இது எல்லா தாமான்களிலும் உள்ள பிரச்சனைதான்.
என் வீட்டில் எனது கார் வீட்டின் உள்புறம், கார் நிறுத்துமிடத்தில், நிறுத்தப்பட்டிருக்கிறது. யாருக்கும் எந்த இடைஞ்சலுமில்லை. என் வீட்டின் வெளிப்புறம், கார் நிறுத்தக் கூடாத இடத்தில், வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன!யார் வீட்டுக் கார்கள் என்பது கூட தெரியவில்லை!இதனால் என்ன பிரச்சனை? எங்கள் வீட்டுக் காரை 'பார்க்கிங்' செய்வதற்கு எங்களுக்கு மகா மகா இடைஞ்சல்! இருந்தாலும் அனைவரும் நல்ல மனிதர்கள் என்பதால் எந்தப் பிரச்சனையும் எழவில்லை!
என் நண்பர் ஒருவர் மகா திறமைசாலி. அவர் வீட்டு முன் யாரும் கார்களை நிறுத்தக் கூடாது என்பதற்காக அந்த காலியான இடங்களில் நிறைய பூச்செடிகளை நட்டுவிட்டார்! அந்த இடங்களில் யாரும் கார்களை நிறுத்த முடியாதுபடி செய்துவிட்டார்! அவர் அங்காளி பங்காளி சண்டைகளைப் பார்த்தவர். பவருக்குத் தெரிந்தது நமக்குத் தெரியவில்லை.
ஒரு சில தாமான்களில் நாம் பார்த்திருக்கிறோம். இரண்டு பக்கமும் கார்கள். நடுவில் கார்களே போகாதபடி செய்திருப்பார்கள்! அந்த அனுபவமும் நமக்கு உண்டு. ஒரு வீட்டில் இரண்டு மூன்று கார்கள் இருந்தால் என்ன தான் செய்வது?
இப்போது ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. அதன் அமலாக்கத்தில் என்ன பிரச்சனைகள் வரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜொகூர், பாசிர் கூடாங் நகராணமைக் கழகம், வீடுகளின் முன்னால் கார்களை நிறுததக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. அது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனை ஒரு பரிட்சார்த்த முறை என்பதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அமலாக்கம் இங்கு வெற்றி பெற்றால் ஒரு வேளை இது நாடெங்கிலும் அமலுக்கு வரலாம்.
கேட்க நன்றாக இருக்கிறது. இது சாத்தியமா என்கிற குரலும் நமக்குக் கேட்கிறது! சாத்தியம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனாலும் அவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. முயற்சி செய்கிறார்கள். நல்ல விஷயம் தான்.
போகப்போக அதிலே கொஞ்சம் மாற்றங்கள் ஏற்படலாம். நூறு விழுக்காடு சரியாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. பரவாயில்லை. ஏறக்குறைய இருந்தாலே போதுமானது. ஆனாலும் அமலாக்கம் செய்யப்படும் வரை நம்மால் எந்த முடிவுக்கு வர முடியாது.
அதுவரை நாமும் அவர்களின் குரலுக்குச் செவி சாய்ப்போம்!
No comments:
Post a Comment