கோழி விலை உயர்ந்தது! அரசாங்கம் விலை உயர்த்தப்படும் என்று சொன்னதுமே உடனே விலையை ஏற்றிவிட்டனர் வியாபாரிகள்!
விலையேற்றம் என்பது ரி.ம. 1.10 காசுகள். முன்பு விற்ற விலை ரி.ம.9.40. விலையேற்றத்திற்குப் பின்னர் அதன் விலை ரி.ம.10.50 என்று இன்று உயர்ந்து நிற்கிறது!
அரசாங்கத்தின் விலையேற்றம் இன்னும் உறுதிபடுத்தாத நிலையில் வியாபாரிகள் விலையை ஏற்றிவிட்டனர். யார் அவர்களைக் கேட்க முடியும் என்கிற கேள்வி நமக்கு எழத்தான் செய்கிறது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டு கொள்ளாத நிலையில் இப்படித்தான் நடக்கும் என்பது நமக்குப் புரிகிறது.
ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லுவார்கள். அரசாங்கம் நாங்கள் இன்னும் உயர்த்தவில்லை என்பார்கள். வியாபாரிகள் மொத்த வியாபாரிகளின் மீது பழிபோடுவார்கள். இது தெரிந்த கதை தான்! பாதிக்கப்படுவது மக்கள் தான். யார் கண்டு கொள்வது?
கோழி உணவு என்பது, இன்றைய நிலையில், பணக்கார உணவு என்று சொல்வதற்கில்லை. அனைவராலும், பணக்காரன்-ஏழை என்கிற பாகுபாடு இல்லாமல் சாப்பிடப்படும் ஓர் உணவு. அதன் விலையேற்றம் என்பது ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும். ஒரேடியாக விலை ஏறும் போது அது ஏழை குடும்பங்களைப் பாதிக்கத்தான் செய்யும்.
மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும் போது கோழி விலை தான் ஓரளவு குறைச்சலான விலையில் விற்கப்படுகிறது. அதனால் தான் கோழிகள் நாட்டில் பரவலாக - மிக எளிதாகக் கிடைக்கும் உணவாக நாடெங்கிலும் விற்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. எந்த ஒரு மளிகைக்கடைக்குப் போனாலும் கோழி இறைச்சி மிக எளிதாகக் கிடைக்கும். அந்த அளவுக்கு அருகிலேயே கிடைக்கும் உணவாக அது மாறிவிட்டது.
அரசாங்கத்திடம் நமது கோரிக்கை எல்லாம் கோழி விலை ரி.ம.10.50 என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத விலை. விலை அதிகம். நடுத்தர குடும்பங்கள் கூட இதனைச் சமாளிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். ஏழைகள் நிலை என்னவாகும்? அதுவும் குறிப்பாக தீபாவளி போன்ற பெருநாள் காலங்களில் விலையை ஏற்றுவது இன்னும் சிரமத்தைத்தான் ஏற்படுத்தும்.
பெருநாள் காலங்களில் விலைகளை ஏற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு, விலையைக் குறைத்து, சீர் செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
No comments:
Post a Comment