Saturday 7 October 2023

அறிவைப் பயன்படுத்துங்கள்!

 

ஒரு பக்கம் உணவகங்களில் வேலை செய்ய ஆளில்லை. அதனால் இந்தியாவிலிருந்து வேலையாட்களைத் தருவிக்க மகஜர் மேல் மகஜர். 

இன்னொரு பக்கம் வேலையாட்கள் சரிவர கவனிக்கப்படுவதில்லை  என்கிற குற்றச்சாட்டு.  அவர்களுக்கு எத்தனை மணி நேர வேலை என்கிற நேரக் கட்டுப்பாடு இல்லை.  இங்கு வரும் போது பேசப்படுவது ஒரு சம்பளம். இங்கு வந்த பிறகு கொடுக்கப்படுவதோ  ஏற்றுக்கொள்ள முடியாத   சம்பளம்

நாடு வந்ததும் அவர்களின் கடப்பிதழ் பறிமுதல். அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள்  என்பது அவர்களுக்குத் தெரியாது. ஏதோ பயங்ரவாதிகளுக்கான உணவகம் என்றே தோன்றுகிறது! கைப்பேசிகளையும் முதலாளி வாங்கி வைத்துக் கொள்கிறார். அதனால் வெளி உலகிற்குப் பேச வாய்ப்பில்லை.  பேச வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்குக் கொலை மிரட்டல். இன்னும் வன்முறை. சம்பளம் கொடுப்பதில்லை.  விடுமுறை என்பதெல்லாம்  நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.  ஏதோ ஜப்பான் காலத்தில் ஜப்பானியனின் ஆட்சி போன்ற நிலைமை!

இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளூர் உணவக முதலாளிகளின்  மீது சுமத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தான் உணவக முதலாளிகளின் சங்கம்  வேலைக்கு வெளிநாட்டவர் தேவை என்பதாக தொடர்ந்து ஆண்டுக் கணக்கில்  அரசாங்கத்திடம் மகஜரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது! நமக்கு அது வேடிக்கை தான்!  இருக்கிற வேலையாட்களைக்  கவனிக்க முடியாதவர்கள்  இன்னும் இன்னும் தேவையாம்.  எதற்கு? கொத்தடிமைகளை உருவாக்கவா?

நாம் கேட்பதெல்லாம் உணவக முதலாளிகளின் சங்கம் ஏன் இந்த வன்முறையைக் கையாளும் முதலாளிகளிடம்   ஏன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது தான்.  ஒரு  முதலாளியை 'உள்ளே' தள்ளி நொங்கு நொங்கு என்று நொங்கினால்  அடுத்த முறை அவன் ஏன் அந்த தவற்றைச் செய்கிறான்?  நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல, தரமான உணவகம்.  தனது பணியாளர்களை நன்கு கவனிக்கும் உணவகம். தரமான முதலாளிகளால் நடத்தப்படும் உணவகம். ரௌடிகளால் நடத்தப்படும் உணவகங்கள் எவை என்பது சங்கத்திற்குத் தெரியாமலா இருக்கும்?

எப்படியோ இனி நாம் இது போன்ற சம்பவங்களைப் படிக்க நேர்ந்தால் பொது மக்களே மனிதவள அமைச்சிற்குப் புகார் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். பிழைக்க வந்தவனைப் பிழிந்து எடுத்துவிட்டு  எதையும் கொடுக்காமல் அவனைத் திருப்பி அனுப்புவதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!

முதலாளிகளே இனி உங்கள் கையில்!

No comments:

Post a Comment