Monday 30 October 2023

விரைவில் எதிர்பார்க்கலாம்!

 

மனிதவள அமைச்சர்  வி.சிவகுமார் கூறியிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான்.

ஆனால் அது நாட்டு நலனுக்காக என்று சொல்லும் போது யார் அதனைத்  தவறு என்று சொல்ல முடியும்?  வெளிநாட்டவர் சுமார் 150,000 பேர் வெகு விரைவில் நாடு வந்தடைவர்  என்பதாக அவர் கூறியிருப்பது  'இன்னுமா?' என்கிற கேள்வி நம்மிடையே எழுவது இயல்பு தான்.

இப்போது நாம் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டவர் தான் அதிகம் வாழ்வதாக  நமக்குத் தோன்றுகிறது.   இந்நிலையில் இன்னும் பெரிய அளவில் வெளிநாட்டவரைக் கொண்டு வரும் போது நமக்கு அதிர்ச்சி  ஏற்படத்தான் செய்யும்.

இப்போது பல இடங்களில் நாம் பார்ப்பது என்ன?  சண்டை சச்சரவுகள்  வெளிநாட்டவருக்கும் உள்நாட்டவருக்கும்! இங்கு உள்நாட்டவர்கள் செய்கின்ற தொழில்களை  வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

அரசாங்கம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக வெளிநாட்டவரின் சேவையை நம்பி இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. நமக்கும்  அது புரிகிறது.  ஆனால் வருபுவர்கள்  எந்த வேலைகளுக்காக எடுக்கப்படுகிறார்களோ  அந்த வேலைகளைத் தவிர்த்து  அவர்கள் வேறு வேலைகளுக்குப் போகாதபடி  கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமை. பிரச்சனை என்னவெனில் அது போன்ற ஒரு கண்காணிப்பு  மையத்தை   அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.  வருகிறவர்களும் நாட்டை நன்கு 'புரிந்து' கொண்ட பின்னர்  தனித்தே செயல்பட ஆரம்பிக்கின்றனர். சொந்தமாகத் தொழில் செய்கின்றனர். 'இது எங்கள் நாடு' என்கிற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு 'எங்களை யாரும் அசைக்க முடியாது'  என்கிற நிலைக்கு வந்துவிடுகின்றனர்! உண்மையைச் சொன்னால் அரசாங்கத்தால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை!

இந்த நிலையில் இன்னும் புதிய வரவுகள் நின்றபாடில்லை. உள்நாட்டவர்கள் இங்கு வேலை இல்லை என்று சொல்லி வெளிநாடுகளுக்குப் போகின்றனர்.  அண்டை நாடான சின்னஞ்சிறு சிங்கப்பூர் தான் இப்போதைக்கு  மலேசியர்களுக்கு  அடைக்கலம் தரும் நாடு.  இங்கு வேலை இல்லை என்று சொல்லி படித்தவர்கள் பலர் பல நாடுகளுக்கும் படை எடுக்கின்றனர். 

இங்குள்ள தொழில் நிறுவனங்கள்  வேலைக்கு ஆளில்லை என்று சொல்லி  வெளிநாடுகளிலிருந்து  தொழிலாளர்களைக் கொண்டு வருகின்றனர்! எங்கே என்ன நடக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசாங்கத்துக்காவது  புரிகிறதா என்பதும் நமக்கு விளங்கவில்லை.

எந்த நாட்டவர் மீதும் நமக்கு  வெறுப்பில்லை.   மலேசியர்களை மறந்து விடாதீர்கள் என்று தான் நினைவூட்டுகிறோம்!

No comments:

Post a Comment