Wednesday 25 October 2023

குறைகளை எங்கே சுட்டிக்காட்டுவது?

 

                                                              Little India, Seremban.

ஒற்றுமை அரசாங்கத்தில் நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிலை என்ன என்பதை நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை ஏன் விழுந்து விழுந்து தேர்ந்தெடுத்தோம் என்பது நமக்கும் புரியவில்லை, அவர்களுக்கும் புரியவில்லை!

ரொம்ப பெரிய பெரிய விஷயங்களுக்கெல்லாம் போக வேண்டாம்.  சிரம்பானில்  இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடத்தின் போது வழக்கம் போல சிறு சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை விற்பனை செய்ய "லிட்டல் இந்தியா" என்று சொல்லப்படுகின்ற இடத்தில் இடங்கள் ஒதுக்கப்படும். தீபாவாளிக்கு  இரண்டு  வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் . இது தான் வழக்கம்.

எனக்குத் தெரிந்து இந்த விற்பனை  எந்த வருடம் ஆரம்பித்ததோ  அப்போதிருந்தே,  அன்று முதல்  இன்றுவரை,   சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் இழுபறிகள், ஆவேசமான பேச்சுகள் தொடர்ந்து  கொண்டே   இருக்கின்றன.   ஒவ்வொரு சமயமும் 'இலஞ்சம்! இலஞ்சம்!' என்று தான் சொல்லப்படுகின்றது.

அப்போது ம.இ.கா. இருந்ததால் வசதியாக ம.இ.கா. வினரைக் குறை சொன்னோம்! இப்போதும் ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா.வினர் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது அந்தப் பொறுப்பு மாறி இருக்க வேண்டும்.  குறிப்பாக அது ஜ.செ.க. தொகுதி என்பதால் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அல்லது பி.கே.ஆர். அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போதும் என்ன குற்றச்சாட்டு முன்பு சொல்லப்பட்டதோ அதே குற்றச்சாட்டு தான் இப்போதும் சொல்லப்படுகிறது!

இது போன்ற சிறிய பிரச்சனையையே தீர்க்க முடியாதவர்கள்  இவர்கள் எங்கே பெரிய பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவது இயல்வு.

உண்மையைச் சொன்னால் ஒற்றுமை அரசாங்கத்தில் ஜ.செ.க., பி.கே.ஆர். கட்சிகளின்  நிலைப்பாடு என்ன என்பதே தெரியவில்லை. முடிந்தவரை எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடாமல் மௌன சாமியார்களாகவே இருக்க விரும்புகின்றனர்.  சீனர்களுக்கு எல்லா கட்சிகளுமே அவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கின்றனர்.  ஆனால் இந்தியர்களுக்கு இந்த இரு கட்சிகளுமே குரல் கொடுக்கத் தயாராக இல்லை. இந்தியர் பிரதிநிதிகள்  வாய் திறக்கவே பயப்படுகின்றனர்! அவர்களின் தொகுதிகளிலாவது  அவர்கள் வாய் திறந்து பேசட்டும்!

குறைகள் இருந்தால் அதனை நீக்கப்பாடுபடுங்கள். 'கண்ட' மாதிரி பேசுவது  தவறு தான்.  ஆனால் நீங்களும் கண்ட மாதிரி நடந்து கொண்டால் பேச்சுக்கள்  அளவு மீறுவதைத் தவிர்க்க முடியாது. முன்பு போல்  இப்போதைய நிலைமை இல்லை.  டிக்டாக்கில் எல்லாருமே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  அதனால் முடிந்தவரைப் பிரச்சனைகளைத் தீர்க்க முயலுங்கள்.  இல்லாவிட்டால் வாங்கிக்கட்டிக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment