ஒவ்வொரு தீபாவளி கொண்டாட்டத்தின் போதும் சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை விற்பனைச் செய்ய சிறு சிறு கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ய எல்லா நகரங்களிலும் இந்திய சிறு வணிகர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர்.
அது தொடர்ந்து பல ஆண்டகளாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. சிறு வியாபாரிகளை ஊக்குவித்து அவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பையும் வழங்குகிறது அரசாங்கம். இதனால் சிறு வியாபாரிகள் பலர் பயன் அடைகின்றனர்.
ஆனாலும் ஒருசில விஷயங்கள் நம்மைக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சண்டை சச்சரவுகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இடங்களை ஒதுக்குவது நகராண்மைக் கழகம். அங்கே உள்ள ஒரு சிலர் ஏதோ கோளாறு செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இவர்கள் தங்களது ஆதிக்கத்தைக் காட்ட விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. அல்லது இலஞ்சம் வாங்க முயற்சி செய்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஏதோ ஒரிரு முறை என்றால் மன்னித்து விடலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்றால்.......? எங்கோ பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது! எப்போதுமே ஒரு சாரார் இந்தியர்களுக்குள் அடித்துக் கொள்வதையே விரும்புகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஏன் இந்தப் பிரச்சனைத் தொடர்ந்து வர வேண்டும்?
ஒன்று பிரச்சனைக் கொடுக்கும் நாகராண்மைக்கழக அதிகாரிகளை மாற்றுங்கள். இவர்கள் வேண்டுமென்றே வியாபாரிகளிடையே சச்சரவுகளை ஏற்படுத்துகின்றனர். பாவம்! இந்த சிறு வணிகர்கள். நிம்மதியாகப் பொருள்களை வாங்கி, நிம்மதியாக வியாபாரம் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தக்கதை தொடர்கிறது.
சிறு வியாபாரிகளுக்கு ஒரு சிறிய ஆலோசனை. "நான் சிறு வியாபாரி" என்று காலங்காலமாக முத்திரைக்குத்திக் கொள்ளாதீர்கள். இது தான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படியே பெரியவர்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அதனை ஏதோ பழக்க தோஷம் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்கள் பிள்ளைகள் எல்லாம் படித்தவர்கள், கல்விகற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக தங்களது பொது அறிவைப் பயன்படுத்தி தொழிலை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும்.
சிறு வியாபாரிகள் வளர வேண்டும். அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். புதிய வியாபாரிகள் வரவேண்டும். புதியவர்களுக்குப் பழையவர்கள் இடம் கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நடந்து கொண்டே தான் இருக்க வேண்டும். அப்போது தான் நமது சமுதாயம் முன்னேறுகிறது என்று நமக்கும் நம்பிக்கை பிறக்கும்.
கடைசியில் எல்லாமே பொருளாதார முன்னேற்றம் தான்! அதற்கு இந்த தீபாவளி சந்தையும் ஒரு காரணம் என்பதை மறப்பதற்கில்லை!
No comments:
Post a Comment