அரசியல் என்பது பேசக்கூடாத விஷயமல்ல!
ஆனால் ஓர் எச்சரிக்கை. சீனர்களைப் பார்த்தீர்களா? அவர்கள் அதிகம் அரசியல் பேசுவதில்லை. குறிப்பாக நம்மிடம் பேசுவதில்லை. ஆனால் அவர்களிடம் அரசியல் தெளிவு இருக்கும். நாமும் அவர்களின் பாதையைப் பின்பற்றுவது தான் சரி. நம்மிடம் தெளிவு இல்லை. ஆனால் வாய் அதிகம் இருக்கும்!
சீனர்கள் அரசியல் பேசினால் அவர்களுக்கு என்ன இலாபம் என்று பார்ப்பார்கள். அரசியல் என்பது அவர்களுக்கு இலாப-நஷ்ட கணக்கு பார்ப்பது போல.
நாம் அரசியல் பேசினால் நமக்கு என்ன தான் வேண்டும் என்று நமக்குத் தெரிவதில்லை. ஒரு வேளை கள் வாங்கிக் கொடுத்தாலே போதும் நமது அரசியல் மாறிவிடும்! நான் அதைச் சொல்லவில்லை. அந்தக் கால நாடாளுமன்ற உறுப்பினர் மகிமா சிங், சொன்னது. இதெல்லாம் கடந்த கால கதைகள். இப்போது நாம் அரசியலில் தெளிவு பெற்று வருகிறோம். நாம் தனிப்பட்ட முறையில் சிந்திப்பதைவிட நமது சமுதாயம் என்கிற ரீதியில் தான் சிந்திக்க வேண்டும்.
நமது சமுதாயம் என்றால் என்ன சொல்ல வருகிறோம்? சிறிய ஸ்டால்கள் வைத்து வியாபாரம் செய்வதற்கு நமக்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டும். மேற்கல்வி பயில பல கட்டுப்பாடுகள். அந்தக் கட்டுப்பாடுகள் களையப்பட வேண்டும். எங்கள் இளைஞர்களுக்குப் போதுமான தொழிற்பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அரசாங்க வேலைகளில் எங்களுக்கும் போதுமான இடங்கள் ஒதுக்க வேண்டும். தனியார் துறைகளிலும் எங்களுக்கும் போதுமான இட ஒதுக்கீடுகள் தேவை. இப்போது தனியார் துறைகளிலும் தமிழர்களுக்குப் போதுமான வேலைகள் கிடைப்பதில்லை.
சமுதாய ரீதியில் பிரச்சனைகளைக் களைந்தாலே தனியார் பிரச்சனைகளும் களையப்படும்.
இதற்கெல்லாம் நமக்கு வலிமையான அரசியல் தேவை. அதற்கு நாம் ஒரே குரலாய் ஒலிக்க வேண்டும். நாம் பிரிந்து கிடக்கும் வரை நாம் எதிர்பார்க்கும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. நம்மைப் பிரித்து வைக்க பலர் நம்மிடையே உள்ளனர். நாம் ஒன்று சேர்வதை அவர்கள் விரும்புவதில்லை. அதனால் தான் தமிழர்கள் தங்களுக்கு எது முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நமது தேவைக்குத்தான் அதாவது தமிழர்களின் தேவைக்குத்தான் நாம் பேசுகிறோம்.
நம் சிந்தனைகள் சீனர்களைப் போல இருக்க வேண்டும். நமக்கு என்ன இலாபம், தமிழனுக்கு என்ன இலாபம் என்கிற சிந்தனை உங்களுக்கு இருந்தால் சீனர்களைப் போலத்தான் சிந்திக்க வேண்டும்.
அதனால் அரசியல் நமக்கு வேண்டும், அரசியல் நாம் பேச வேண்டும். சும்மா உளறல் வேண்டாம். அதிகம் பேச வேண்டாம். ஆனால் உள்ளுக்குள் அதிகம் பேசி அரசியலைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஒரே குரலாய் ஒலித்தால் நமது வெற்றி உறுதி!
No comments:
Post a Comment