முன்னாள் பிரதமர் நஜிப் என்ன செய்தாரோ அதைத்தானே அன்வார் செய்கின்றார் என்று நம்மில் பலர் கேட்கின்றனர்.அதாவது அவர் செய்ததைவிட இவர் என்ன பெரிதாக இந்தியர்களுக்குச் செய்துவிடப் போகிறார் என்கிற கேளவி சரியாகத்தான் இருக்க வேண்டும். அதை மறுக்கவும் முடியாது.
ஆனால் இருவருக்கிடையே ஒரு சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் மறுப்பதற்கில்லை. மித்ரா தொடங்கப்பட்ட காலத்தில் அந்த அமைப்பு ம.இ.கா.வினர் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது பலரும் அறிந்தது தான்.
அந்த காலகட்டத்தில் நூறு மில்லியன் நிதி உதவி, ஓர் ஆண்டில் கூட, முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அப்படி பயன்படுத்தப்படாத அந்த நிதி என்னவாயிற்று? என்கிற கேள்விக்கு அப்போதே ஊடகங்களில் பெரிய செய்திகளாக வெளிவந்தன.
மீதப்பணம் எங்கே போயிற்று? அந்தப் பணம் மீண்டும் அரசாங்க கரூவுலத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாயின. அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்தப் பணம் பிரதமர் நஜிப் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
பிரதமர் நஜிப்பிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் அவர் சொந்த செலவுகளுக்காக என்று அப்போதே செய்திகள் அமர்க்களப்பட்டன! அப்போது ம.இ.கா.வினர் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், மித்ரா பணத்தை முழுமையாகப்பயன்படுத்தாமல், பிரதமரின் 'பாக்கெட் மணி'க்காக சில கோடிகளை அவருக்கு ஒதுக்கினர்! இந்த நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால் இன்னும் அதிகமாகவே மித்ரா அமைப்புக்கு உதவியாக இருந்திருப்பார் என நம்பலாம்!
இந்த நிலையில் இன்றைய பிரதமர் அந்த 'பாக்கெட் மணி' எதுவும் இல்லாமல் கொடுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற நிலை இருந்ததால் இந்த ஆண்டு அந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். இது தான் முதல் ஆண்டு. இரண்டாம் ஆண்டு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே அடுத்த ஆண்டும் அதே நூறு மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.
வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். இப்போது உள்ள நிர்வாகத் திறன் எப்படி உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொண்டு பின்னர் அது பற்றி, கூடுதல் நிதி பற்றி, யோசிக்கலாம்.
இந்தியர்கள் இப்போது விழிப்புணர்வோடு இருக்கின்றனர். ஆனால் நமது தலைவர்கள் அதைவிட 'வல்லவர்களாக' இருக்கின்றனர். எதையும் யோசித்துத்தான் செய்ய வேண்டி உள்ளது!
No comments:
Post a Comment