மெட்ரிகுலேஷன்!" என்று கேட்கத் தோன்றுகிறது?
Saturday, 17 September 2022
மீண்டும் பிரதமரின் கட்டுப்பாட்டில்!
Friday, 16 September 2022
நாமும் ஆதரவுகரம் நீட்டுவோம்!
மலேசிய இந்தியர்களின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த, மறைந்த துன் சாமிவேலுவின் பெயரை கோலாலம்பூரில் உள்ள இரண்டு சாலைகளில் ஒன்றுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்கிற கோரிக்கைக்கு ஆதரவாக நாமும் ஆதரவுகரம் நீட்டுகிறோம்.
நீண்ட நாள் மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். மலேசிய இந்தியர்களை பிரதிநிதித்தவர். நல்லதும் செய்திருக்கிறார். பலருக்கு நல்லதும் நடந்திருக்கிறது. மலேசிய இந்தியர்களின் கல்வியில் அதிக கவனமும் செலுத்தியிருக்கிறார்.
சாலை ஒன்றுக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என்னும் கோரிக்கை இப்போது எழுந்திருக்கிறது. இந்தியர்களால் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
சாலைக்குப் பெயர் வைப்பது, பெயர்களில் மாற்றங்கள் ஏற்படுத்துவது, எப்போதும் எல்லாகாலங்களிலும் உண்டு. நாட்டுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்களை வைப்பது பொதுவான நடைமுறை.
துன் சாமிவேலு அவர்களின் சேவை என்றால் அனைவருக்கும் தெரிந்தது: இன்று நாட்டில் உள்ள நெடுஞ்சாலை எல்லாம் அவரது பெயரைச் சொல்லும். அதே ஒன்றே போதும் அவரது சேவையைப்பற்றி அறிந்துகொள்ள.
இப்போது எழுப்பப்பட்டிருக்கும் கோரிக்கை இரண்டு சாலைகள் சம்பந்தமானது. ஒன்று ஜாலான் ஈப்போ இன்னொன்று ஜாலான் ராஜா லாவுட். இந்த இரண்டு சாலைகளில் ஏதோ ஒன்றில் அவரது பெயர் சூட்டினால் இந்திய சமூகம் பெருமை அடையும். அவரது சேவைக்கும் அரசாங்கம் மரியாதை கொடுத்ததாகவும் இருக்கும்.
அரசாங்கத்திற்கு இந்தியர்களின் கோரிக்கை இது. அதற்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும். இந்தியர்கள் என்றாலே இன்றைய அரசாங்கத்திற்கு ஓர் அலட்சிய போக்கு உண்டு. அதனைத் தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.
மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை இப்போதே வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து வலியுறுத்திவர வேண்டும். இதனை ஆற போட்டால் இந்த பிரச்சனை இழுத்துக் கொண்டே போகும். கடைசியில் ஒரு முடிவுக்கு வரமுடியாது.
ம.இ.கா. இந்த ஒரு பிரச்சனையையாவது அக்கறை எடுத்து செயல்படுத்த முனைய வேண்டும். வெறும் பேச்சோடு இது முடிந்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.
Thursday, 15 September 2022
மீண்டும் பிரதமரா!
Wednesday, 14 September 2022
துன் சாமிவேலு மறைந்தார்
8.3.1936 - 15.9.2022
Tuesday, 13 September 2022
வேலை இல்லா இலங்கையர்கள்!
இன்று ஸ்ரீலங்காவில் நிலவும் நிலையை உலகமே அறிந்திருக்கிறது. நாமும் அறிந்திருக்கிறோம். நம் தமிழ் உறவுகளும் அங்கு வாழ்வதால் நமக்கும் அவர்கள் மேல் அக்கறையும் அனுதாபங்களும் உண்டு.
இன்று பல உலக நாடுகள் அவர்களுக்கு உதவுகின்றன. முக்கியமான அவர்களின் தேவை உணவுப் பொருள்கள். அவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு, போக்குவருத்துகள் சுமுகமாக நடந்தேற பெட் ரோல், டீசல் தேவைகள் போன்றவைகள் ஓரளவு சீரடைந்து வருகின்றன.
அரசாங்கமே தனது நாட்டுக் குடிகளை வெளிநாடுகள் போய் வேலை செய்து குடும்பங்களுக்குப் பணம் அனுப்புங்கள் என்கிறது. இப்போது வெளிநாடுகளில் உள்ளவர்களையும் நாட்டுக்குள் பணம் அனுப்பி உதவுங்கள் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாடு பேரழிவிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. மக்களின் பசி, பட்டினி போராட்டம் இன்னும் தொடர்கிறத
இந்த நிலையில் தான் தென் கொரியா தனது நாட்டில் இலங்கை பிரஜைகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. சுமார் 2500 இலங்கையர்களுக்கு தனது நாட்டில் வேலை செய்ய அனுமதி அளித்திருக்கிறது. நிச்சயமாக இது ஒரு மனிதாபிமான செயல் என்பதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். இலங்கைக்குப் பணத்தேவை என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகத் திகழ்கிறது. வெளிநாடுகளில் வாழும் தனது குடிமக்கள் பணம் அனுப்புவதன் மூலம் நாட்டுக்கும் அதனால் நன்மை உண்டு.
தென் கொரியா தனது பங்குக்கு இதனை அறிவித்திருக்கிறது. வரவேற்கிறோம். மற்ற நாடுகளும் வேறு வழிகளில் உதவலாம். பல வழிகளில் உதவலாம். பொருள்கள் கொடுத்து உதவலாம். ஒரு நாட்டின் மக்கள் பட்டினியால் வாடும்போது அதனை உலகிலுள்ள மக்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
இன்று உலகில் பல நாடுகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெள்ளம், புயல் இன்று பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. எந்த நாடும் எந்த நேரத்திலும் பாதிக்கப்படலாம். 'இன்று நான் நாளை நீ' என்கிற நிலை தான் இப்போது.
தென் கொரியாவின் இந்த வேலை வாய்ப்பு என்பது இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கொடையாகவே நாம் கருதுகிறோம். மற்ற நாடுகளும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் விரும்புகிறோம்.
Monday, 12 September 2022
பொது மன்னிப்பு கூடாது!
சிலாங்கூர் சுல்தான் அவர்கள் மலேசியர்களுக்கு நல்லதொரு அறிவுரையைக் கூறியிருக்கிறார்.
'நமது நாட்டின் நீதிபரிபாலனத்தை நம்புங்கள்' என்பது தான் அவர் சொல்ல வருவதின் சுருக்கம். வழக்குகள் என்று வரும் போது நீதிமன்றங்கள் அதனை முறையாக விசாரித்த பின்னர் தான் தீர்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுல்தான் அவர்களின் கருத்தை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.`நீதிபரிபாலனம் என்பது சரியாகத்தானே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் என்ன குற்றத்தைக் கண்டு பிடித்தோம்? ஒவ்வொரு நாளும் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாருமே நீதிமன்றம் சொல்லுகின்ற தண்டனைகளை, தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு தானே இருக்கிறோம். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மீண்டும் அதைவிட இன்னொரு படி மேல் சென்று மீண்டும் மேல்முறையீடு செய்கிறோம். மீண்டும் மீண்டும் மேல்முறையீடு செய்யத்தானே செய்கிறோம்!இத்தனை வசதிகளை நீதிமன்றங்கள் கொடுக்கத்தானே செய்கின்றன? அனைத்தும் உங்களைக் குற்றவாளி என்றால் உங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை!
ஆனால் கொள்ளையடிப்பதையே மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்ட அம்னோ, ம.இ.கா. போன்ற கட்சிகள் நீதிமன்றத்தைக் குற்றம் சொல்லுகின்றன. அப்படியென்றால் உங்களிடம் உள்ள பெரிய பெரிய வழக்கறிஞர்களை அனுப்பி வாதாடியிருக்கலாமே! உண்மையை வாதாடி நீதியை நிலைநாட்டியிருக்கலாமே! அவர்கள் என்ன இன்னும் கொள்ளையடித்துக் கொண்டு தான் இருக்கிறார்களா!
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வழக்கில் தண்டனைக் கொடுக்கப்பட்டு விட்டது. அதனை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் எத்தனை ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அவர் குற்றவாளி என்பது அவருக்கே தெரியும். ஆனால் தன்னை யாரும் ஒன்று செய்துவிட முடியாது என்கிற இறுமாப்பு அவரிடம் இருந்தது! அவருடைய கட்சி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் நீதியையே புறந்தள்ளியிருப்பார்கள்! அவருக்குச் சாதகமாக அனைத்தும் நடந்திருக்கும்!
நஜிப்புக்கு அரச மன்னிப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்பது சிலாங்கூர் சுல்தானின் அறிவிப்பு கொஞ்சம் தெளிவுபடுத்துகிறது. ஏன் அம்னோவின் தலைவருக்கும் நஜிப்பின் நிலைமை தான் என்பதும் இன்னும் சில தினங்களில், வாரங்களில் தெரியவரும். அவர் குற்றவாளி என்றால் அவருக்கும் அரச மன்னிப்பு தேவைப்படுமோ?
இப்படி குற்றவாளிகளுக்கெல்லாம் அரச மன்னிப்பு என்றால் நீதிமன்றங்களே தேவை இல்லையே! சிலாங்கூர் சுலதான் அவர்களின் அறிவிப்பு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
குற்றம் செய்தவர்கள் குற்றவாளிகள் தான்! வேறு பேச்சுக்கு இடமெ இல்லை!
Sunday, 11 September 2022
மோட்டார் சைக்கிளா? வேண்டாமே!
பெற்றோர்களுக்குக் காவல்துறையும் இதுபற்றி சொல்லி அலுத்துவிட்டது. ஆனாலும் பெற்றோர்கள் இதனைக் காதில் போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. அலட்சியம் இன்னும் தலைவிரித்தாடுகிறது.
பெற்றோர்களும், ஒரு வகையில், சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு முறையும் அருகில் உள்ள கடைகண்ணிகளுக்குப் போக வேண்டுமென்றால் பிள்ளைகளை அனுப்புவதைத்தான் விரும்புகிறார்கள்! அல்லது பிள்ளைகளே 'நான் போய் வாங்கிவருகிறேன்!' என்று மோட்டார் சைக்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்! அவ்வளவு எளிதில் அவர்களின் கைகளுக்கு மோட்டார் சைக்கள் கிடைத்துவிடுகிறது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மோட்டார் சைக்கிள் உரிமம் எடுக்கும் வயதுவரை பொறுத்திருக்க வேண்டும். பொறுத்திருக்கும்படி பிள்ளைகளுக்கும் சொல்லித்தர வேண்டும். பத்து, பதினோரு வயதிலேயே 'என் பையன் மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறான்!' என்று பெருமைப்படுவதை நிறுத்த வேண்டும். இதில் பெருமைபட ஒன்றுமில்லை. பட்டால் முடிந்தது கதை. உயிர் திரும்ப வருமா?
பதினொரு வயது பையனும் அவனது தங்கையும் மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்து போனார்கள் என அறியும் போது மனம் வலிக்கிறது. பதினோரு வயது பையன் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறான். இவன் சிறுவன். அவன் கூடவே தங்கையும் போயிருக்கிறாள்.
சிறு குழந்தைகள் தீடீரென சமாளிக்கும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். எதிரே கார் வரும், தீடீரென லோரி வரும் அல்லது மோட்டார் சைக்கிள் கூட வரலாம். பெரியவர்கள் கூட சமாளிக்க முடியாத சூழல் இருக்கின்ற போது இந்தக் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்?
சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை நாம் அனுதினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதுவும் வீடமைப்புப் பகுதிகளான தாமான்களில் எப்போதும் பார்க்கலாம். அவர்கள் என்ன வேகத்தில் பறக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும்! ஆனால் என்ன செய்ய? பெற்றோர்கள் உணராதவரை மற்றவர்களால் என்ன செய்ய முடியும்?
பெற்றோர்களே! தயவு செய்து உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள். நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் அனுதினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவர்களில் சிறுவர்களும் அடங்குவர்.
எதுவும் நடக்கவில்லை என்றால் இறைவனுக்கு நன்றி! ஆனால் விபத்துகள் சொல்லிவிட்டு வருவதில்லை. வந்தவிட்ட பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. அவர்களுக்கான வயது வரட்டும். அவர்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
அவர்களுக்கான வயது வந்த பிறகு, உரிமம் பெற்ற பிறகு, அவர்களுக்குத் தேவை என்றால் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுங்கள். அல்லது உங்களது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்த அனுமதியளியுங்கள்.
அதுவரை வேண்டாமே!
Saturday, 10 September 2022
மலேசிய மக்கள் சக்தி கட்சி
வரப்போகும் 15-வது பொதுத் தேர்தலில் மும்முரமாக தேர்தல் களத்தில் இறங்குவோம் என்று பத்திரிக்கைகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் கட்சி என்றால் அது மலேசிய மக்கள் சக்தி கட்சி! நாங்கள் இந்தியர்களுக்கான கட்சி அல்லது திராவிடர்களுக்கான கட்சி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கட்சிக்கும் இந்தியர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால் 'ஒரு வேளை இருக்கலாம்!' என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சிறு சிறு கட்சிகள் எல்லாம் அவர்களுக்கென ஒரு சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு செயல் படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்! அவர்கள் இந்தியக் கட்சிகள் என்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரனைத் தவிர வேறு யாரும் தெரிந்தவர்களாக இல்லை. அவர் பேரியக்கமான ஹின்ராஃ லிருந்து பிரிந்து வந்தவர், தனிக்கட்சி ஆரம்பித்தவர் என்பது நமக்குத் தெரியும்.
தனேந்திரனுக்குப்பக்க பலமாக இருப்பவர்கள் அம்னோ கட்சியினர். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், இந்நாள் தலவர், சாஹிட் ஹாமிடி ஆகியோரின் அரவணைப்பு மக்கள் சக்தி கட்சிக்கு உண்டு என்பது தான் அவரது பலம். ஒரு வேளை அம்னோவின் தொகுதிகள் ஒருசில அவர்களுக்கு ஒதுக்கப்படலாம். அரசியலில் எதுவும் சாத்தியம்!
ஆனால் ஒருசில கசப்புகளும் அந்த கட்சியின் மீது நமக்குண்டு. முன்னாள் பிரதமர் தனேந்திரனுக்கு மிக அணுக்கமானவர் என்பது நமக்குத் தெரியும். அவர் குற்றவாளி என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் அதனை அம்னோ ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல மக்கள் சக்தி கட்சியும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்லவில்லை.
நமக்குள்ள சந்தேகம் எல்லாம் ஒரு குற்றவாளியை நிரபராதி என்று சொல்லுகின்ற துணிச்சல் முன்னாள் அமைச்சர் சாமிவேலுவுக்கு உண்டு. இப்போது இந்தத் துணிச்சல் தனேந்திரனுக்கும் உண்டு என்னும் போது நமக்கே சஙடத்தை ஏற்படுத்துகிறது. இவர் பதவிக்கு வந்தால் என்னன்ன கொள்ளை போகுமோ என்கிற சந்தேகம் நமக்கு வருகிறது. இந்தக் கட்சியையும் ஒரு கொள்ளைக்கார கும்பல் கட்சி என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
எப்படியோ ஒன்றை மட்டும் நாம் உறுதியாக நமபலாம். வருகின்ற தேர்தலில் பாரிசான் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனேந்திரனுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பலாம். இந்தியர்களின் ஆதரவு தேவை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஆட்சிக்கு வராவிட்டால் அவரது கட்சி இப்போது போலவே முடங்கிவிடும் என்பது உறுதி!
இப்போதைக்கு ஒளிமயமாக ஒன்றும் தோன்றவில்லை!
Friday, 9 September 2022
தகுதியுள்ள கட்சிகள் உண்டா?
Thursday, 8 September 2022
MAIKA, MIED, MITRA
Wednesday, 7 September 2022
எலிசபத் மகாராணியார்
எந்த நாட்டில் எந்த அரசிகள் வந்தாலும் உலகமே போற்றும் ஒரே அரசி என்றால் அது இங்கிலாந்தின் ராணி எலிசபத் மட்டும் தான். அவரோடு ஒப்பிட யாரும் இல்லை. ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை. அரசி என்றால் அது ராணி எலிசபத். அவர் ஒரே ஒருவர் தான் அரசி.
இப்படித்தான் நாம் பழகியிருக்கிறோம். கிண்டலடிப்பதற்கும் எலிசபத் மகாராணி தான். பெருமைப் ப்டுத்துவதற்கும் எலிசபத் மகாராணி தான்.
மற்றவரைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி: "என்ன பெரிய எலிசபத் மகாராணி என்று நினைப்போ!". அது ஒன்று. இன்னொன்று: சான்றுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எலிசபத் அரசியைவிட இன்னும் ஒரு பங்கு கூடுதலாகவே வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் என்று பெருமையாக சொல்லுவதுண்டு. நமது முன்னாள் பிரதமரின் ரோஸ்மா மன்சூரும் இந்த ரகம் தான். ஆனால் ராணியின் வெற்றியை இவர்களால் அடைய முடியவில்லை.
என்னுடைய ஞாபகத்திற்கு வருவதெல்லாம் எலிசபத் அரசியார் முடிசூட்டபட்ட நாள் தான். அவர் முடி சூட்டியது 1952-ம் ஆண்டு. எனது ஞாபகத்தில் உள்ளதெல்லாம் அவர் முடி சூட்டிய அன்று எங்களது பள்ளிக்கு வெளியே உள்ள முக்கிய வீதியில் கூர்க்கா படையினரின் அணிவகுப்பு நடந்தது. மாணவர்கள் அனவரும் வீதி ஒரங்களில் நின்று கொண்டு இங்கிலாந்து கொடிகளை வைத்துக் கொண்டு கையசைத்து எங்களது மகழ்ச்சியை வெளிபடுத்தினோம். அன்றைய முக்கிய பிரமுகராக யார் கலந்து கொண்டது என்பது ஞாபகத்தில் இல்லை. இந்த நிகழ்ச்சி கூட மேலோட்டமாகத் தான் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடிந்தது.
எழுபது ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே அரசியார் என்றால் அவர் எலிசபத் அரசியார் தான். எலிசபத் அரசியார் வாரிசாக யார் வந்தாலும் அவர்களால் அரசியாரின் பெயரை எடுக்க முடியாது. எழுபது ஆண்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இனி யாராலும்,அது இங்கிலாந்தாகவே இருக்கட்டும், வேறு ஒருவர் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்கிற நிலை வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
எலிசபத் மகாராணியோடு ஒரு நீண்ட பாரம்பரியம் முடிவுக்கு வந்தது. இனி அது தொடர வாய்ப்பில்லை!
Tuesday, 6 September 2022
வங்கியே பொறுப்பேற்க வேண்டும்!
Monday, 5 September 2022
இணையும் சாத்தியமுண்டா?
வருகின்ற பொதுத் தேர்தலில் கட்சிகளுக்கிடையே ஒன்று சேர்வது, தேர்தல் ஒப்பந்தங்கள் எல்லாம் இயல்பானது தான்.
இப்போதுள்ள சிறு கட்சிகள் ஒன்று பாரிசான் கட்சியோடு இணைய வேண்டும் அல்லது பக்காத்தான் ஹராப்பானுடன் இணைய வேண்டும். பாஸ் போன்ற பெரிய கட்சிகள் கூட இந்த இரண்டு கூட்டணிகளோடு தான் இணைய வேண்டும். அவர்களுடைய பலம் என்பது கிழக்குக் கடற்கரை மாநிலங்களுக்கு வெளிய எதிர்பார்க்கின்ற அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. அதனால் தான் பாஸ் கட்சியின் தலைவர் பேசுவது என்னவென்று தெரியாமல் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்! அவருக்கும் தெரியும் இந்த இரண்டு கூட்டணிகளையும் விட்டால் தனக்கு வேறுவழியில்லை என்பது! அதனால் தான் அவர் மலாய்க்காரர், இஸ்லாமியர், சீனர், இந்தியர் என்று பிரித்துப் பேசுகின்ற நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்!
இப்போது மூடா கட்சியின் தேசியத் தலைவர், சைட் சாடிக் பக்காத்தான் கூட்டணியோடு தங்கள் கட்சி இணைந்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருக்கிறார். அது ஒரு சரியான முடிவு தான் என்பதில் சந்தேகமில்லை. வரவேற்கக் கூடிய முடிவு தான்.
என்ன தான் நாம் வரவேற்றாலும் முடிவு என்னவோ பக்காத்தான் கையில் தான் உள்ளது. தொகுதி பங்கீடு என்று வரும்போது இவர்களால் எந்த அளவுக்கு ஒத்துப்போக முடியும் என்பது சந்தேகத்திற்குரியதே..
மூடா கட்சி இளைஞர்கள் சார்ந்த ஒரு கட்சி. அதன் பலம் எத்தகையது என்பது இன்னும் புரியவில்லை. வருகின்ற பொதுத் தேர்தலில் நிறைய இளைஞர் கூட்டம் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் மூடா கட்சியை எந்த அளவு வரவேற்கின்றனர் என்பது புரியாத புதிர். அது ஒரு புதிய அரசியல் கட்சி என்பதை மறந்துவிடக் கூடாது. அதன் பலம் இன்னும் தெரியவில்லை.
அவர்களின் பலம் தெரியாத நிலையில் அவர்களுக்கு 15 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்குவது என்பது சிக்கல் தான். மூடா கட்சி 15 நாடாளுமன்றத் தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். இங்கு தான் சிக்கல் இருக்கும். இளைஞர்களின் ஆதரவு தெரியாத நிலையில் அவர்களுக்கு 15 இடங்களை எப்படி ஒதுக்குவது என்பது கொஞ்சம் சிக்கல் தான்.
ஆனால் மூடா கட்சி பக்காத்தானோடு இணைவது என்பது சரியான முடிவு. அவர்கள் அதிகமான தொகுதிகளைக் கேட்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளோடு இவர்கள் இணைவதும் சாத்தியம் இல்லை. டாக்டர் மகாதிரின் கட்சியுடனோ முகைதீன் யாசின் கட்சியுடனோ எந்த ஒரு நிலையிலும் ஒத்துவராதவர்கள் இளைஞர்கள்.
நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் மூடா கட்சி பக்காத்தான் ஹரப்பானோடு இணைவது அந்த கட்சியின் வருங்காலத்திற்கு நல்லது. இணைப்பு சாத்தியமுண்டு என்பதில் சாந்தேகமில்லை. ஆனால் தொகுதி உடன்பாடு என்பதில் தான் எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவரும்.
Sunday, 4 September 2022
மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறோம்!
ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். சிங்கப்பூருக்குச் செல்லுவது என்பதை வெளிநாடுகளோடு ஒப்பிட வேண்டாம். ஆனால் மற்ற நாடுகள் எதுவாக இருந்தாலும், சிங்கப்பூரைத் தவிர்த்து, அது வேளிநாடு தான்.
வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு இன்று பலர் தயாராக இருக்கின்றனர். இளைஞர்கள் மிக எளிதான முறைகளில், நினைத்தால் வெளிநாடு போய்விட வேண்டும் என்று நினைக்கின்றனர். "எளிதாக" என்று நினைத்தால் அதற்கான விளைவுகளுக்கும் தயாராகிவிட வேண்டும்.
ஆற அமர யோசித்து, ஒரளவு நீங்கள் போகின்ற நாட்டின், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து, எல்லாவாற்றையும் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்தார்களே அவர்களில் பலர் ஏமாற்றப்பட்ட கதைகளை நாம் அறிந்திருக்கிறோம். அடி உதைகளோடு அவர்கள் திரும்பி தமிழ் நாட்டுக்குச் சென்ற கதைகள் எல்லாம் நமக்குத் தெரியும்.
ஆனால் இங்கிருந்து வெளிநாடு போக வேண்டுமென்றால் இப்போது நிலைமை வேறாக மாறிவிட்டது. இப்போது ஏஜெண்டுகள் யாரும் இல்லை. ஏமாற்றுப் பேர்வழிகள் என்பது பழைய கதை. இப்போது ஈடுபட்டிருப்பது மோசடிக்கும்பல். பலே கில்லாடிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடமிருந்து பணம் பறிப்பார்கள். அதுமட்டும் அல்ல தேவையென்றால் உயிரையும் பறிப்பார்கள். சமீபத்தில் கொலை ஒன்றும் நடந்திருக்கிறது.
மலேசியர்களில் சுமார் 300 பேருக்கு மேல் இந்த கும்பல்களிடம் மாட்டிக் கொண்டு செய்வதறியாது திகைப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதாகச் சமீபத்திய செய்தி ஒன்று கூறுகிறது.
இப்போது இந்த மோசடிக் கும்பல்களின் அராஜகம் வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. காவல்துறைக்குச் சவால் விடும் கும்பலாக இவர்கள் மாறியிருக்கின்றனர். எங்கிருந்து இவர்கள் செயல்படுகிறார்கள் என்பதும் கூட அறியமுடியாத விஷயமாக இருக்கிறது!
ஆரம்பத்தில் மக்காவ் ஸ்கேம் என்றார்கள். அவர்கள் பெரும்பாலும் சூதாட்டக்காரர்களைத்தான் குறிவைத்தார்கள். இப்போது கைப்பேசிகளை வைத்துக் கொண்டே எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்துவிட்டார்கள். இளம்பெண்கள், வயதானவர்கள் அனைவருமே இவர்களின் தில்லுமுல்லுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது, ஆகக் கடைசியாக, வேலை தேடும் இளைஞர்களையும் குறிவைத்துக் காய்களை நகர்த்துகிறார்கள்! இளைஞர்களும் அவர்களின் கண்ணியில் மாட்டுகின்றனர்.
வெளிநாடுகளில் வேலை வேண்டுமென்றால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த நாட்டில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் மிகவும் நல்லது. தனி ஆளாக நீங்கள் முயற்சி செய்தால் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுவே நமது ஆலோசனை!
Saturday, 3 September 2022
ஊழல்வாதிகள் வேட்பாளர்களா?
ஒரு சில அரசில்வாதிகள் ஏதோ ஞானம் பெற்றவர்கள் போல தங்களை அறியாமலே ஒரு சில கருத்துக்களை உதிர்த்துவிடுகின்றனர்!
அவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள்! "சொல்லுவதோடு சரி! சொல்வது போல நான் செயல்படமாட்டேன்!" இது தான் உண்மையான அரசியல்வாதியின் கொள்கை!
ஆனால் அவரே ஊழல் அரசியல்வாதியாக இருந்தாலும் அவருக்கு ஒரு நல்ல நோக்கம் இருக்கிறது! "நாங்கள் ஊழல்வாதிகள் தான்! ஆனால் இனி மேல் வருபவர்கள் எங்களைப்போல் இருக்க வேண்டாம்!" என்று சொல்லுகின்ற துணிவாவது அவருக்கு இருக்கிறதே அதைப் பாராட்டுவோம்!
இன்று நமது நாட்டு அரசியலில் யார் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப் படுகின்றனர்? சேவை மனப்பான்மையோடு அரசியலுக்கு வருபவர்கள் குறைந்து போயினர் என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அதன் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். "அவரிடம் பணம் இல்லை! அதனால் அவருக்குச் சேவையில் நாட்டம் இல்லை!" என்பதாக இவர்களே அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுப்பார்கள்!
அரசியல் கட்சிகள் பணம் உள்ள வேட்பாளர்களைத்தான் விரும்புகின்றனர். காரணம் அவர்களால் பணம் செலவு செய்ய முடியும். பணம் செலவு செய்பவர்கள் அரசியலுக்கு வர ஒரு நோக்கம் உண்டு. பணம் போட்டால் பணத்தை எடுக்க வேண்டும். இவர்களில் பலர் இதற்கு முன்னர் அதைத்தான் செய்தனர். அரசியலுக்கு வந்தால் அதைத்தான் அவர்கள் செய்வார்கள்! அவர்களுக்குச் சேவையைப் பற்றி "அனா, ஆவன்ன!" கூட அறியாதவர்கள்! அது தான் அரசியல்!
நமக்கு இதுபற்றியெல்லாம் கவலை இல்லை. அரசியலை ஒதுக்கிவிட முடியாது. நமக்குத் தேவை அரசியலுக்கு நல்லவர்கள் வரவேண்டும். வல்லவர்கள் வரவேண்டும். கைசுத்தமானவர்கள் வரவேண்டும். ஊழல், கிரிமினல் பின்னணி உள்ளவர்களை அரசியலில் அனுமதிக்கக் கூடாது. இது தான் முக்கியம்.
எல்லா அரசியல் கட்சிகளும் இதனை ஒரு கொள்கையாகக் கொள்ள வேண்டும். தவறுகள் நடந்திருக்கலாம். அது தொடர வேண்டும் என்பது அவசியல் இல்லை. ஊழல் சாதாரண விஷயம் அல்ல. நாட்டை அரித்துத் தின்னும் ஒரு பயங்கர நோய். அதை வளர விடக்கூடாது என்பது தான் நமது நோக்கம்.
வருங்காலங்களில் அனைத்துக் கட்சியினரும் ஊழல் வாதிகளை வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நாம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் ஊழலுக்குப் பெயர் போன பாரிசான் போன்ற கட்சிகள் அதனை ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. அப்படியே அவர்கள் வளர்க்கப்பட்டவர்கள்!
அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி எதனை மனதில் வைத்துக் கொண்டு சொன்னாரோ நமக்குத் தெரியாது. ஆனால் அது நல்ல கருத்து என்பதில் சந்தேகமில்லை.
அப்படியே ஊழல்வாதிகள் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
வாழ்க மலேசியா!
Friday, 2 September 2022
ஒதுக்கப்படுகிறாரா?
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வருகின்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது ஒதுக்கப்படுவாரா எனறு பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன!
நானும் ரம்பாவ் தொகுதியைச் சேர்ந்தவன் தான். கைரி எப்போதுமே சிரித்த முகத்துடனே வலம் வருபவர். நல்ல சுறுசுறுப்பான மனிதர். இளமைத் துள்ளும் முகம். இங்கிலாந்தில் படித்தவர். இன பாகுபாடின்றி பழகுபவர்.
எனக்கு அவர் எப்போதுமே பிடித்தமான மனிதர் தான். இந்த கோவிட்-19 காலகட்டத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். இன்றைய நிலையிலும் சிறப்பாகவே பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவர் எப்போது சுகாதார அமைச்சராக தனது பணியை ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே அவரது பணியைச் சிறப்பாகவே செய்து வந்திருக்கிறார்.
அம்னோ அவரை ஒதுக்குகிறதா அல்லது இதே தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், அம்னோ துணைத்தலைவருமான முகமட் ஹசான் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கைரியை ஒதுக்கிவிட்டு ஹசான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட விரும்புகிறா என்பது புரியவில்லை.
முகமட் ஹசானும் போட்டியிட்ட ரந்தாவ் தொகுதியில் செல்வாக்குப் பெற்றவர் தான். எல்லா இனத்தவரின் ஆதரவு அவருக்கும் உள்ளது. இருவருமே நல்ல சேவையாளர்கள் என்பதில் ஐயமில்லை. ஹசான் இத்தனை ஆண்டுகள் போட்டியிட்ட தொகுதிலேயே போட்டியிட வேண்டுமென்று விரும்புகிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அவர் போட்டியிட பல தொகுதிகள் உள்ளன. அவர் மாநில முதலைமைச்சராக இருந்தவர். அவர் மாநில அளவில் செல்வாக்கு உடையவர். எங்கும் போட்டியிடலாம்.
ஆனால் கைரியின் நிலை வேறு. அவர் ஒரு தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டவர். தனது தொகுதியில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர். அதனால் அவர் தொடர்ந்து தனது தொகுதியில் போட்டியிடுவதைத் தான் அவர் விரும்புவார்.
ஆனால் இப்போது நடப்பது என்ன என்று புரியவில்லை. கைரியை அம்னோ கைவிடுகிறதா அல்லது ஹசான், கைரியை கைவிடுமாறு அம்னோவை நெருக்குகிறாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கைரி நல்ல சேவையாளர். அவர் தொடர்ந்து அம்னோவில் இருப்பது கட்சிக்கு நல்லது. ஊழலையே மூலதனமாகக் கொண்ட ஒரு கட்சி அம்னோ. கைரி போன்றவர்களின் பெயர் ஊழலில் இதுவரை சம்பந்தப்படவில்லை.
மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு கைரியிடம் உள்ளது. அவர் எப்போதும் ஒரு படித்த மனிதராகவே நடந்து கொள்கிறார்.
அதுவே அவரது சிறப்பு!
Thursday, 1 September 2022
இலஞ்சம் நமது முதல் எதிரி!
இலஞ்சம் என்றாலும் சரி, ஊழல் என்றாலும் சரி, கையூட்டு என்றாலும் சரி, பெயர் தான் வித்தியாசமே தவிர மற்றபடி மக்களிடமிருந்து அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் பணம் தான் இலஞ்சம்!
இன்று நமது நாட்டின் முதல் எதிரி என்றால் அது இலஞ்சம் தான். மேல்நிலை அரசியல்வாதிகளிலிருந்து கீழ்நிலை அரசாங்க ஊழியன் வரை இலஞ்சத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறான்! இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள். பாதைப் போட்டுக் கொடுத்தவர்கள் அரசியல்வாதிகள்.
முன்பு இலஞ்சம் என்பதெல்லாம் சிறிய அளவில் நடந்து கொண்டிருந்தது. அது ஒன்றும் பெரிய அளவில் மக்களைப் பாதிக்கவில்லை. ஆனால் இப்போது இலஞ்சம் என்பது நாட்டையே பாதிக்கிறது. நாட்டுப்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள ஒருவன் செய்யத் துணியாததை இலஞ்சம் செய்யத் துணிய வைக்கிறது!
நமது இந்திய அரசியல் தலைவர்கள் இலஞ்சத்திலேயே ஊறிப்போனவர்கள். மக்களைக் கொள்ளையடித்தார்கள். பள்ளி நிலங்களைக் கொள்ளையடித்தார்கள். ஆனால் அவர்களை யாரும் ஒன்றும் செய்யும் முடியவில்லை! வெளியே தைரியமாக, வெட்ட வெளியில் சுற்றி வருகிறார்கள்! அதனால் தான் இன்றைய இந்தியத் தலைவர்களைப் பலர் பின்பற்ற நினைக்கிறார்கள்! மித்ராவில் அது தான் நடந்தது. ஆனால் அதே இந்தியத் தலைவர்கள் இப்போது மக்களைப் பார்க்கவே கூசுகிறார்கள்! தலைகாட்டவே பயப்படுகிறார்கள்! எங்களுக்கு மலாய்க்காரர் தொகுதிகளைக் கொடுங்கள் என்று கதற வேண்டிய நிலை!
அதை விடுவோம். இப்போது நீதிமன்றம் நஜிப்-ரோஸ்மாவுக்குக் கொடுத்த தண்டனை மற்ற அரசியல்வாதிகளுக்குப் பாடமாக அமையுமா? புத்தி உள்ளவனுக்குப் பாடமாக அமைய வேண்டும். இனி வருங்காலங்களில் "நான் எதையும் செய்வேன்!" என்கிற மனோநிலை அடிப்பட்டுப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
"இனி எங்கள் கட்சி ஆட்சி தான்!" என்று யாரும் சொல்ல முடியாத சூழல் நாட்டில் உருவாகிவிட்டது. எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆட்சி எப்படி வேண்டுமானாலும் அமையலாம். தனிக்கட்சி ஆட்சி என்பதைவிட கூட்டாட்சி முறைகள் கூட வரலாம். மக்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை! எல்லாம் போலிகள் என்று தெரிந்துவிட்டது!
ஒரே கட்சி ஆட்சி என்றால் கொள்ளயடித்தாலும் "பரவாயில்லை! நீ மன்னிக்கப்பட்டாய்!" என்று சொல்லி தப்பித்து விடலாம். அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு வேளை எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடித்தால் இப்போது இலஞ்சம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் நீதிமன்றத்தை எதிர்நோக்க வேண்டி வரும்! இப்போது போல் இழுத்துக் கொண்டே போக முடியாது. வழக்குகளுக்கு நீதி வேண்டும், அது தான் முக்கியம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பழையன கிளறப்படும்!
இலஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அது மாபெரும் நோய். இந்த விஷயத்தில் முதலில் தண்டிக்கபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள். அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டால் மற்றவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள்!
இலஞ்சம் என்பது நாட்டின் முதல் எதிரி! அதனை ஒழிப்போம்!