Thursday 26 October 2023

நமது பள்ளிகள் வரம்பை மீறுகின்றன!

 

                                        Students, Teachers holding  toy guns.  Malaysia

நமது பள்ளிகள் வரம்பை மீறுகின்றன என்று நான் சொல்லவில்லை நமது பிரதமரே கூறுகின்றார்!

இஸ்ராயேல்-பாலஸ்தீன விவகாரத்தில் நாம் எல்லா காலங்களிலும்  பாலஸ்தீனத்தை தான் நாம் ஆதரித்து வருகிறோம்.

இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பதை அரசாங்கத்தின் கைகளில்  விட்டுவிடுங்கள்.  அது தான் சரியான முடிவாக இருக்கும். அரசாங்கம் ஒன்றும் தவறான வழிகளைக் காட்டவில்லை. அவர்கள் பாதை சரியானது என்கிற போது அவர்களை ஆதரிப்பது என்பது நமது கடமை.

அரசாங்கம்  அப்படியே தவறான பாதையைக் காட்டினாலும்  மலேசியர்கள் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நமக்கும் போதுமான கல்வி அறிவு இருக்கிறது அல்லவா?

இந்தப் பிரச்சனையில் பலர் இந்த சண்டையை மூட்டியவர்கள் பாலஸ்தீனர்கள்  தானே  என்று அவர்கள் மீது பழியைச் சுமத்தினாலும், பாதிக்கப்பட்டவர்கள்  அவ்வளவு சீக்கிரத்தில் செய்த துரோகங்களை மறந்துவிடப் போவதில்லை.

நமது நாட்டைப் பொறுத்தவரை நாம் பாலஸ்தீனர்களை ஆதரிக்கிறோம். அவ்வளவு தான். இப்போது அரசாங்கம் சரியான பாதையில் செல்லுகிறது. பாலஸ்தீனர்களுக்கான உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக மருத்துவ உதவிகள். இதுவே அவர்களுக்கு முக்கியத் தேவை. எல்லாம் சரியான வழியில் செல்லுகின்றன.

ஆனால் பள்ளிகளில் நடைபெறுகின்ற ஒரு சில விஷயங்கள் நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.  மாணவர்கள் பிரச்சனையைப்  புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது வேறு  ஆனால் அவர்களைப் போருக்குத் தயார் படுத்துவது  போன்ற    வேலைகளில் ஈடுபடுத்துவது என்பது வேறு.  இதில் ஆசிரியர்கள் கூட பங்குப்  பெற்று என்ன தான் சொல்ல வருகிறார்கள்?  

இவர்களால் யாருக்கு என்ன இலாபம்?  இவர்களால் போர் செய்ய முடியாது.  நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான்  நாம் செய்ய வேண்டும்.  அவர்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அதனைச் செய்ய நாம் கடமைப்பற்றிருக்கிறோம்.  பள்ளிப் பிள்ளைகளுக்கு நீதி, நியாயம்  பற்றி போதிக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது ஆசிரியர்களுக்கே இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்பது புரிகிறது! 

இன்று நாட்டில் நாம் அருந்துகிற பானங்கள் அனைத்தும் இஸ்ராயேலர்களின்  பங்கு அதிகம். ஆர்ப்பாட்டங்கள் செய்துவிட்டு அவர்களுடைய பானங்களத் தான் குடிக்கப்போகிறோம். குறைந்தபட்சம் அவர்களின் பொருள்களைப் புறக்கணியுங்கள்  என்று இளம் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.

கொஞ்சம் சிந்தியுங்கள். கொஞ்சம் அக்கறை எடுத்து அவர்களின் பொருள்களைப் புறக்கணியுங்கள். அது போதும்!

No comments:

Post a Comment