Tuesday 31 October 2023

நமது பெண்கள் திறமைசாலிகள்!

 

நமது பெண்கள் திறமைசாலிகள் என்பதைச் சமீபகாலமாகப் பார்த்து வருகிறோம்.

தீபாவாளி காலத்தில் நாம் பார்க்கிறோம். ஆன்லைனில்  என்னமாய்  தொழில் செய்கிறார்கள்!  வாழ்த்துகள்!

நான் சொல்ல வருவது 'ஏதோ தீபாவளிக்காக!'  என்று இத்தோடு இந்தத் தொழிலை நிறுத்தி விடாதீர்கள். இதனைத் தொடருங்கள். இப்போதும் நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்காக  இதனைப் பலர்  செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.  இல்லை என்று சொல்ல முடியாது. நிறைய நிறுவனங்கள் ஆன்லைனில் தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இது ஒரு கட்டாயச் சூழல் தான்.  வாடிக்கையாளர்கள்  கடைகளைத் தேடி போவது குறைந்துவிட்ட நிலையில்  நிறுவனங்கள் இப்போது ஆன்லைனை நாடுகின்றனர். அதுவும் குறிப்பாகப் பெண்கள் சிறப்பாகவே செயல்படுகின்றனர்.   இந்தியப் பெண்களும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை  அவர்கள் வியாபாரம் செய்யும்  முறையைப்  பார்த்தாலே புரியும்.

நமது சமூகத்தைப் பொறுத்தவரைப் பெண்கள் தான் புதுப்புது முயற்சிகளைச் செய்வதற்குத் துணிவுள்ளவர்களாக இருக்கின்றனர்.  கணவர்கள்  பொறுப்பற்றவர்களாக  இருந்தால் பெண்கள் தான் அனைத்துக் குடும்ப சுமையை ஏற்கின்றனர்.  வேலை இல்லையென்றாலும் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

இன்றையச் சூழலில் சொந்தமாக ஏதாவது சிறு தொழில்களில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் நமது இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டிருக்கிறதே அதுவே  பெரிய வெற்றி தான். நமது இளைஞர்கள்  டுரியான் பழம்  விற்பதை நான் பார்த்ததில்லை.  அதனை ஓர் இளைஞர் செய்வதை  இப்போது நான் பார்க்கிறேன்.

இந்த பெருநாள் காலங்களில்  முறுக்கு வியாபாரம், இனிப்பு வகைகள்  பல பெண்கள் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். இத்தோடு நின்று விடாமல் அதனைத் தொடர்ச்சியாக செய்தால்  அந்த வருமானமும் ஒரு கூடுதல் வருமானமாக இருக்கும்.

இப்போது அனைத்து வியாபாரங்களும் ஆன்லைனில்  செய்யப்படுகின்றன.  வெளியே போய் செய்ய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்  பொருட்கள் அனைத்தையும்  ஆன்லைனில்  விற்பனை செய்யலாம். தயக்கம் வேண்டாம். தடுப்பார் யாரும் இல்லை?  பின் என்ன,  விற்பனையில் பின்னி எடுப்போம்!

No comments:

Post a Comment