Tuesday 24 October 2023

கார் மரணம் தொடர்கிறது


 சமீப காலமாக கார்களில்  குழந்தைகளை விட்டுச் செல்வதும், மரணங்கள் ஏற்படுவதும்  மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகவே தோன்றுகிறது. எல்லாம் கைக்குழந்தைகள். சில மாதங்களே ஆன குழந்தைகள்.

குழந்தைகளை இப்படி கார்களில் விட்டுச் செல்வதும் அப்புறம் "மறந்து விட்டேன்" என்று சொல்லுவதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் என்ன நடக்கிறது?  குழந்தைகள் கார்களின் உள்ளே இருக்கிற உஷ்ணத்தில் வெந்து போய், மூச்சுத்திணறி மரணமடைகிறார்கள்.

கேட்கவே மனம் கொந்தளிக்கிறது.   என்னன்னவோ சொல்லத் தோன்றுகிறது. என்ன செய்ய?  "பெற்றோர்கள் எப்படி மறக்கிறார்கள்?" என்று கேட்டாலும் இன்னொரு பக்கம் "பிள்ளைகளை எப்படி அப்படியே காரில் விட்டுவிட்டு இவர்கள் ஷாப்பிங் செய்யப்  போகிறார்கள்?" என்றும் கேட்கத் தோன்றுகிறது.  ஏன் அவர்கள் குழந்தைகள் தானே?  கையில் தூக்கிக்கொண்டு போகலாமே என்று கேட்டால் 'இவர்களை வைத்துக்கொண்டு எதையும் வாங்க முடியாது" என்கிற பதில் வருகிறது!

இன்றைய  இளம் பெற்றோர்கள் எந்த ஒரு கஷ்டமும் படக்கூடாது  என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எல்லா கஷ்டங்களையும் போல  இதுவும் ஒரு கஷ்டம் என்று நினைக்கிறார்கள்!  அதாவது பிள்ளைகள் கஷ்டம் அல்ல. அவர்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது,  கடமைகளைச் செய்வது - அதனைக் கஷ்டமாக நினைக்கிறார்கள்!   வேலைக்குப் போவது, வருவது எளிது என்கிற கனநிலைக்கு  அனைவரும் வந்துவிட்டார்கள்!

அதனால் தான் இப்போதெல்லாம் ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம்  என்கிற நிலைமைக்கு  இன்றைய ஜோடிகள் வந்துவிட்டனர்! அது அவர்களது விருப்பம். ஆனால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு  கொடுப்பதில் அவர்கள் அலட்சியம் செய்ய முடியாது. அது அவர்களது விருப்பம் அல்ல.  அது கடமை.

அதுவும் பராமரிப்பு மையம் இருந்தும் இப்படியெல்லாம் நடந்தால் என்ன தான் செய்வது?  பராமரிப்பு மையம் இருந்தும் மரணம், இல்லாவிட்டாலும் மரணம், பராமரிப்பு மையத்திலேயே மரணம்,  மழலையர் பள்ளிகளுக்கு அனுப்பினாலும் மரணம் - இப்படி எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்படி என்றால் யாரும் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இது போன்ற மரணங்களை எப்படி தடுக்கப் போகிறார்கள்  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment