Wednesday 11 October 2023

நம்மிடையே கட்டுப்பாடுகள் தேவை!

 

நாம் பண்புள்ள மனிதர்கள். அதாவது தமிழர்கள் பண்புள்ளவர்கள். அதிலே எந்த குறைபாடும் இல்லை.

ஆனால் ஒரு சில விஷயங்கள் நம்மைக் கெட்டவர்களாகவே காட்டுகின்றன. கூட்டமாக செயல்படும் போது, ஒரு சில வேலைகளில், நாம் கெட்டவர்களாக  சித்தரிக்கப்படுகிறோம். நாம் சரியாக இருந்தாலும் நம் பகைவர்கள் நம்மைத் தூண்டிக்கொண்டே இருப்பதால் நம்மால் நல்லவர்களாக  இருக்க முடியவதில்லை.

நம் தமிழ் மக்களுக்கு ஓர் ஆலோசனை. நாம் கெட்டவர்கள் என்று காட்டுவதற்காக ஒரு கூட்டம் எப்போதும் நேரம் காலம்  பார்த்துக் கொண்டிருக்கிறது. பல வழிகளில் நம்மை மற்ற இனத்தவரிடம் தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறது. இந்தியர் யார் எதைச் செய்தாலும்  பழி  என்னவோ தமிழர் மீது தான் சுமத்தப்படுகிறது!

நாம் சொல்ல வருவதெல்லாம் தமிழர்களே! கட்டுப்பாடுகளோடு வளருங்கள்.  கட்டுப்பாடுகள் என்பது நமது நன்மைக்காகத்தான். கட்டுப்பாடுகளோடு வாழும் போது நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும்  அது பயன் தருகிறது.   நாமும் நமது குடும்பமும் சரியாக இருந்தால்  மற்றவர்களின் மரியாதை நமக்குத் தானாகவே வரும்.

மற்றவர்களைப்பற்றி நாம் கவலைப்பட  வேண்டாம்.  நாம் சரியாக இருந்தால் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களும் சரியாகி விடுவார்கள்.

சமீபத்தில் பிரச்சனை ஒன்றில் ஆளாளுக்கு  மைக் பிடித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் ஒருவர் வழக்கறிஞர்களை எல்லாம் திட்டோ திட்டு என்று திட்டுகிறார்.தங்க இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்கும் கதை இது. உங்களுடைய கோபத்தை நாம்  அறிந்திருக்கிறோம். ஆனால் கட்டுப்பாடு தேவை. இப்படியெல்லா தறிகெட்டுப் பேசும் போது நம்மை 'மபோ' என்று மற்றவர் கேலி செய்கிறார்கள்.

எது உண்மை அல்லது பொய் என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் நம்மால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. காரணம்  பொய்யை உண்மை என்று சொல்லுவதற்கு நம்மிடையே ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாம் நல்ல மனிதர்கள் என்பதாக எல்லா காலங்களிலும் நமக்குப் பெயர் உண்டு. முடிந்தவரை மற்ற இனத்தவரிடம் நாம் நல்லவர்களாகவே நடந்து கொள்கிறோம்.  நமக்குள் என்கிறபோது, நம் இனத்தவர் என்கிறபோது  முற்றிலுமாக நமது குணம் மாறிவிடுகிறது! நம்மால் மன்னிக்க முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடுகள் உண்டு. சொந்தப் பிள்ளைகளை அடிக்க முடியாது, மனைவியை அடிக்க முடியாது - சட்டத்துக்குப் பதில் சொல்ல வேண்டும். பொது காரியங்களும் அப்படித்தான். வாய்க்கு வந்ததைப் பேச முடியாது. சட்டம் உண்டு. அதை மதிப்பது நமது கடமை.

கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம்! கட்டுப்பட்டு  வாழ்வோம்!



No comments:

Post a Comment