Monday 9 October 2023

பொறுப்பு துறப்பா?


பள்ளிகளில் மாணவரிடையே நடைபெறும்  சண்டை சச்சரவுகளுக்கு அந்த பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும். அது வன்முறை என்றால்  காவல்துறை  தான் அதற்கான பொறுப்பு. ஆனால் இரு சாராரும் அது பற்றி கவலைப்படாமல் எந்த பொறுப்பையும் ஏற்காவிட்டால்  எங்கே யாரிடம் போவது? இதற்கு வேறு வழிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. 

பொதுவாக இந்திய மாணவர்கள்   பிரச்சனை என்றாலே  அதனை அலட்சியம் செய்யும் போக்கு எல்லாத் தரப்பினரிடமும் உண்டு.  அதனால் தானோ என்னவோ இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றாலே  அதற்குத் தனி அமைச்சர் வேண்டும் என்கிற கோரிக்கை  இந்தியர் தரப்பிடமிருந்து எழுந்து கொண்டிருக்கிறது!  காவல்துறை, கல்வி அமைச்சு - இவர்களுடைய பொறுப்பு என்ன என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியவில்லை!

நமக்குத் தெரிந்ததெல்லாம் இங்கேயும் இன, மத வேறுபாடுகள் தான் காரணமோ  என்று ஐயுற வேண்டியுள்ளது. இந்திய மாணவர்களிடையே  அடிதடி என்றால் அதன் அணுகுமுறை  வேறு, மலாய் - இந்திய மாணவர் என்றால் அதன் அணுகுமுறை வேறு மாதிரி ,  இந்திய மாணவர்கள் என்றால் அது குண்டர் கும்பல் என்று முத்திரையிடுவது இப்படி எந்த எந்த வகையிலோ பிரச்சனை வேறுபடுகிறது.

இந்த அணுகுமுறை எல்லாம் மாணவர்களுக்கோ எதிர்கால மாணவ சமுதாயத்திற்கோ  எந்த வகையிலும்  நல்லது செய்யப்போவதில்லை.  நாம் வெவ்வேறு உலகத்திலோ, வெவ்வேறு நாட்டிலோ இல்லை. வருங்காலங்களில் இங்கு, இந்த நாட்டில் தான்,  ஒன்று கூடி வாழ வேண்டும்.

இந்த இரண்டு துறைகளுமே - கல்வி அமைச்சு, காவல் துறை -  மலேசிய இளைஞரிடையே  ஒற்றுமையைத் தான் கொண்டு வர வேண்டுமே தவிர வேறுபாடுகளை அல்ல. பள்ளிகள் வேற்றுமையை வளர்க்கும்  இடமல்ல.  ஆனால் அதனைத்தான் இது போன்ற செயல்கள் நமக்குச் சுட்டுகின்றன.

நாம் சொல்ல வருவதெல்லாம் பள்ளிகள் இன்னும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். 'பள்ளிக்கு வெளியே'  என்றெல்லாம் காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது.  அப்படியே அது 'பள்ளிக்கு வேளியே' என்றால் அதனை காவல்துறையிடம் பிரச்சனையை விட்டுவிட வேண்டும். 

நல்லதொரு அணுகுமுறையை நாமும் எதிர்பார்க்கிறோம்!

No comments:

Post a Comment