Wednesday 4 October 2023

அரசியல் வேண்டும்!

 


நாம் விரும்புகிறோமோ இல்லையோ அரசியல் நமக்குத் தேவை. அதிலும் சில கட்டுப்பாடுகள் நமக்கு வேண்டும்.  ஏதோ 'அவிழ்த்துவிட்ட காளை' என்பார்களே  அதெல்லாம் சரிபட்டு வராது. இப்போது நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

நமது இந்தியர்களின் மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால்  நாட்டின் மக்கள் தொகையில், நாம் மூன்றாவது நிலையில் இருக்கிறோம். நாம் எந்தக் காலத்திலும் தனித்து அரசாங்கத்தை அமைக்க முடியாது. அந்த அளவுக்குக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறோம்.

ஆனால் நாம் புத்திசாலிகளாக இயங்கினால் இருக்கின்ற அரசாங்கத்தை  நம்மால் பலவீனப்படுத்த முடியும்.  நாம் சொல்வதைக் கேட்கும் அரசாங்கத்தை  அமைக்க முடியும்.

யானை தன் பலம் அறியாததினால்  தான் மனிதன் சொல்லுகிறபடியெல்லா கேட்டு ஆட்டம் ஆடுகிறது!  அது போல நமது பலம் நமக்குத் தெரியவில்லை.  எவன் எவனோ நமக்குப் புத்தி சொல்லுகிறான்.  அவன் சொல்லுவது சரிதானென்று நாமும் ஆட்டம் ஆடுகிறோம்!  நமது புத்தியை நாம் எப்போதுமே பாவிப்பதில்லை. பிறர் சொல்லுவதைத் தான் நாம் கேட்கிறோம்,  என்ன செய்ய?

நாம் விரும்புகிறோமோ இல்லையோ  அரசியலை வருங்காலங்களில் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். நாம் மாமன் மச்சானுக்காக வாக்களிக்கவில்லை. நமது எதிர்காலத்திற்காக வாக்களிக்கிறோம். அதைக் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில்  நாம் இருக்கிறோம்.

நமது நாடாளுமன்ற தொகுதிகள் 222.    நமது பலம்  என்பது சுமார்  68 தொகுதிகளில் மட்டுமே. அங்கெல்லாம் நமது வாக்குகள் 10, 20, 30 விழுக்காடு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.  நம் வாக்கு எங்குப் போகிறதோ அவர்கள் வெற்றி பெற  வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  68 தொகுதிகள் என்பது சாதாரண  விஷயம் அல்ல.

இங்கு நான் சொல்ல வருவது இது தான். இந்த ஐந்து ஆண்டுகளில் ஆளுங்கட்சி மீது நமக்கு நம்பிக்கை இல்லையென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆள  நாம் எதிர்கட்சிக்கு வாக்களிபோம். முன்பு போல ஐம்பது அறுபது ஆண்டுகள் நாம்  காத்திருக்க வேண்டாம். நம்முடைய பிரச்சனைகள் எதுவும் கவனிக்கப்படவில்லை என்றால் நாம் ஏன் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?

இனி நாம், தமிழர்கள், எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும்  தமிழர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றோம். அதனால் நமது வலிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். நமது ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை  தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இனி வருங்கால அரசியலில் ஒன்றிணைந்து நாம் செயலாற்ற வேண்டும். நம்மிடம் ஒற்றுமை உண்டு. இன்னும் அதிகம் அதனை வலுப்படுத்துவோம்!

வாழ்க தமிழினம்!

No comments:

Post a Comment